Monday, 16 December 2019

பொறாமை என்னும் பாவம் ...

பொறாமை என்னும் பாவம் ...

முனைவர் ம.திருமலை,

முன்னாள் துணைவேந்தர்,

தமிழ்ப்பல்கலைக்கழகம்.

ச மூகத்தின் பார்வையில் மிக உயர்வான இடத்தில் அல்லது அடித்தளத்தில் என்று எந்த நிலையில் வாழ்பவராக இருந்தாலும் அவரவருக்கென்று தனித்தனி இயல்புகள் இருப்பது கண்கூடு. ஆனால் எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் பண்பு ஒன்றுண்டு. அதுதான் பொறாமை என்னும் நெருப்பு! தன்னிடம் பல்வேறு செல்வங்கள் இருந்தபோதிலும் தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவரிடம் இருந்துவிட்டால், அவ்வளவுதான்! எத்தனை பெரிய மனிதனுக்கும் பொறாமைப் பேய் பிடித்து ஆட்டிவிடும். நெருப்புச்சுடர்கள் தண்ணீர் ஊற்றினால் அணைந்து விடும். ஆனால் பொறாமை நெருப்பை மட்டும் எதனாலும் அணைக்க முடியாது.

பொறாமையின் அடிப்படை என்னவென்றால் அது நம் மனத்தின் ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நாம் பகுத்தறிவு உடையவர்கள் என்பது உண்மையென்றால் நமது மனத்தின் ஆழத்தில் குடி கொண்டிருக்கிற பொறாமைப் பேயைக் கையும், களவுமாக பிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் ஒருவராலும் அதைச் செய்ய இயலாது என்பதுதான் நடைமுறையில் நாம் காணும் உண்மை. பொறாமையைக் கண்டறிந்து நீக்குவதை விட பொறாமையே இல்லாமல் வாழ்வதுதான் சிறப்பு என்று கருதிய வள்ளுவர்,

“ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு” என்று தெளிவாக கூறினார்.

ஒரு பெரும் கல்வி நிறுவனத்தின் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தபோது காலம் சென்ற ஒரு பேராசிரியரின் பரந்த மனப்பான்மை குறித்து நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்பெரியவர், “என்னிடம் அந்த பெருந்தன்மை இல்லையா?” என்று கேட்டார். வயதில் மிக மூத்த அவரிடம் அந்த கேலியை நான் எதிர்பார்க்கவில்லை. இவையெல்லாமே சிறு அளவிலான பொறாமையின் வெளிப்பாடுதான் என்று நான் புரிந்துகொண்டேன். வீட்டில் ஏதாவது புதிதாக வாங்கி வைத்தால் அதை பார்த்தவுடன் எவரும் பாராட்டிவிடமாட்டார்கள். தங்கள் வீட்டில் வாங்கியுள்ள இதைப்போன்ற ஒரு பொருளைப் பற்றித்தான் பேசுவார்கள்; அது அவர்களுக்கே தெரியாமல் உரையாடலில் வெளிப்படும் பொறாமை உணர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொறாமை உணர்வு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொறாமை குறித்து வள்ளுவர் மிக கடுமையாக கூறுகிறார். பொறாமையை ஒரு உயிர்ப்பொருளாக உருவகம் செய்து “பாவி” என்று வசை பாடுகிறார். அக்குறட்பா

“அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத்

தீயுழி உய்த்து விடும்”

என்று கூறுகிறார். பொறாமை கொண்ட ஒருவன் மற்றவர்களுக்கு தீமை செய்து அழிப்பது மட்டுமல்ல; அப்பொறாமையால் தானும் அழிந்துபோகிறான் என்பது வள்ளுவர் எடுத்துக்காட்டும் நுட்பமான செய்தி.

பிரபல உளவியலறிஞர் ஹேவ்லக் எல்லிஸ் என்பார் “பொறாமை என்பது சிறகுகள் உள்ள ஒரு நாகம் (டிராகன்); அது அன்பைப் பாதுகாப்பது போல பாசாங்கு செய்து கொண்டே அதனை அழித்துவிடக்கூடியது” என்று குறிப்பிடுகிறார். இது மிகவும் உண்மையான கருத்துதான்! ஏனென்றால் நம்மை அறியாதவர்களை விட நெருங்கிய நண்பர்களே நம் மீது மிகுதியாக பொறாமைப்படுவதை கண்கூடாக காணலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான கிறிஸ்டைன் ஹாரிஸ் என்பவர், “சந்தேகத்திற்கு இடமில்லாமல் பொறாமை ஒருவரின் தனிப்பட்ட துயரங்களின் ஊற்றுக்கண் தான். அது சமுதாய நிலையிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது” என்று கூறுகிறார். தன் நண்பன் தன்னை விட சிறப்பாக பணியாற்றி பிறரை கவர்ந்து விடுவான் என்று தோன்றும்போதே ஒருவனுக்கு பொறாமை தோன்றி விடுகிறது. அச்சம், பாதுகாப்பற்றவனாக தன்னை உணர்தல் ஆகிய காரணங்களால்தான் ஒருவன் மனதில் பொறாமை எண்ணம் தோன்றுகிறது என்று கிறிஸ்டைன் ஹாரிஸ் நீண்ட கால ஆய்வுக்கு பின் கூறுகிறார். பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தில் இயாகோ என்பவன் ஒத்தெல்லோவின் பெருமைகளைப் பொறுக்கமாட்டாமல் சதிசெய்கிறான். ஒத்தெல்லோவின் மனைவி டெஸ்டிமொனாவின் கற்பினை குறித்து அவதூறு பரப்புகிறான். ஒத்தெல்லோ தன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்கிறான். ஷேக்ஸ்பியர் பொறாமையை “பச்சைப் பிசாசு” என்று குறிப்பிடுகிறார். இயாகோ என்ற தனிமனிதனின் பொறாமை ஒரு மாபெரும் வீரனையும் உலகின் தலைசிறந்த அழகியையும் அழித்துவிட்டது மாபெரும் சோகம்தான்!

குழந்தைகளின் வளர்ப்பு முறையில் ஏற்படும் குறைகளும் கூட பொறாமை உணர்வு முளைவிடுவதற்கு காரணமாகின்றன என்று பவுல் பை என்ற இன்னொரு அமெரிக்க உளவியல் வல்லுனர் 1960-ல் வெளியிட்ட ஆய்வில் கூறுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் எல்லாக் குழந்தைகளையும் சமமாக கவனித்து வளர்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் பெற்றோரின் முழு கவனிப்பும் கிடைக்காமல் ஏமாற்றமடையும் குழந்தைகள் தாங்களே எல்லாவற்றையும் செய்து கொள்ளத் தலைப்படுவார்கள். இக்குழந்தைகள் பிற்காலத்தில் எவரையும் எண்ணிப்பார்க்காமல் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

அமெரிக்காவின் உளவியல் ஆய்வாளர்களுள் ஒருவரான ஷார்ப் ஸிடீன் என்பவர் பொறாமை உணர்வானது அச்சம், கோபம், கவலை ஆகிய உணர்வுகளின் கலவையாக வெளிப்படுகிறது என்ற ஆய்வு முடிவை 1991-ல் வெளியிட்டார். உலகின் முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளின் குழந்தைகளிடையே நடைபெற்ற தகராறு நமக்கு இதை எடுத்துக்காட்டுகிறது.

மகாபாரதத்தில் பாண்டவர் கவுரவர் போராட்டத்தின் தொடக்கமே துரியோதனனின் பொறாமை உணர்வில் தான் அடங்கியிருக்கிறது. மிக இளம் வயதிலேயே பீமன் வீரவிளையாட்டுகளிலும், உடல் திறனிலும் மேம்பட்டு விளங்கியதால் துரியோதனனின் மனம் பொறாமை உணர்வில் கொதிக்கிறது. துரியோதனன் தான் மாமன் சகுனியிடம்

“பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் எந்தன் மாமனே

தீச்செயல் நற்செயல் எதேனினும் ஒன்று செய்து நாம் அவர்

செல்வம் கவர்ந்து அவரைவிட வேண்டும் தெருவிலே”

என்று புலம்புகிறான். அஸ்தினாபுரத்தின் இளவரசனாக இருந்தும் துரியோதனனால் நிறைவான வாழ்க்கை வாழ முடியவில்லை. பொறாமை உணர்வின் காரணமாக அவன் பீமனின் கையால் உயிரை இழக்கிறான். ஒருவனின் பொறாமை அவனையே அழித்துவிடும் என்பதற்கு துரியோதனன் தகுந்த சான்று! இது குறித்து வள்ளுவர் ,

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது”

என்று கூறி பொறாமையின் விளைவுகளை விளக்குகிறார். புதிய அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்களுக்கு நிகராக தமிழரின் சிந்தனை மரபு திகழ்கிறது.

No comments:

Popular Posts