Tuesday 31 December 2019

உறுதிகளுடன் பிறக்கட்டும் புத்தாண்டு!

உறுதிகளுடன் பிறக்கட்டும் புத்தாண்டு! By ஆர்.வேல்முருகன்  |   |ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதி எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், எத்தனை பேர் அந்த உறுதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம்.

புத்தாண்டு தொடக்கத்தின்போதும் பலர் குறிப்பிட்ட கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் அதிகாலையில் கோயில்களுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது சில விஷயங்களை தெய்வத்திடம் வேண்டுகோளாக வைத்து வந்திருப்பார்கள்.

வேலைக்குச் செல்வோராக இருந்தால் பதவி உயர்வு, அதிகபட்ச ஊதிய உயர்வு ஆகியவற்றுக்காக வேண்டியிருப்பார்கள்.  அரசு ஊழியராக இருந்தால் பணிக்குச் சேர்ந்த ஆண்டு மட்டுமே பிரதானம்.  பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழக்கம்போல வந்துவிடும்.  ஆனால், தனியார் நிறுவனங்களில் அப்படியில்லை. உழைப்புக்கும் நீங்கள் நிறுவனத்துக்காகச் செலவிடும் நேரத்தையும் கணக்கில் வைத்துத்தான் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். ஆனால், இதற்காக நிறைய சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்; அதாவது, பெரும்பாலோர்  தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடாமல் உழைப்பார்கள்.

புத்தாண்டிலிருந்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட உறுதிமொழி எடுங்கள். தந்தையும் தாயும் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுவதால், குழந்தைகள் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பது முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரத்தைச் செலவிடுவது மிகவும் முக்கியம்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. அதனால், ஒரு குழந்தையின் பெற்றோர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அவர்களின் குடும்பத்தினர் எனக் குடும்பமே கலகலவென்று இருக்கும்.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அனைவரும் ஒன்று கூடி இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் நெஞ்சை விட்டு அகலாத நினைவுகளும் எப்போதும் மறக்க முடியாது. இதேபோல ஒவ்வொரு விடுமுறைக்கும் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்பதை இப்போது மீண்டும் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் இருக்கும் மனவேறுபாடுகளைக் களைந்து இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாவது இணைந்து தொடரலாம்.
இன்றைய கணினி உலகில் மகிழ்ச்சிக்காக அவசர ஓட்டத்தை அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அடுத்தவர்களுக்கு எப்படி உதவுவது என்பது நம் அனைவருக்குள்ளும்  எழும் கேள்வி.

பெரும்பாலான விபத்துகளில் "கோல்டன் ஹவர்' எனப்படும் உயிரைக் காப்பாற்றும் நேரத்தில்கூட, நமக்கெதற்கு இந்தப் பிரச்னை என்று அனைவரும் ஒதுங்கி விடுகின்றனர். இதனால்தான் ஈடுசெய்ய முடியாத மனித உயிர், பல நேரங்களில் பிரிந்து விடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, உதவி செய்வதை இந்த ஆண்டு முதல் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.
தற்போது பெரும்பாலான இளைஞர்கள் புகைப் பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். புகைப் பிடித்தால் புற்றுநோய் வரும் என்று தெரிந்தும் பழக்கத்தைவிட யாரும் விரும்புவதில்லை.  ஒவ்வொரு புத்தாண்டின்போதும் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பலர் நினைத்தாலும் முடிவதில்லை என்பது எதார்த்தம். அதே போன்றதுதான் மதுப் பழக்கமும்.

புகைப்பதாலும், குடிப்பதாலும் உடல் நலத்துக்குக் கேடு என்பதுடன், உழைக்கும் பணம் விரயமாவதை உணருங்கள்.  உடல் நலம் கெட்டு, குடும்ப நிம்மதியும் புதைகுழிக்குப் போய் அனைவரும் வெறுக்கும் இந்தப் பழக்கத்துக்கு நிரந்தர விடை கொடுக்கும் வகையில் மன உறுதியைக் கொண்டு, அதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்; உங்கள் மீது பிறருக்குள்ள மரியாதை சிகரம் தொடும்; மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

பொதுவாகவே நமது நாக்கு என்பது மிகவும் முக்கியமானது. எத்தகைய நண்பனாக இருந்தாலும் அவர்களை நொடிப் பொழுதில் எதிரியாக்கும் வல்லமை படைத்தது நாக்கு.  இந்தப் புத்தாண்டு முதல் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல், இனிமையாக மட்டுமே பேசுவோம்.

இன்றைய பெண்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர். குடும்பத்தினரின் விருப்பத்தை விட, குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதைவிட அவர்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அதிகம்.  தொலைக்காட்சி தொடர்களை கடமையாகப் பார்க்காமல் பொழுதுபோக்காகக் கருதும் மனப் பாங்கு அவசியம். முக்கியமான பணிகள் இருக்கும்போது தொலைக்காட்சி தொடர்களைப் புறக்கணியுங்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வாங்கி வீண் செலவைக் கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருள்கள் வாங்கி பண விரயம் செய்யப் போவதில்லை என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமானது தன்னம்பிக்கை; தன்னம்பிக்கை உள்ளோர்தான் வாழ்க்கையில் சாதித்துள்ளனர் என்பதை நம்பத் தொடங்குங்கள். ஆக்கச் சிந்தனையைக் கடைப்பிடித்து, புத்தாண்டு முதல் எதிர்மறைச் சிந்தனையை விட்டொழியுங்கள். நல்ல புத்தங்களைப் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதும் சிறந்தது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் என்பது மிகவும் முக்கியம். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு உடல் நலத்தைத் தொடர்ந்து பேணுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நினைவில் கொண்டு புத்தாண்டில் (2020) அடியெடுத்து வைப்போம்.

No comments:

Popular Posts