Tuesday 10 December 2019

பாதுகாப்பு நம் கையில்

பாதுகாப்பு நம் கையில்

சதீஷ்குமார் டோக்ரா, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை இயக்குனர்(ஓய்வு).

டெ ல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ்மண்டி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர்.

நம் நாட்டில் சிலநேரம் ஒரு காட்சியை காணலாம். ஒரு ரெயில் பெட்டியில் எள் விழுந்தால் எண்ணெய் ஆகிற அளவுக்கு மக்கள் கூட்டமாக ஏறியிருப்பார்கள். ஏதோ ஒரு கொக்கியில் காலை மாட்டிக்கொண்டு தொங்கி கொண்டிருப்பார்கள். எப்படியாவது பெட்டியுடன் பயணம் செய்வதைவிட வேறு வழி இல்லை என்ற நிலையில் பயணிக்கிறார்கள். அதே நிலையில் தான் இன்று நம் நகரங்களும் இருக்கின்றன. நிரந்தரமாக பெருகும் நமது மக்கள் தொகையில் ஏராளமான மக்கள் வாழ்வாதார வழிகளைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்து, அங்கே தங்க இடமே இல்லையென்றாலும் ஏதோ ஒரு கொக்கியில் காலை மாட்டிக்கொண்டு தொங்குகிறார்கள், ஆனால் வெளியேற மாட்டார்கள்.

இதன் விளைவாக ஒரு மனிதனுக்கு பாதுகாப்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழ குறைந்தபட்சம் எந்த அளவு இடம் தேவையோ, அதுவும் இருப்பதில்லை. இடமின்மை காரணமாக நகரங்கள் தீ விபத்துகள், கட்டிடம் விழுதல் போன்ற அபாயகரமான நிகழ்வுகள் ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற கூடாரங்களாக மாறுகின்றன.

டெல்லியில் நிகழ்ந்த ஒவ்வொரு சோக சம்பவமும் அதிர்ச்சி மற்றும் திகில் அலைகளை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனாலும், காலப்போக்கில், இடப்பற்றாக்குறை பாதுகாப்பு தேவைகளின் முதன்மையை மீண்டும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது.

தமிழ்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் இயக்குனராக நான் பணிபுரிந்த இரண்டரை ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் வாசகர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். நான் பணியில் இருந்த போது தீ விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் ஒரு வளாகத்தின் உரிமையாளரிடம் பாதுகாப்பு அதிகரிக்க சில ஆலோசனைகள் சொன்னால், அவர் சிலசமயம், “சார், நாங்கள் நூறு வருடங்களாக இதே தொழில் செய்கிறோம். இதுவரை எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று வாதாடுவார்.

இதுவரை விபத்துகள் நடக்காமல் இருந்தது இனிமேலும் நடக்காது என்பதற்கு எந்த விதத்திலும் உறுதி அல்ல. எனவே, நீங்கள் ஒரு கடை அல்லது ஓட்டல் அல்லது தொழிற்சாலை அல்லது வேறு ஏதேனும் வளாகத்தை நடத்துகிறீர்கள் என்றால் அந்த வளாகத்தில் தீ விபத்துக்கான வாய்ப்புகளை அளவிட்டு வளாகத்தின் தன்மையைப் பற்றி மதிப்பீடு செய்து தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஒரு நிபுணரின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். பல திறமையான ஓய்வுபெற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளனர், அவர்கள் ஒரு சிறிய தொகைக்கு உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள்.

ஒரு சமூகமாக நாம் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது மற்றும் விபத்து நடந்தால் எவ்வாறு பாதுகாப்பாக தப்பிப்பது என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டும். 2004-ம் ஆண்டில் கும்பகோணத்தில் நடந்த பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிருடன் எரிந்தனர். தீ விபத்துக்கு காரணம், கூரையின் மேல் தொங்கும் கீற்று மதிய உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெருப்பு இடத்திற்கு மிக அருகில் இருந்தது. லேசான தென்றல்கூட தொங்கும் கீற்றை நெருப்புடன் சேர்த்துவிடும் என்பதை பள்ளிக்கூடத்தில் யாரும் கவனிக்கவில்லை என்பது வியப்பளிக்கிறது. இவ்வாறு, மக்களின் பாதுகாப்பு நோக்குநிலையை மேம்படுத்துவதன் மூலம் பல தீ விபத்துகளைத் தடுக்கலாம். ஒரு நிகழ்ச்சிக்கு போகும்போதோ, ஒரு ஓட்டலில் தங்கும்போதோ சரியாக மூடப்படாத மின்கம்பிகள், ஏற்ற இறக்கமான மின்னோட்டம், எரியக்கூடிய பொருள் நெருப்பு மூலத்திற்கு நெருக்கமாக இருப்பது போன்றவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அதையே நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

தீத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் பணம் காப்பீட்டு பிரீமியம் போன்றது. நாங்கள் பல ஆண்டுகளாக பிரீமியத்தை செலுத்துகிறோம், எதுவும் நடப்பதில்லை. எனவே, ஒருபோதும் நடக்காத ஒரு விஷயத்திற்காகவே பணத்தை வீணடிக்கிறோம் என்று உணரத் தொடங்குகிறோம். பாதுகாப்பு முறைகளிலும் இதே நிலை தான். ஆரம்பத்தில் பாதுகாப்பை மேம்படுத்த உபகரணங்களை வாங்குகிறோம். வருடா வருடம் அவற்றை பராமரிக்கவும், நவீனமாக்கவும் செலவு செய்கிறோம். ஆனால், ஆண்டுகள் ஆக, ஆக ஆர்வம் குறைகிறது. எந்த விபத்தும் எதுவும் நடக்காத நிலையில் வீண் செலவு செய்கிறோம் என்ற எண்ணங்கள் தாக்குகின்றன. தடுப்பு நடவடிக்கைகளை குறைக்க ஆரம்பிக்கிறோம். அந்த நேரம் விபத்து நடக்கிறது.

இந்த ஆண்டு மே மாதம், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்தனர். தீ ஒரு குறுகிய இடத்தில் தொடங்கியது. அங்கு மின்னோட்டத்தை துண்டிக்க சாதனம் இல்லை. இதற்கு காரணம் அலட்சியம். இந்த துயர சம்பவத்துக்கு பிறகு குஜராத் அரசாங்க அதிகாரிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரிய வந்தது.

அதிக செலவு செய்யாமலேயே நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும். இதற்காக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம். தீ எவ்வாறு தொடங்குகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கும்பகோணம் பள்ளியில், ஆசிரியர்கள் அனைத்து வகுப்பு கதவுகளையும் பூட்டியிருந்தனர். ஒரே ஒரு குறுகிய பாதை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குழந்தைகள் அனுமதியில்லாமல் பள்ளியை விட்டு போய்விடக்கூடாது என்பதை உறுதிபடுத்துவதற்காகவே இது வழக்கமான நடைமுறையாகவே இருந்தது. தீப்பற்றிய பிறகு யாருக்கு என்ன செய்வது என்று தெரியாததால் குழப்பம் ஏற்பட்டது. ஆசிரியைகள் என்றைக்காவது தீ விபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்த்திருந்தால், அவர்கள் முன்னமே இப்படிப்பட்ட நிலையில் மாணவர்கள் தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டிருப்பார்கள்.

பல மாடி கட்டிடத்தில் அல்லது பிற வளாகத்தில் எரியாத மற்றும் புகை பிடிக்காத பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தீ விபத்தின் போது, இறப்புகளைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். நெருப்பை விட புகை தான் மரணத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புகை பார்வையை மழுங்கடிக்கிறது மற்றும் வெளியேறும் வழியைக் காண அனுமதிக்காது. மேலும், புகை மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மூச்சுத்திணறல் நபர்களின் மரணத்திற்கு காரணமாகிறது. எனவே, ஒரு வீடு அல்லது பிற வளாகங்களை நிர்மாணிக்கும்போது, எரியாத மற்றும் புகை உற்பத்தி செய்யாத பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

No comments:

Popular Posts