Thursday 31 October 2019

பாரம்பரிய கலாசாரமும், ஒன்றுபட்ட இந்தியாவும்

இன்று (அக்டோபர் 31-ந் தேதி) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்.

இந்தியாவின் மண்ணும், காற்றும் சிறப்புமிக்கவை. இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்தாலும் அது முடியாது. இந்தியாவின் மண்ணில் அன்பு நிறைந்திருக்கிறது. காற்றில் உரிமை நிறைந்திருக்கிறது. மொழி, உணவு, சமையல் முறைகள், ஆடை, கலாசாரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும் இங்குள்ள மக்களின் மனது ‘இந்தியராக’ இருப்பதால் மக்கள் அனைவரும் எப்போதும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

நாட்டில் மதங்கள், சாதி, இனங்களில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையை மனதில் கொண்டு ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அறிவித்தார். தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அந்த நாளில் பிரதமர் அந்த அறிவிப்பைச் செய்தார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கலாசாரங்களை ஒவ்வொரு மாநிலமும் அறிந்து கொள்ளவும், மக்களிடையே உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டும் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

நல்ல நெறிகளின் தன்மையைப் பொறுத்து தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அமையும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியுள்ளார். நன்னெறிகள் வளர்வதற்கு, அதற்கான விதைகளை குழந்தைகளின் மனதில் ஊன்றுவது அவசியம். பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை அறிவதில், குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுவதன் மூலம் அவற்றைப் புரிந்து கொண்டு, மரியாதை அளிக்கும் தன்மை வளரும். இதை மனதில் கொண்டுதான் ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ இயக்கம் உருவாக்கப்பட்டது.

அன்பு மட்டும் தான் இணைப்பை ஏற்படுத்த சிறந்த வழி என்றும், மற்றவர்களைப் பற்றி நெருக்கமாக புரிந்துகொள்வதற்கு அது அவசியம் என்றும், நாட்டை நிர்மாணித்த இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தில் மற்ற மாநிலங்களைப் பற்றி இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்காக, சுற்றுலாத் துறையின் ‘பாரத் பரி மற்றும் பர்யத்தன் பரி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் விவகாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் மாநிலங்களுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம், அடுத்த மாநிலத்தைப் பார்வையிட்டு, புரிந்து கொண்டு, அங்கு நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டில் குறைந்தது 15 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகை அறிந்து, புரிந்து கொள்ள ஒவ்வொரு தனிநபரும் ஆர்வம் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டத்தில், தங்கள் நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, சுற்றுலா நிகழ்ச்சிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாநிலங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், பாரம்பரிய கலாசாரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் தமிழகம்-ஜம்மு காஷ்மீர் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வி அல்லது வேலைக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதனால் மற்ற மாநிலங்களின் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாட ஆர்வம் ஏற்படுகிறது. மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை, டெல்லியில் கொண்டாடப்படுகிறது.

அதேபோல மராட்டியத்தின் விநாயகர் பூஜை உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ திட்டத்தின் மூலம், இந்த முயற்சியை சிறப்பானதாக ஆக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார். கலாசார அமைச்சகம், குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் நாட்டில் பல இடங்களில் பிரமாண்டமான தேசிய கலாசார திருவிழாக்களை நடத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்த செவ்வியல் மற்றும் தற்கால இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், அரங்க மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடியை தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறை அளித்துள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் அவர்களுக்கு 20 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.

சில நேரங்களில் வெறும் எண்ண வெளிப்பாடுகள் மட்டுமே வார்த்தைகள் ஏதும் இல்லாமல் நிலைமையைப் புரிய வைத்துவிடும். சிக்கலான நிலைகளையும் சரியான வார்த்தைகள் தீர்த்து வைத்துவிடும். அதுதான் இந்தியாவின் சிறப்பு. இங்கே பேசப்படும் மொழிகளைவிட உணவின் ருசி, அவற்றின் வகைகள் நாவுக்கு விருந்து படைப்பவையாக உள்ளன. ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம் திட்டம் மூலம் இந்த ருசி மேன்மைப்படுத்தப்படுகிறது. அதனால் தான் டெல்லியில் தென்னிந்திய உணவுகளுக்கு வரவேற்பு இருக்கிறது. வட இந்திய உணவை விரும்புபவர்களை தென்னிந்தியாவில் அதிகம் காண முடிவதற்கும் இது தான் காரணம். பல்வேறு மாநிலங்களில் உணவுத் திருவிழா நடத்துவதன் மூலம் ருசி, மணங்களை தொடர்புபடுத்துவதன் மூலம் இதயங்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஏ.மாரியப்பன்,
கூடுதல் தலைமை இயக்குனர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை.

No comments:

Popular Posts