Sunday, 8 September 2019

வெற்றியின் ரகசியம்...!

வெற்றியின் ரகசியம்...!

முனைவர் சேயோன், முன்னாள் இயக்குனர், சென்னை வானொலி நிலையம்.

“நமக்கு வாய்த்த ஆசிரியர்களில் பெரும் பேராசிரியர் யார் என்று கேட்டால் நான் எறும்பைத்தான் காட்டுவேன்” இது மேனாட்டு அறிஞர் பெஞ்சமின் பிராங்களின் கருத்து.

ஆம்! சுறுசுறுப்பின் சின்னம் எறும்பு! அது வரிசை வரிசையாக வேகமாகச் செல்வதைப் பார்த்திருக்கலாம். வேகமாகச் சென்றாலும் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொள்ளாமல் செல்வது வியப்பிற்குரியதே! ஒரு சிறிய எறும்பு தன் எடையைக் காட்டிலும் பன்மடங்கு எடை கொண்ட இனிப்பை எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் தனியாக அல்ல. தன் இனத்தைச் சேர்ந்த மற்ற எறும்புகளுடன் கூடி. வரப்போகும் மழைக் காலத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு சுறுசுறுப்புடன் உரிய உணவுப் பொருட்களைக் காலத்தோடு சேர்த்துச் சேமித்து வைத்து மழைக் காலத்திலும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது.

எறும்பினை அழிக்கும் மருந்துப் பொடியைத் தூவினாலும் அந்த வலையில் வீழ்ந்து அழிந்து போகாமல் வேறு இடத்திற்குச் சென்று தம் இனம் அழியாமல் காத்துக் கொள்கிறது. இப்படி ஒன்றும் பேசாமலேயே சுறுசுறுப்புடன் ஓடி ஓடி உணவுப் பொருட்களைச் சேமித்து உண்டு, மகிழ்ந்து உயிர் வாழும் ஓரறிவு உயிரான எறும்பு ஆறறிவு படைத்த மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் சுறுசுறுப்பு, உழைப்பு, சேமிப்பு, ஒற்றுமை!

வட தென் துருவங்களில் வாழும் டெர்ன் என்னும் ஒருவகைப் பறவைகள், ஒரு துருவப் பகுதியின் கோடை முடிந்து, பனி வந்ததும் மறு துருவம் நோக்கி வானில் பறந்து கொண்டே இருக்குமாம். ஓர் ஆண்டில் ஒவ்வொரு துருவத்திலும் இரண்டு மாதங்களே தங்கும். அவை தம் வாழ்நாளில் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வானவெளியில் ஊண், உறக்கமின்றி, ஓயாமல் பறந்து கொண்டே இருக்கும் என்றால் ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும் ஓய்ந்து உறங்கிப் போய் வறுமையில் வாடுகிறானே ஏன்?

ஒரு வேடிக்கையான பஞ்சாப் கதை ஒன்று உண்டு. அமர்சிங் என்ற விவசாயிக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. அவர் கடுமையான, சுறுசுறுப்பான உழைப்பாளியாக இருந்தாலும் அவரின் மூன்று மகன்களும் சோம்பேறிகளாக விளங்கினர். தமக்குச் சொந்தமான நிலத்தின் வேளாண்மையைக் கவனிக்காமல் வீணாக வெளியே சுற்றிப் பொழுதைப் போக்கினர். எத்தனையோ முறை புத்தி புகட்டினாலும் அவர்கள் திருந்தாமல் இருந்ததைக் கண்டு வேதனைப்பட்டார் அமர்சிங். அவர்களுக்கு எப்படியேனும் விடாமல் புத்தி புகட்டி அவர்களையும் தம்மைப் போல் உழைப்பாளிகளாக்க உறுதி கொண்டார். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து மரணப்படுக்கையில் உயிரோடு போராடிக் கொண்டிருந்தபோது மூன்று பிள்ளைகளும் தந்தையின் உயிரைக் காப்பதற்கு அவர் அருகிலிருந்து கவனித்தனர். அப்போது அமர்சிங் தம் பிள்ளைகளிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன் என்றார். மூவரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டனர்.

நான் இதுவரை சம்பாதித்த ஒரு லட்சம் தொகையை வெள்ளிக் காசாகச் சேமித்தேன். வீட்டில் வைத்தால் எங்கே திருடர்கள் திருடி விடுவார்களோ! என்று பயந்து நம் மூன்று ஏக்கர் வயலில் அங்கும் இங்கும் பிரித்துப் புதைத்து வைத்து விட்டேன். எப்படியும் அந்தப் பணம் நம் குடும்பத்திற்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தடியில்தான் உள்ளது. என் மரணத்திற்குப் பிறகு நீங்கள் நம் நிலத்தைத் தோண்டிப் பார்த்தால் உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும் என்று கூறி உயிர் விட்டார் அமர்சிங்.

மூன்று மகன்களும் தந்தையின் அடக்கம் முடிந்த கையோடு எப்படியும் வெள்ளிக் காசுகளைக் கண்டு பிடிக்கத் தம் வயலுக்குப் படை எடுத்தனர். மண் வெட்டியால் வெட்டினார்கள். கலப்பையால் உழுதார்கள். ஆனால் வெள்ளிக் காசுகள் மட்டும் தென்படவில்லை. பருவ மழை வந்தது. உழுததை உழுது விட்டோம். விதையும் தெளிப்போமே என்று விதைகளைத் தூவி விவசாயம் செய்தனர். அமோக விளைச்சல் ஆனது. அதன் மூலம் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் பல்லாயிரம் ரூபாய்க்கான அறுவடை கிடைத்தது. தந்தை சொன்ன வெள்ளிக் காசுகள் கிடைக்கவில்லை. ஆனால் அதைக் காட்டிலும் பெருந்தொகை கிடைத்ததை நினைத்து மூன்று மகன்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தந்தை அமர்சிங் தங்களை உழைக்க வைப்பதற்குச் செய்த தந்திரத்தை, யுக்தியை எண்ணி வியந்தனர். அவரது அனுபவம், உழைப்பு, உத்வேகம் உணர்ந்து தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறினர்.

மாதம் முழுவதும் ஐம்பது ரூபாய்ச் சம்பளமே பெற்று வந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன்தான் எம்.எஸ்.ஓபராய். இன்று உலகம் முழுவதும் அவர் பெயரில் கோடிக்கணக்கான சொத்துடைய ஓட்டல்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? ஓயாத உழைப்பும், தீராத வேட்கையும், தளராத செயல் திட்டமும் அவரை இந்த அளவிற்கு உயர்த்திச் சிகரத்தை எட்டிய சீமானாக, உழைப்பால் உயர்ந்த உத்தமனாக விளங்கினார். 103 வயது வரை வாழ்ந்தார். அவர் தனது வெற்றிக்கும் நூறாண்டுகளைத் தாண்டி வாழ்ந்ததற்குமான ரகசியத்தை ஒரே வரியில் சொல்லியுள்ளார். “நான் தேனி போல சுறுசுறுப்பாக உழைத்ததுதான் என் ஆயுள் நீட்டிப்பிற்குக் காரணம்“ இவரைப்போல் உழைப்பால் உயர்ந்தோங்கிய உத்தமர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

மிகுந்த சுறுசுறுப்பும், அயராத உழைப்பும், தீராத வேட்கையும், தெளிவான செயல் திட்டங்களும் வெற்றிக்கு வித்தாக விளங்குகின்றன என அறியலாம். எனவே ஒரு தொழிலைத் தொடங்கும்போது பல்வேறு தொல்லைகளும், பிரச்சினைகளும் தடைகளும் தொடர்ந்து வந்தாலும், அவற்றைக் கண்டு மனம் கலங்காது, மதி மயங்காது, துணிவோடும், தெளிவோடும், உள்ள உறுதியுடன் தொடர்ந்து உழைத்தால் தடைகள் தடமாகும்; தொல்லைகள் தொலைந்து போகும்; வெற்றி மாலை நம்மைநாடித் தேடி ஓடி வரும்! அதன் விளைவாய் இன்பம் பெறுவது உறுதி!

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

இது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் அமுதமொழி!

No comments:

Popular Posts