எழுச்சி பெறுமா எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள்?

தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் உள்ள மொத்தமுள்ள 23,584 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 5,986 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 17,598 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் சில வருடங்களுக்கு முன்புவரை கொடிகட்டிப் பறந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் கல்லூரிகளில் இருந்து விடைபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான 100 சதவீத இடங்கள் அரசு இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அரசு இட ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.

டான்செட் நுழைவுத்தேர்வு

அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தகுதியுள்ள மாணவ, மாணவிகளைக் கொண்டு நிரப்பும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ‘டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம். இந்தத் தேர்வில் வெற்றி, தோல்வி கிடையாது. மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரிகளைத் தேர்வுசெய்ய முடியும்.

இதன்படி கடந்த ஜூன் 22 அன்று டான்செட் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜூலை 10 அன்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. டான்செட் மதிப்பெண் அடிப்படையில் ஆக. 12 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

5,986 பேர் சேர்க்கை

அதைத் தொடர்ந்து கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி.) எம்.சி.ஏ. படிப்புக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. 1,213 பேர் கலந்து கொண்டதில் 1,196 பேர் சேர்க்கப்பட்டனர். 17 பேர் விரும்பிய கல்லூரி களில் இடம் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். எம்.பி.ஏ. படிப்புக்கு ஆக. 21 அன்று முதல் 28 அன்றுவரை கலந்தாய்வு நடைபெற்றது. 4,790 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 4,731 பேர் விரும்பிய கல்லூரிகளைத் தேர்வுசெய்து சேர்ந்தனர். 59 பேர் விரும்பிய கல்லூரிகள் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

17,598 இடங்கள் காலி

இந்தப் படிப்புகளில் மொத்தமுள்ள 23,584 இடங்களில் 5,986 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 17, 598 இடங்கள் காலியாக உள்ளன.

ஏழை மாணவர்களும் வசதி படைத்த மாணவர்களைப் போல் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர் சேர்க்கை சரிந்து வருவது, எம்.பி.ஏ.., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பச் செய்கிறது. அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கே இந்நிலை என்றால், பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஒற்றைப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தரமான பாடத்திட்டம் தேவை

“இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.) 5-ல் இருந்து 18-ஆக அதிகரித்துவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஐ.ஐ.எம்.-களில் சேர்ந்து விடுகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் இப்படிப்பு வரவேற்பு பெறத் தொடங்கியபோது, ஏராளமான கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்புகள் தொடங்கப்பட்டன. இதேபோல் மேலாண்மைக் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் தேவை அதிகரித்தது.

சமீபகாலமாக எம்.பி.ஏ. படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதி எம்.பி.ஏ. படித்தவர்களிடம் குறைவாக இருக்கிறது. 20 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாடத்திட்டங்களை மாற்றினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை. தற்போதைய தேவைக்கு ஏற்ற வகையிலும், எம்.பி.ஏ. பட்டதாரிகளின் தகுதிகளை உயர்த்தும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையிலும், புதிய தரமான பாடத்திட்டங்களை அப்டேட் செய்து வடிவமைக்க வேண்டும்” என்கிறார் பாரதியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் ஆர்.வெங்கடபதி.

நேரடி மாணவர் சேர்க்கை

“ஐ.டி. துறை வீழ்ச்சி அடைந்துள்ள தாகத் தவறான கருத்து மாணவர்களிடையே நிலவுகிறது. இன்றளவும் மற்ற துறைகளுக்கு இணையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது இத்துறை.

மறுபக்கம், 'கிராஸ் மேஜர்' எனப்படும் இளநிலைப் பட்டப்படிப்பில் ஒரு பாடத்தையும், முதுநிலைப் பட்டப்படிப்பில் மற்றொரு பாடத்தையும் படித்தால் அரசுப் பணிக்குச் செல்லும்போது சிக்கல் ஏற்படும் என்பதால், மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் படித்த பாடத்தையே முதுநிலைப் பட்டப்படிப்பிலும் தொடர ஆர்வம் காட்டுகின்றனர்.

தேவை, போட்டியின் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எம்.சி.ஏ. படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே போட்டியில்லை என்ற நிலையில், அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மற்ற முதுநிலைப் படிப்புகளைப் போல், அந்தந்தக் கல்லூரிகளிலேயே மாணவர் சேர்க்கை அனுமதித்தால், இடங்கள் நிரம்பிவிடும். இதேபோல் 'லேட்டரல் என்ட்ரி' எனப்படும் நேரடி இரண்டாமாண்டு படிப்புக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இரண்டு ஆண்டுகள் என்பதால் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எதிர்காலம் கணினிமயமாக இருக்கும் என்பதால், இத்துறை நிச்சயம் எழுச்சி பெறும்” என்கிறார் கோவை அரசுக் கலைக்கல்லூரி கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் எல்.ராபர்ட்.

மாற்றம் வருமா?

தனியார் சுயநிதிக் கல்லூரி நிர்வாகி எஸ்.சரவணக்குமார் கூறும்போது, 'கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. சேருவதற்கு மாணவர்கள் இல்லை. முன்பெல்லாம் பொறியியல் கல்லூரிகள் தொடங்கும்போது, அதில் இந்தப் பாடப்பிரிவுகளையும் சேர்த்தனர். இதனால் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிக்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் தேவைக்கு அதிகமாகப் பட்டதாரிகள் உருவானதால் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. சேர்க்கை குறைந்ததால், பல கல்லூரிகளில் இந்தப் படிப்புகளை மூடி விட்டனர்' என்கிறார்.

இவர்கள் அனைவரின் கருத்துகளையும் கள நிலவரத்தையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் கட்டமாகக் காலத்துக்கு ஏற்ப எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பாடத்திட்டங்களைத் தகவமைக்க வேண்டும்.

Comments