Tuesday 17 September 2019

தேச சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர் நரேந்திர மோடி

தேச சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர் நரேந்திர மோடி

அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி.

இ ன்று நமது பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளாகும். அவர் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னை தேச சேவைக்காக அர்ப்பணித்திருந்தார். ஒரு இளைஞனாக அவர், கீழ்த்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடியின் குழந்தைப் பருவம் கடினமானதாக இருந்தது. ஆனால், அதுதான் வறுமையின் பிடிகளில் இருந்து ஏழைகளை விடுவிப்பதற்காக உழைப்பதில் அவருக்கு ஊக்கம் அளித்தது.

மனித குலத்துக்கு சேவையாற்றுவது, ஒவ்வொருவருக்கும் உதவி செய்வது ஆகியவற்றில் நரேந்திர மோடிக்கு இருந்த அர்ப்பணிப்பு தவிர, அவரிடம் இருந்த அரசியல் மனோபலமும், ஒருங்கிணைக்கும் திறமையும் அவரை பிரபலமாக்கின.

1987-ம் ஆண்டில் குஜராத்தில் பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நேரத்தில் அந்த கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நரேந்திர மோடியின் ஒருங்கிணைப்புத் திறமையாலும், அரசியல் செயல்திறனாலும் 1990-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 67 இடங்களை கைப்பற்றியது.

பின்னர் 1995-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 121 இடங்களைப் பிடித்து குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. அன்றிலிருந்து இன்று வரை அங்கு தோற்கடிக்கப்பட முடியாத கட்சியாக பா.ஜ.க. இருப்பதுடன், அதன் தலைவர்கள் அங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர்.

குஜராத்தில் இன்று பா.ஜ.க. ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு, அடிப்படை நிலையில் இருந்து கட்சியை ஒருங்கிணைத்ததோடு மட்டுமல்லாமல், முதல்-மந்திரியாக இருந்தபோது நரேந்திர மோடி மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகளும்தான் காரணங்களாக உள்ளன.

பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளராக பணியாற்றி, இந்திய வளர்ச்சிக்கான விதையை விதைத்தார். இன்று உலகத்தில் பா.ஜ.க.தான் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது. இது நரேந்திர மோடியின் தீர்க்கமான நோக்கத்தின் விளைவாக நிகழ்ந்துள்ளது.

1990-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் கீழ் கட்சி பணியாற்றுவதற்கு எனக்குக்கூட வாய்ப்பு கிடைத்தது. அப்போது குஜராத்தில் முழுமையான மற்றும் விரிவான கட்சி உறுப்பினர் சேர்க்கை நடந்ததை நினைவுகூர்கிறேன். அப்போது கட்சியின் கடைசி நிலையில் இருந்து ஒருங்கிணைத்து உறுப்பினர்களை அவர் சேர்த்தது, கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல், எனக்குக்கூட அதுபற்றி கற்றுக்கொள்ளவும், அறிவைப் புகட்டுவதாகவும் அமைந்தது.

2001-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகுதான் மாநில மேம்பாட்டுக்கான வழி பிறந்து, முன்னுதாரணமாக அமைந்தது. அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்தார். அவை அமல்படுத்தப்படாததாகவே கருதப்பட்டன.

ஆனால் குஜராத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் 24 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் உறுதியாக செயல்பட்டு நிறைவேற்றினார். அவரது அரசியல் மனோதிடமும், உறுதியான தீர்மானமும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற வெறியும் அவரது அந்த கனவை சாதனையாக மாற்றிக்காட்டின. அதன் மூலம், ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற பழமொழியை உலகத்துக்கு நிறைவேற்றிக்காட்டினார் நரேந்திர மோடி. குஜராத்தின் நிலையை அவர் மாற்றிக்காட்டியதற்கு பல்வேறு உதாரணங்களை கூற முடியும்.

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சிதான் இந்திய அளவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு சாதகமான வழிகளை உருவாக்கியது. ஒரு அர்ப்பணிப்பான தலைமை அமைந்துவிட்டால், மாநிலத்தை வளமாக்கலாம் என்ற தெளிவான செய்தியை மக்களிடையே இது பரவச்செய்தது.

அதோடு, ஊழல் மிகுந்ததும், அலட்சிய மற்றும் திறமையற்றதுமான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதோடு, நரேந்திர மோடிக்கு உறுதியான ஆதரவையும் கிடைக்கச் செய்தது.

வறுமை ஒழிப்புக்காக பல்வேறு முயற்சிகளினால், ஏழைகளின் வாழ்க்கை முறை தரமாக மாறியது. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகுதான், ஏழைகளின் ஆசை, தேவை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை அரசு கவனிக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

இதுதவிர கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு எவ்வளவோ பணத்தை அள்ளி அள்ளி செலவழித்தாலும், நரேந்திர மோடி அரசின் மீது ஒருவர்கூட ஊழல் குற்றச்சாட்டை வைக்கவில்லை என்பதுதான்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக பணியாற்றுவதோடு, உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயரச் செய்துள்ளது. இதற்கு மிக வலுவான சான்று எதுவென்றால், காஷ்மீர் விவகாரத்தில் (அரசியல் சட்டப்பிரிவு 370) இந்திய அரசின் நிலைப்பாட்டை உலகம் ஏற்றுக்கொண்டதும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை கண்டித்ததுமாகும்.

அதுமட்டுமல்ல, யோகா பயிற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்காக நரேந்திர மோடி வைத்துள்ள முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகள் பச்சைக்கொடி காட்டியிருப்பதையும் கூறலாம். இதுவும் உலகில் இந்தியாவின் செல்வாக்கு உயர்கிறது என்பதற்கு சான்றாகும். வாக்கு வங்கி அரசியலின் தீமைகளை அவர் மனதில் வைத்திருந்தார். முஸ்லிம் பெண்களை விடுவித்த முத்தலாக் தடை மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய விவகாரங்களில் வேறு எந்த கட்சியாவது இப்படி தைரியமாக செயல்பட்டிருப்பார்களா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தேசிய கட்டுமானத்தில் மக்களையும் இணைத்து செயல்பட நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்துவார். 2014-ம் ஆண்டில் பிரதமர் ஆனதும் முதலில் அவர் மேற்கொண்ட செயல், தெருக்களை சுத்தம் செய்யத் தூண்டியதுதான். இன்று ‘தூய்மை இந்தியா’ என்பது தேசிய இயக்கமாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு அவர் தற்போது அறைகூவல் விடுத்துள்ளார். இதிலும் நாம் விரைவில் சாதிப்போம் என்பது உறுதி. அவர் சொல்வதை மக்கள் கவனமாக கேட்பதோடு மட்டுமல்லாமல், அவரை நம்பவும், பின்பற்றவும் முன்வருகின்றனர்.

சமுதாயத்தில் பலவீனமானவர்கள், பின்தங்கியிருப்பவர்களை கைதூக்கிவிடும் நடவடிக்கைகளில் தொடர நரேந்திர மோடி எப்போதுமே தயாராக இருக்கிறார். அவர் தனது குழுவில் உள்ள உறுப்பினர்களின் திறமையை பயன்படுத்தி, அரசு திட்டங்கள் திறம்பட அமல்படுத்தச் செய்கிறார்.

எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உறுதியையும், அதற்கு குறுக்கே வரும் தடைகளை உடைத்து சாதனை படைப்பதிலும் நமது பிரதமர் திறம்பட பணியாற்றி வருகிறார். இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்கும், சமத்துவமான சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் இடைவிடாமல் உழைக்கும் ஒரு தலைவரின் கீழ் நாம் பணியாற்றுகிறோம் என்பது நமக்கு மிகப்பெரிய பெருமை.

மனித குலத்துக்கும், பிறந்த மண்ணுக்காகவும் சேவை செய்ய அதிக சக்தியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்க வேண்டும் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இறைவனை வேண்டி, அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

No comments:

Popular Posts