Wednesday, 12 September 2018

எட்டயபுரத்து எரிமலை!

எட்டயபுரத்து எரிமலை! மகாகவி பாரதி கவிஞர் ரவிபாரதி இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் தனது கவிதைகளால் எழுச்சியும், உணர்ச்சியும் ஊட்டி, பொட்டுப் பூச்சிகளாக இருந்தவர்களையும் தட்டி எழுப்ப முடியும் என்று நிரூபித்த இமாலயக் கவிஞர் பாரதி. பாரதி, 11-12-1882 அன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர்-இலக்குமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். பெரும்பாலும் சுப்பையா என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். கவிதையிலே இருந்த நாட்டம், பள்ளிப் படிப்பிலே இல்லை. எப்போதும் எதுகையும் மோனையுமாகவே அவர் வலம் வந்து கொண்டிருந்தார். பழமை வயலிலே புரட்சி நீர்பாய்ச்சி புதுமைகளை அறுவடை செய்தவர். வாழுகிற காலமும், வளர்கின்ற சூழ்நிலையுமே ஒரு மனிதனை கவிஞனாக உருமாற்றம் செய்கிறது என்பதற்கு உதாரண புருஷன் பாரதிதான். ‘பாரதி, நீ நினைத்தவுடனே பாட்டெழுதும் வரகவியாமே! காளமேகமாமே! எங்கே ஒரு கவிதை சொல்லு’ என்று ஆசிரியர் கேட்க, “மேகம், விரும்பி தானாகப் பொழியுமே தவிர அது மற்றவர்களின் உத்தரவுக்கெல்லாம் பொழியாது” என்று பாரதி பதிலுரைத்தார். ஆசிரியரோ வாயடைத்துப்போனார். பாரதி மேல் இருந்த பொறாமையால் காந்திமதி நாதன் என்பவர், ‘பாரதி சின்னப்பயல் என்ற ஈற்றடியை’ கொடுத்து பாடச்சொன்னார். பாரதி அதன் உள்நோக்கத்தை புரிந்துகொண்டார். உடனே, ‘காரிருள் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்’ என்று பாடி எல்லோரையும் வியக்கவைத்தார். ஆனாலும், அந்தப் பாராட்டில் பாரதி மகிழ்வுறவில்லை. மாறாக காந்திமதி நாதனைப் புண்படச் செய்துவிட்டோமோ என்று வருத்தம் கொண்டார். பிறகு, ‘காந்திமதி நாதற்கு பாரதி சின்னப்பயல்’ என்று மாற்றிப்பாடி, இப்போதும் எல்லோரின் பாராட்டைப் பெற்றார் பாரதி. இத்தகைய மாண்புக்கும் மாட்சிக்கும் உடையவராய் பாரதி திகழ்ந்தார். பாரதியின் தமிழ்ப்புலமைக்குப் பக்கத்தில் நிற்பதற்கே யாருக்கும் தைரியமில்லை என்ற நிலை உருவானது. எட்டயபுரத்து அரசவைப் புலவர்களுக்கு மத்தியில் பெற்ற ‘பாரதி’ எனும் பட்டம் அவருக்கு கம்பீரத்தையும் கவுரவத்தையும் கொடுத்தது. ஒரு கவிதையை நாம் படிக்கும்போது இத்தகைய கவிதையை இதுவரை எவரும் எழுதவில்லை என்ற எண்ணம் வரவேண்டும். அதுதான் கவிஞனின் வெற்றி. கடலைக் கலக்கி, மலையைத் தகர்த்து சீறிப்பாய்ந்துவரும் சண்டமாருதப்புயலாக பாரதியின் ஒவ்வொரு கவிதையும் புறப்பட்டன. சொற் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது என புதிது புதிதாய் அவை வலம் வந்தன. பதமாக பக்குவமாகப் பாடவேண்டிய பாப்பா பாட்டிலே கூட, ‘பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’ என்று பிஞ்சு உள்ளங்களில்கூட புரட்சிக் கனலை மூட்டியவர் பாரதி. அக்கினிக் குஞ்சு என்பது அளவிலே சிறியது. அது ஒரே ஒரு தீப்பொறிதான். அதன் மகத்தான சக்தி ஆங்கிலேயர்களின் ஆதிக்க காட்டை எரித்து சாம்பலாக்கும் வல்லமை உடையது என்பதை குறியீடாக வைத்துத்தான், ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்ற கவிதையைக் கொளுத்திப் போட்டார் பாரதி. எனது கவிதை ஒரு தீப்பொறிதான். அது பற்றிக் கொண்டால் உனது ராஜ்யம், பூஜ்யம் ஆகிவிடும் என்று ஆங்கிலேயர்களுக்கு விடுத்த எச்சரிக்கை உள்ளே தீபந்தமாக இருந்தது என்பதே உண்மை. ஏனோ தானோ என்று எந்த ஒரு சொல்லையும் பாரதி பயன்படுத்தியதே இல்லை. கேட்டாலே கிறுகிறுத்துப் போகும் அளவுக்கு பாட்டாலே சொல்லி அடித்தவர் அவர். ‘தேடு, கல்வியிலாத ஊரை தீக்கிரையாக்கு’, ‘மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’, ‘இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்தான், அண்ணன் கையை எரித்திடுவோம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என பாரதியின் ஒவ்வொரு கவிதையிலும் அனல் பறந்தது. வீட்டிலே கடுமையான அரிசிப் பஞ்சம். அன்றைய உணவுக்காக தனது மனைவி செல்லம்மா வாங்கி வைத்திருந்த அரிசியை அள்ளி வீசி காக்கை, குருவிகள் அவற்றைக் கொத்தித்தின்னும் அழகைப் பார்த்து குதூகலித்தவர் பாரதி. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியவராயிற்றே அப்படித்தானே இருப்பார். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாத மனித ஜாதி பாரதி. நாட்டுக்கும், இனக்கேட்டுக்கும், பெண்ணடிமை வீட்டுக்கும், விடுதலை வேண்டி பாரதியின் கவிதை வாள் சுழன்றது. அன்றாடச் சோற்றுக்காக பிறரை அண்டிப் பிழைக்கிறவனாக, பின்னர் மாண்டுபோகிற சாதாரண மனிதனாக என்னை நினைத்துவிட்டாயோ என்று பராசக்திக்கே கேள்விகளை தொடுத்தவர் பாரதி. ‘தெய்வம் பலப்பல சொல்லி-பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்’ என்ற பாரதியின் வரிகள் இன்றைய அரசியல் வாதிகள் நினைவுகொள்ள வேண்டிய வைர வரிகள். பயம் என்ற வார்த்தை பாரதியின் அகராதியிலே இல்லை. திருவனந்தபுரம் மிருக காட்சி சாலையில் சிங்கத்தின் அருகிலே சென்று ‘விலங்கரசனே கவியரசன் வந்திருக்கேன்’ என்று உறவாடிய போதும் சரி, மதம் பிடித்த யானை என்று தெரிந்தும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையிடம் அச்சமின்றி சென்ற போதும் சரி, பாரதியிடம் எள்ளளவும் பயம் இருந்ததில்லை. தமிழ்மொழி மீது பாரதிக்கு இருந்த பற்றும், பாசமும், காதலும், வெறும் சொல்லில் அடங்காது. பன்மொழி அறிஞராய்த் திகழ்ந்த பாரதியின் ஞானச்செறுக்கிற்கு தலை வணங்குவோம். இன்னும் பல்லாண்டு அவன் வாழ்திருந்தால் மண்ணைத் தொட்ட பாரதியின் படைப்புகள் உயரத்தால் விண்ணைத் தொட்டிருக்கும். தமிழ் அன்னையின் மணிமகுடத்துக்கு இன்னும் ஆயிரம் பல்லாயிரம் வைரங்கள் கிடைத்திருக்கும். முன்னூறு வருடங்களில் எழுதி முடிக்க வேண்டிய கவிதைகளை முப்பத்தி ஒன்பது வயதுக்குள்ளே எழுதி முடித்த இமாலயக் கவிஞன் பாரதி, 11-9-1921 அன்று மரணத்தை தழுவினார். பாரதி உயிரோடிருந்தபோது நாம் கொண்டாடவில்லை. அவர் பசி போக்க எவரும் முன்வரவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் பங்கு கொள்ளவில்லை. தன்னாலே கையூன்றி எவரின் தயவின்றி, முன்னாலே வந்த அந்த மகாகவியின் மரணத்தின்போது, பின்னாலே நடந்து போனவர்கள் எண்ணிக்கையை எண்ணினால் கண்களில் கண்ணீர் கசிகிறது. ‘பாரதி’, சின்னச்சாமி பெற்றெடுத்த ‘பெரியசாமி’. அந்த எட்டயபுரத்து எரிமலையை என்றும் நம் நினைவில் வைத்து போற்றுவோம். ஓங்குக பாரதியின் புகழ்! இன்று (செப்டம்பர் 11-ந்தேதி) பாரதியின் நினைவு தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts