Thursday, 16 August 2018

யானைகளையும் வாழ வைப்போம்

யானைகளையும் வாழ வைப்போம் முனைவர் ச.சஞ்சீவி பிரசாத், உதவிப் பேராசிரியர், புவியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம் இன்று (ஆகஸ்டு 12-ந்தேதி) உலக யானைகள் தினம். இயற்கையின் பாதுகாவலனாக அறியப்படும் விலங்கு யானை. இந்த இனத்தின் காட்டு வாழ்க்கையை மையப் பொருளாகக் கொண்டு ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கில திரைப்படம் 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் நோக்கம் அழிந்து வரும் யானை இனத்தை காப்பாற்றுவதும், இதற்காக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஆகும். மனித சமூகத்துக்கும் யானைகளுக்கும் ஆதிகாலந் தொட்டே பிரிக்க முடியாத பிணைப்பும் உறவும் இருந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் ஆற்றங்கரைகளில் நாகரிகங்கள் தோன்றியபோது பெரும்பாலும் வனப்பகுதிகளை அழித்தே விளை நிலங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட நிலங்களில் விளையும் தானியங்களைப் பிரித்தெடுப்பதற்கு தொழில்நுட்ப வசதியோ? அல்லது எந்திரங்களின் அறிமுகமோ? இல்லாததால் யானைகளைப் பயன்படுத்தும் முயற்சிகளில் மனிதன் இறங்கினான். அதற்காக வனங்களில் வாழ்ந்து வந்த யானைகளைப் பிடித்து அதற்குத் தகுந்த பயிற்சி அளித்து விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தினான். யானைகள் தனக்கு உணவளிக்கும் மனிதர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் களத்து மேட்டில் தானியக் கதிர்களைப் போரடித்தன. இதைத் தான் யானை கட்டிப் போரடித்த சமூகம் நம்முடையது என பெருமைபடக் கூறுகிறது சங்க இலக்கியங்கள். மன்னர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாத்திட யானைகளைப் பயன்படுத்தியதும் வலிமை மிக்க யானைப் படை பிரிவையே பல மன்னர்கள் உருவாக்கியிருந்ததையும் அறிய முடிகிறது. இத்தகைய வரலாற்றுப் பெருமை வாய்ந்த யானை இனம் உலக அளவில் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவும் எஞ்சியிருப்பவையும் மனித சமூகத்தின் செயல்பாடுகளால் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 24 வகை யானை இனங்கள் வாழ்ந்த மண்ணில், தற்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என 2 வகைகள் மட்டுமே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அருகி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி சுமார் 32 ஆயிரம் யானைகள் வசிக்கின்றன. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 750 யானைகள் உள்ளன. தற்போதைய சூழலில் மனிதர்களின் சுய லாபங்களுக்காகவும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. நாகரிக மோகத்தால், வளர்ச்சிப் பணிகளால் விலங்குகளின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வனம் சுருங்கி வருவதால் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. அதாவது, ஏற்கனவே யானைகள் பயன்படுத்திய வழித்தடங்களில் தான் செல்கின்றன. ஆனால், இன்றைக்கு அவை ஊர்பகுதியாக மாறிவிட்டன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று உணவைத் தேடும் வழக்கம் கொண்ட யானைகள் ஒரு முறை பயன்படுத்திய வழித்தடத்தை தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொண்டு அடுத்த தலைமுறைக்கும் உணர்த்திச் செல்லும் உன்னத விலங்காகும். இயல்பாகச் செல்லும் வழித்தடம் தடைப்படும் போது யானைகள் மாற்றுப் பாதையை நோக்கிச் செல்ல முற்படுகின்றன. இதனால் காடுகளில் புதிய வழித்தடங்கள் உருவாவது மட்டுமன்றி சாலைகளும் உருவாகின்றன. இப்புதிய பயணங்களின் மூலம் யானைகள் விதைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்புவதால் காடுகளின் பரப்பளவும் பசுமைத் தன்மையும் அதிகரிக்கின்றன. இதனால் காடுகளில் பல்லுயிர் பெருக்கம் தானாகவே நடைபெற யானைகள் வழிவகை செய்கின்றன. இத்தகைய சூழ்நிலைக் காவலனாகக் கருதப்படும் யானைகளின் அழிவிற்கு நாம் தெரிந்தே காரணமாகின்றோம். இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் அலாதியான அனுபவத்தை தரும் யானை இனம் காடுகளில் மகிழ்ச்சியாக இல்லை. மனித சமூகத்தின் சுயநலப் போக்கால் ஒரு உயிரினத்தை அதன் வாழ்விடத்தில் வாழவிடாமல் அழிவின் விளிம்பிற்குள் தள்ளும் பொறுப்பற்ற செயல்களை தெரிந்தோ தெரியாமலோ நாளும் செய்து வருகின்றோம். இந் நிலை தொடர்ந்தால் யானைகளை அரிய வகை விலங்குகள் பட்டியலில் வைக்க வேண்டிய நிலை நேரும். புளோரிடா பல்கலைக்கழக சூழலியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், ‘யானைகளின் அழிவு என்பது சுற்றுச்சூழல் அழிவு. சுற்றுச்சூழல் அழிவு என்பது நம் அழிவு’ என்று பதிவு செய்துள்ளார். இது அனைவரின் சிந்தனைக்குரியதாகும். தற்போது, யானைகள் அழிகின்றன. காடுகள் அழிகின்றன. நாளை நாமும் அழியக்கூடும். அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? இனி நாம் இயற்கையை அழிக்கும் வகையிலான நம் நுகர்வு செயல்பாடுகளை குறைக்க வேண்டும். காடுகளுக்குள் குடியிருப்புகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். யானைகளை வேட்டையாடுபவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து காடுகளின் ஓரங்களில் வாழும் மக்களுக்கு அரசுகள் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். யானைகளின் வாழ்வுரிமை உறுதிப்படும் நோக்கில் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திட வேண்டும். விலங்கினங்களில் பிற விலங்குகளுக்கு இல்லாத பெருமை யானைக்கு உண்டு. ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனப் போற்றப்படும் ஒரே விலங்கு யானை தான். மக்களின் வாழ்க்கையோடும் மண்ணின் கலாசாரப் பெருமையோடும் இரண்டறக் கலந்த யானைகள் தங்களின் வாழ்விடங்களை, வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளால், யானை-மனிதர்கள் மோதலால் இழந்து நிற்பது என்பது யானைகளின் அழிவோ அல்லது சூழலின் அழிவோ மட்டுமல்ல. மாறாக நம் கலாசார அடையாளங்களின் அழிவும் கூட. தரைவாழ் விலங்குகளில் பெரிய உருவமாக தென்பட்டாலும் சமூக வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தலை சிறந்த விலங்கு யானையாகும். அதிகளவு தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும் யானைகள் நீரும் உணவும் அதிகமுள்ள காடுகளில் மட்டுமே வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமையுமானால் அந்தக் காடு வளம் குன்றாததாக இருக்கும். யானைகளின் பாதுகாப்பு நம் சமூகப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்! சூழலியல் காப்போம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts