Follow by Email

Sunday, 5 August 2018

அறிவுச் சுடரை அணையாமல் காப்போம்

அறிவுச் சுடரை அணையாமல் காப்போம் நல்ல நூல்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு மனித நாகரிகம் எப்படி இருந்தது என்று இன்றைய தலைமுறைக்கு கற்றுத்தருவதும், இன்றைய தலைமுறை எப்படி வாழ்கிறது என்று வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்கூறுவதும் புத்தகங்கள்தான். ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள், மரப்பட்டைகள், தோல்கள் என்று எழுதுபொருட்கள் மாறினாலும் புத்தகங்களில் உள்ள கருப்பொருள் மாறாமல் காத்து வந்தனர் நம் முன்னோர். எனவேதான் தொல்காப்பியம், திருக்குறள் என்று மிக தொன்மையான நூல்களை எல்லாம் இன்றும் நம்மால் படிக்க முடிகிறது. பாடப்புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவோடு கற்பித்தலை நிறுத்திவிடும். பரந்து விரிந்த இந்த உலகில் இருந்த இடத்தில் இருந்தே தேடுதலை தூண்டுபவை புத்தகங்கள்தான். அந்த வகையில் அனைவருக்கும் உதவியாக இருப்பது நூலகங்கள். புத்தகங்களின் தேவை, பெருமை குறித்து அறிஞர்கள் பலரும் தங்கள் கருத்துகளை கூறி இருக்கிறார்கள். புத்தகங்கள்தான் பல அறிஞர்களின் வாழ்க்கையை மாற்றியது. நடுக்கடலில் தத்தளித்த கப்பலாய் வாழ்க்கை நிலைதடுமாறும் போது, நங்கூரமாக நிலை நிறுத்த உதவுவது புத்தகங்கள் தான். சில புத்தகங்கள் நாடுகளின் தலைவிதியையே மாற்றி இருக்கின்றன. போராட்டத்தை தூண்டும் சக்தியும், போராட்டங்களை அடக்கும் சக்தியும் நூல்களுக்கு உண்டு. அசோகருடன் உறவாட வேண்டுமா? புத்தரை பின்தொடர வேண்டுமா? பாபருடன் போர் காட்சியை பார்க்க வேண்டுமா? அரசியல் சூழ்ச்சிகளை அருகில் இருந்து பார்க்க வேண்டுமா? சாணக்கியனுடன் உரையாட வேண்டுமா? புத்தகங்கள் நமக்கு கை கொடுக்கும். அரசியல் முதல் அறிவியல் வரை எழுத்தாளர்களின் பார்வையில் புத்தகங்கள் ஏராளமான புதிய திக்குகளை வாசிப்பவர்களுக்கு தருகிறது. இந்த புத்தகங்கள் எல்லாம் ஒரு நபரால் வாங்கிப்படிப்பது என்பது சிரமம். பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை ஏழை மாணவ-மாணவிகள் வாங்கிப்படிப்பது என்பது நடக்காத காரியம். ஆனால் வாசிப்பு என்பது அனைவருக்கும் சாத்தியம். எனவேதான் அனைவருக்கும் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பினை நூலகங்கள் கொடுக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று ஆயிரக்கணக்கான நூலகங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நூலகங்கள் செயல்படவில்லை என்பது தான் வேதனைக்குரியது. மைய நூலகங்களில் கூட போதிய ஆட்கள் இல்லாமல் புத்தகங்கள் எல்லாம் புதருக்குள் மறைந்து போனவை போன்று புழுதிக்குள் சிக்கிக்கிடக்கின்றன. ஊர்ப்புற நூலகங்களை சொல்லவே வேண்டாம். ஒரு சில கிராமங்களில் அந்த பகுதியை சேர்ந்த பகுதி நேர பணியாளர்கள் நூலகங்களை குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து வைக்கிறார்கள். அதுவும் இல்லாத இடங்களில் நூலகங்களின் நிலைமை அய்யோ பாவம். தமிழகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தொடர் பராமரிப்பு இன்மை, பணியாட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு காரணங்களால் பெரும்பாலான நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன என்பதே உண்மை. பல கிராமங்களில் நூலக கட்டிடங்கள் சிதிலம் அடைந்து, மழை நீர் ஒழுகும் நிலையில் உள்ளன. அங்கு வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வீணாகிக்கிடக்கின்றன. நூலகங்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தாலும் அதை கண்டுகொள்ள யாரும் இல்லை என்பது வருத்தம். தற்போது புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரிய புத்தகங்களை கூட இணையதளங்களில் பலரும் தேடிப்பிடித்து வருகிறார்கள். ஏராளமான புத்தகங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டுவிட்டன. வாட்ஸ்-அப் மூலம் ‘பி.டி.எப்’ பைல்களாக புத்தகங்கள் பரிமாறப்படுகின்றன. ஆனால், டிஜிட்டல் வழி வாசிப்பு என்பது புத்தக வாசிப்புக்கு இணையாகாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. வாசித்து மகிழ்ந்த ஒரு புத்தகத்தை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்றால் டிஜிட்டல் புத்தகம் உதவும். ஆனால், தேவையின்போதெல்லாம் எடுத்து முகர்ந்து, ஸ்பரிசித்து, முழுமையாக படிப்பது என்பது புத்தகங்களில் மட்டுமே முடியும். வாசிக்கும்போது வரலாற்று நாயகர்களின் உடன் நாமும் பயணிக்கிறோம். அவர்களுடன் பேசுகிறோம். இத்தகைய ஒரு அறிமுகத்தை கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் கொடுப்பது அந்த கிராமப்புற நூலகங்கள்தான். எனவே கிராமப்புறங்களில் கட்டப்பட்டு கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நூலகங்களை திறக்க வேண்டும். அதற்கு உரிய அதிகாரிகள் தங்கள் கண்களை திறக்க வேண்டும். திறக்கப்படாத நூலகங்களில் தூங்கும் புத்தகங்களை தூசு தட்டி எழுப்பினால் பல அறிஞர்களும், கவிஞர்களும், புரட்சியாளர்களும், அதிகாரிகளும் நம் மண்ணில் இருந்து எழுவார்கள். -முடிவேல் மரியா

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts