Sunday, 1 July 2018

விளம்பரங்கள்: சாதனையல்ல, வேதனை!

விளம்பரங்கள்: சாதனையல்ல, வேதனை! | ஜெயபாஸ்கரன் | பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையிலும், வாகனப் பாதைகளுக்கும் நடைபாதைகளுக்கும் சேதாரங்களை ஏற்படுத்துகின்ற வகையிலும், அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக தங்களது விளம்பர பேனர்களை வைக்கக்கூடாது என்று கடந்த ஆண்டின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. பிளக்ஸ் பேனர்கள் என்று குறிப்பிடப்படுகின்ற நெகிழி விளம்பர பதாகைகளையும், கட்-அவுட்டுகள் என்று குறிப்பிடப்படுகின்ற உயரமான வெட்டுருக்களையும் பொது இடங்களில் அதிக அளவில் போட்டி போட்டுக் கொண்டு நிறுவுகின்ற அருவருப்பான விளம்பரக் கலாசாரம் தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. அதற்கும் முன்பாகவே சுவர் எழுத்து விளம்பர முறையும், சுவரொட்டிகளை ஒட்டுகின்ற பழக்கமும் நடைமுறையில் இருந்தன. இன்றும் அவை விட்டொழிக்கப்படவில்லை. தமிழகத்தின் நெடுஞ்சாலையோரச் சுவர்கள், மேம்பாலச் சுவர்கள் மற்றும் வீதியோரச் சுவர்கள் அனைத்தும், பல்வகை அரசியல் கட்சித் தலைவர்களின் முகங்களுக்கும், அவர்களது பெயர்களுக்கும் உரியவையாக மாற்றப்பட்டிருக்கின்ற காட்சிகளையே பெருமளவில் காண முடிகிறது. நவீன அறிவியலின் விளைவான மின்னஞ்சல், முகநூல், கட்செவி அஞ்சல், குறுஞ்செய்தி போன்ற தகவல் தொடர்பு முறைகள் பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னரும் கூட நமது தமிழகத்தின் சுவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சியினரையும் கடந்து பொதுமக்களின் பார்வைகளிலும் பதிந்து வளர்ச்சியடைய விரும்புகிறார்கள் என்பதுதான். ஆனால், அவர்களது விருப்பம் பொதுமக்களை மிகவும் எரிச்சலடைய வைத்துவிடுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. விளம்பரங்களை எழுதுவதன் பொருட்டு எழுகின்ற மோதல்களைச் சமாளிப்பதற்கென்றே காவல்துறையில் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டிய அளவுக்கு அரசியல் விளம்பரங்கள் தொடர்பான சச்சரவுகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அதிகரித்து வருகின்ற அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும், பெரும் போட்டிகளுக்கிடையே அவை தங்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவையுமே பல்வேறு வித விளம்பரங்களாக வடிவம் கொள்கின்றன என்பது உண்மையே. கடந்த ஐம்பதாண்டு காலமாக, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டிருக்கும் இருபெரும் கட்சிகளே இத்தகைய பெரு விளம்பரக் கலாசாரத்தில் பெரும்பங்கு வகித்தன. இன்று வரை அந்தக் கலாசாரத்தைக் கைவிடாமல் காப்பாற்றி வளர்த்துக் கொண்டும் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றி அதே பாணியில் விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மற்ற கட்சிகளும் தள்ளப் பட்டதால் நிலைமை மேலும் சிக்கலாக மாறியது. அரசியல் கட்சிகளின் அடியொற்றி பல்வேறு அமைப்புகளும், ஆலய விழாக்களும், குடும்ப விழாக்களும், தத்தமது விளம்பரங்களோடு வீதியில் இறங்கியதன் விளைவாக, நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. வெளிநாடுகளில் காணப்படும் தெருத் தூய்மை குறித்து பெருமை பேசுகின்ற நமது அரசியல் கட்சித் தலைவர்கள், அங்கெல்லாம் சுவர் முழுதும் மறைத்து, கட்சித் தலைவர்களின் பெயர்கள் எழுதப்படுவதில்லை என்பதையும், கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக, பொதுமக்களுக்கு இடையூறும் பயமும் ஏற்படும் வகையில் பேரோசையோடும் பெரும்புகையோடும் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை என்பதையும், ஆயிரம் தொண்டர்கள் ஒரே நேரத்தில் தங்களது தலைவரின் பட்டப்பெயரைச் சொல்லி வாழ்க' வாழ்க' என முழக்கமிடுவதில்லை என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். தங்களது கட்சியின் தலைமைக்கும் தங்களுக்குமான உறவை உறுதிசெய்யும் வகையில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் பெரும்பொருட் செலவில் வரிசை வரிசையாக நெகிழி விளம்பரப் பதாகைகளை நிறுவுகிறார்கள். அத்தகையோரில் பலர், பல காரணங்களால் வெகு விரைவில் அந்தக் கட்சியை விட்டு விலகிவிட்ட அல்லது விலக்கப்பட்ட பின்னர் தாங்கள் சேருகின்ற புதிய கட்சியின் தலைமைக்கும் அதேபோன்று விளம்பர பதாகைகளை நிறுவுகிறார்கள் அல்லது புதிய கட்சியொன்றைத் தொடங்கி தங்களுக்கான பதாகைகளின் வரிசைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். நமது அரசியல் கட்சியினரின் அளவுக்கு மீறிய விளம்பர மோகத்தால் பாதிக்கப்படுவோர் அவர்களுக்கு வாக்களித்த அப்பாவிப் பொதுமக்கள்தான். இன்றைய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் லட்சக்கணக்கான நெகிழி விளம்பர பதாகைகள் நாடு முழுவதும் நிறுவப்படுகின்றன. இத்தகைய மலிவான விளம்பரக் கலாசாரத்தை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள் என்பது மட்டுமல்ல, அதை மறைமுகமாக ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள் என்பதே உண்மை. தலைவர்கள் சிலர் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு விளம்பரப் பதாகைகளில் இடம் பெறுவதையும் அடிக்கடி காணமுடிகிறது. விளம்பரப் பதாகைகளில் தலைவர்கள் சிலர் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலத் தமிழகத்தில் போராட்டங்களும் நடந்துள்ளன. தங்களின் கட்சியின் விளம்பரங்களில் மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களுக்கான அரசுத்திட்ட விளம்பரங்களிலும் தங்களது பெயரையும் முகத்தையும் நீக்கமற இட்டு நிரப்பிக் கொள்வதும், அரசின் திட்டங்களுக்கு ஆட்சியில் இருக்கும் தங்களது பெயரையே சூட்டிக் கொள்வதுமான உச்சக்கட்ட விளம்பர அநாகரிகம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில், தங்களது ஆட்சியின் சாதனைகளையும், தங்களது கட்சியின் பெயரையும் விளம்பரங்களாக வெளியிட்டுக் கொள்கின்ற போக்கிற்கு முடிவுகட்டத் தொடரப்பட்ட பொது நலவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த ஆய்வறிக்கையில், பொது நல வழக்கின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என்று நிரூபணம் செய்ததோடு, அரசு விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றத்திடம் அளித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படுகின்ற நலத்திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணத்திலேயே விளம்பரங்களைச் செய்து தங்களது முகத்தையும் பெயரையும் நிலை நிறுத்திக்கொள்ள விழைகிற போக்கு கண்டிக்கப்படவும் களையப்படவும் வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தனது உத்தரவின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. ஒரு தலைவருக்கான புகழ் என்பது மக்களுக்கான அவரது ஆக்கப்பூர்வமாக செயல்களால் கிடைக்கக் கூடியது என்பதும், வெட்டுருக்களிலும், சுவரொட்டிகளிலும், சுவரெழுத்துகளிலும், நெகிழிப் பதாகைகளிலும், தங்களுக்கான விளம்பரங்களைச் செய்து கொள்வதே செயல்திட்டமாக இருந்தால் அதனால் கடுகளவும் புகழ் கிடைக்காது என்பதும் நமது தலைவர்களால் உணரப்படவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களின் வெட்டுருக்கள் மற்றும் நெகிழி பதாகை விளம்பரங்களுக்கு எதிராக 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் குரல் கொடுத்துக் கண்டித்தவர் பா.ம.க நிறுவனர் மருத்துவர் சு. இராமதாசு என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின், கடந்த ஆண்டு கோவையில் பொறியாளர் ரகுபதி விளம்பரப் பதாகையில் மோதி பலியான கொடுமைக்கு எதிராக கோவை-சிங்காநல்லூர் தி.முக. சட்டமன்ற உறுப்பினர் உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து நெகிழி பதாகைகளுக்கு எதிரான உத்தரவைப் பெற்றார். மேலும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.முக.வின் நிகழ்ச்சிகளுக்காக, பொதுமக்களையும் போக்குவரத்தையும் பாதிக்கின்ற அளவுக்கு விளம்பரப் பதாகைகளை அமைக்கக்கூடாது என்று தன் கட்சியின் நிர்வாகிகளுக்கு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தமது கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு நெகிழிப் பதாகைகள் மற்றும் விளம்பரங்களை வைக்கக்கூடாது என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் அரசியல் கட்சி தொடங்கிய ஒருவரும், விரைவில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் ஒருவரும்கூட தங்கள் கட்சிக்கு செய்யப்படும் விளம்பரங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிகளே. வேறு வழியில்லை. தமிழக அரசியல் கட்சிகள், அருவருப்பான, போலியான சுய விளம்பர மயக்கத்தில் இருந்து விடுபட்டாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை வந்துவிட்டது. சுவரெழுத்து, சுவரொட்டி, நெகிழி பதாகை, வெட்டுருக்கள் ஏதுமற்ற தமிழகம் நமக்குச் சாத்தியமாக வேண்டும். தலைவர்களின் புகழ் அவர்களது சாதனைகளால் மட்டுமே மணக்கக்கூடிய ஒன்றாகும். அற்பத்தனமான, அபத்தமான, அருவருப்பு தரக்கூடிய, ஆபத்துகளை விளைவிக்ககூடிய, சுற்றுச்சூழல் நலன்களை நாசப்படுத்துகின்ற, மோதல்கள் உண்டாக்கக்கூடிய, மனித உயிர்களை பலிகொள்ளக்கூடிய அரசியல் விளம்பரக் கலாசாரம் மறைந்தாக வேண்டும். சாதனையாளர்கள் வெற்று விளம்பரங்களை விரும்புவதில்லை. எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும் அவை சாதனைப் பட்டியில் இடம் பெறப்போவதும் இல்லை. ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் இனியேனும் இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts