Friday, 6 July 2018

வரியினால் சிற்பக் கலை சரியலாமா?

வரியினால் சிற்பக் கலை சரியலாமா? தேவ.ஸ்ரீகண்ட ஸ்தபதி, பாரம்பரிய சிற்பக்கலைஞர், சுவாமிமலை உலகம் போற்றும் சோழர் கால சிற்பக்கலை, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கலை ஆகும். ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த இக்கலை, ராஜராஜ சோழனின் உறவினர் செம்பியன் மாதேவியால் போற்றி பாதுகாக்கப்பட்ட கலை. சோழ மன்னர்களால் தொடர்ந்து இக்கலை ஆதரிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, மத்திய, மாநில அரசுகளால் தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் பாரம்பரியமாக செய்து வரும் சோழர் கால பாணி சிற்பக் கலைஞர்களைக் கண்டு அவர்களுக்கு வேண்டிய தேவைகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அமைத்து கொடுத்து ஆதரித்து வருகின்றன. தற்காலத்தில் இச்சிற்ப வேலையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுந்தாலும், சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் பழமை மாறாமல் பழமையான முறைப்படியே இக்கலையைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். மாமன்னர் ராஜராஜ சோழன் பல ஊர்களில் இருந்து சிற்பிகளை அழைத்துவந்து தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான். பிறகு அருகில் அமைந்துள்ள தாராசுரம் கோவிலை இச்சிற்பிகளைக் கொண்டே கட்டினான். பிறகு அதன் அருகில் உள்ள சுவாமிமலை கோவிலின் திருப்பணிக்காக இச்சிற்பிகள் சுவாமி மலைக்கு இடம்பெயர்ந்தனர். சுவாமி மலை திருப்பணியினை முடித்தபின், காவிரி ஆற்றுப்படுகையில் கிடைக்கின்ற வண்டல் மண் பஞ்சலோக விக்ரகங்கள் செய்வதற்கு ஏற்ற மண்ணாக அமைந்தமையால் இச்சிற்பிகளில் சில குடும்பத்தினர் இங்கேயே தங்கிவிட்டனர். இக்கலையில் புகழ் பெற்ற சிற்பியான தேவசேனாதிபதி ஸ்தபதி ஜனாதிபதி விருதை பெற்றவர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இக்கலைப் பொருட்கள், நம் நாட்டு கலை மற்றும் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றுவதோடு, நம் நாட்டுக்கு கணிசமாக அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. உடல் உழைப்புத் தொழிலாளர்களான சுவாமிமலை சிற்பிகள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாமி மலையில் வாழும் சிற்பிகளுக்கு சொற்பமான கூலியே கிடைக்கப் பெறுகிறது. அதிக லாபம் கிடைப்பதில்லை.ஆனால் இத்தொழிலில் இடைத் தரகர்களாக செயல்படுவோரே அதிகம் லாபம் பெறுகின்றனர். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களுடைய கோவில்களுக்கு தெய்வ விக்ரகங்கள் செய்ய ஆர்டர் கொடுக்கும் போது, மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. இவர்கள் நுகர்வோர் என்பதால் வரிச் சலுகைகள் எதுவுமே கிடைக்க வாய்ப்பில்லை.இந்த தொகை அதிகம்.எனவே பழைய வரியான 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.மத்திய அரசின் கவுன்சில் கூட்டத்தில், 29 கைவினைப் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மும்முரமாக நடந்து வந்த இச்சிற்ப தொழில் ஜி.எஸ்.டி.யால் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது. பல திறமையான சிற்பிகள் இத்தொழிலை கை விட்டுவிட்டு, வேறு தொழில்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் பாரம்பரியமிக்க இக்கலையை கைவிட்டுவிடும் நிலையில் சிற்பிகள் இருக்கிறார்கள்.இந்திய அரசின் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையத்தால் கைவினை கலைஞர்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அவை யாவும் தற்போது இல்லை. கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய பொருட்களை சந்தைப்படுத்துவது, நுகர்வோருக்கு கைவினை கலைஞர்களிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்ய வழிவகை செய்வது மத்திய, மாநில அரசின் அனைத்திந்திய கைத்தொழில் வாரியம், தமிழ்நாடு பூம்புகார் நிறுவனங்களாகும். ஆனால் இவை எதுவும் தற்போது
நடைமுறைப்படுத்தப்படவில்லை. இடைத்தரகர்களை ஊக்குவிப்பதால் கைவினை கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு போல மத்திய, மாநில அரசின் கைவினைக் கலைஞர்களுக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கி, பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தி உடலுழைப்புத் தொழிலாளர்களாகிய இச்சிற்பிகளுக்கு வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்தல் வேண்டும். இந்திய அரசால் வழங்கப்படும் கைவினைக் கலைஞர்களுக்கான அடையாள அட்டைகள், முகாம் நடத்தி விண்ணப்பம் பெறப்பட்டு ஒரு வருடம் ஆகியும் சுவாமிமலைப் பகுதி கைவினைக் கலைஞர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் கைவினை கலைஞர்களுக்கான சலுகைகளில் குறிப்பாக குழு காப்பீடு மற்றும் பல்வேறு இழப்பீட்டுத் தொகைகள் இன்றளவும் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு அடையாள அட்டைகளை விரைவில் வழங்கிட ஆவன செய்ய வேண்டும். சோழர் கால சிற்பக் கலை பல நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்று வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் 400 வருடங்கள் பழமையான கலையை போற்றி வருகின்றனர். ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நம் சிற்ப கலையை கண்டு வெளிநாட்டவர் பலரும் வியக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் இக்கலை அந்த அளவுக்கு போற்றிப் பாதுகாக்கப்படவில்லை. உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்களால் இந்துக் கோவில்கள் பல நாடுகளில் கட்டப்பட்டு, அவைகளில் தெய்வச்சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை குறைப்பதன் மூலம் மாதக் கணக்கில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts