Thursday 15 December 2016

அணு உலையின் தந்தை

அணு உலையின் தந்தை | அணு உலைக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், அணு என்பது அபாரமான சக்திதான். உலகின் முதல் அணு உலையை வடிவமைத்தவர் என்ரிக்கோ பெர்மி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஆவார். இவர் ரோம் நகரில் 1901-ம் ஆண்டு செப்டம்பர் 29-ல் பிறந்தார். பெர்மி தன் அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது 14-வது வயதில் திடீரென்று அண்ணன் இறந்துவிட, பித்து பிடித்தவர் போல் ஆனார். தந்தை எவ்வளவோ சமாதானம் செய்தும், அண்ணன் இறந்த அதிர்ச்சியிலிருந்து பெர்மி மீளவில்லை. அந்த நிலையில்தான் பெர்மியிடம் ஒரு இயற்பியல் புத்தகம் கிடைத்தது. அதைப் படிக்க படிக்க அந்தத் துறையின் மீது அவருக்கு தீராத மோகம் ஏற்பட்டது. அதனால், உலகத்துக்கு தன்னால் இயன்ற ஒரு கண்டுபிடிப்பை தர வேண்டும் என்று உறுதி கொண்டார். தன்னுடைய 17-வது வயதில் பைசா நகர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். 26 வயதில் ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். வேலையின் ஊடே கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றை கட்டுரைகளாகவும் வெளியிட்டார். இந்த காலக்கட்டத்தில் தான் அணுக்களின் மையமான கருவை உடைக்கலாம் என்று ஸ்ட்ராஸ்மேன் என்ற அறிஞர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த பெர்மி, நியூட்ரானை உடைப்பது சாத்தியம் என்று கருதினார். அதன் விளைவாக உலகின் முதல் அணு உலையை உருவாக்கினார். அணுவின் மையமான நியூட்ரானை உடைத்தால் அது உடனே மேலும் சில அணுக்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கும். அப்படி புதிதாக உருவான அணுக்கள் உடையும்போது அவைகளும் புதிய அணுக்களை உற்பத்தி செய்யும். இது ஒரு சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து நடைபெறும். இப்படியே வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் அணுக்களை உடைத்து புதிய அணுக்களை உருவாக்கிக் கொண்டே இருந்தால் சக்தி வாய்ந்த அணு உலை உருவாகிவிடும் என்று முதன்முதலில் அறிவித்தவர் பெர்மி. அதனால் அவர் அணு உலையின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 1942 டிசம்பர் 2-ந்தேதி சிகாகோ பல்கலைக்கழக உலோகவியல் ஆய்வகத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனைக்கு முன்பே, பெர்மிக்கு 1938-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு உலைகள் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில் பாதுகாப்பாக செயல்படுத்துவதே நல்லது.

No comments:

Popular Posts