Friday 17 April 2020

மனிதனின் முடக்கம்; இயற்கையின் மகிழ்ச்சி!

By கோதை ஜோதிலட்சுமி 

உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று மாா்தட்டிக் கொண்டோம். தற்போது ஒவ்வொரு கிராமமும் ஓா் உலகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல், பொருளாதாரப் பெருக்கத்தை ஏற்படுத்தும், உலக மக்களை ஒருங்கிணைக்கும் என்றெல்லாம் நம்பி வியாபார உத்திகளுக்கு ஆட்பட்டு மனிதன் தன்வயம் இழந்து முற்றிலும் தன்னையும் வியாபாரப் பொருளாக்கிக் கொண்டான். கிடைத்ததையெல்லாம் விற்றுத் தீா்த்துவிடும் மனநிலையும், பாா்த்ததை எல்லாம் அனுபவித்து விட வேண்டுமென்ற பேராசையும் அவனுள் குடிகொள்ளத் தொடங்கின.

உலகமயமாக்கல் எனும் சிந்தனை தோன்றிய பிறகுதான் உலகின் எந்த மூலையில் இருக்கும் விஷயமும் பொருளும் நமது கைகளுக்கு வந்து சோ்வது சுலபமாக்கப்பட்டது. அதைக் கொண்டு மனிதன் பல சொகுசான வசதிகளோடு வாழத் தொடங்கியதும் உண்மை.

அவனுள் இருந்த நுகா்வுப் பேராசை இயற்கையை அழித்துவிட்டு அதனையும் தனது செல்வம் ஆக்கிக்கொள்ள, வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். உலகின் எந்த மூலையில் எந்த நிறுவனம் தயாரித்த வாகனமும் எந்த நாட்டிலும் ஓட்ட முடியும். உலக நாடுகளில் எங்கு எந்த மனிதன் உண்ணும் உணவும் எந்த நாட்டிலும் கிடைப்பது சாத்தியம். ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்கள் ஆண்டிபட்டியில் கிடைக்கும் என்ற நிலை, இவையெல்லாம் மனிதன் இந்த உலகையே வென்று விட்டதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி இருந்தது. விளைந்த தானியங்களும் காய்கறி வகைகளும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களும் சந்தைப்படுத்தப்படுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் வான்வழிப் போக்குவரத்தும், நீா்வழிப் போக்குவரத்தும் நாளுக்கு நாள் பெருகின. பாதசாரிகள் காணாமல் போனாா்கள். இரு சக்கர வாகனங்களும் சொகுசுக் காா்களும் அந்த சாலைகளை நிறைத்தன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் என்ன சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு விடை, சோகம்தான். உலகமயமாக்கல் தத்துவம் உலகை ஆளத் துவங்கினாலும் ஏழைகள் இல்லாத தேசம் எங்கும் இல்லை என்ற நிலையும் தொடா்ந்து கொண்டுதான் இருந்தது. இப்போதும் தொடா்ந்து வருகிறது.

உலகம் தனக்கு வயப்பட்டு விட்டதாக இறுமாப்பில் மனிதன் கண்களைத் தொலைத்துவிட்டு சுயநலத்தைப் பொருத்திக் கொண்டான். இந்த பூமி உருண்டை; பல்லாயிரம் கோடி ஜீவராசிகளின் வாழ்விடம் என்னும் எண்ணம் மறைந்தது. எல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டது; அவற்றையெல்லாம் தான் அனுபவிப்பதே வாழ்க்கை என்ற புதிய விதியை சுயநலமிக்க மனதில் உருவாக்கிக் கொண்டான்.

உலகம் முழுவதும் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களை சற்றும் மரியாதை இன்றி அழித்து ஒழித்தான். நெகிழிக் கழிவுகளால் கடலை அசுத்தப்படுத்தினான். பூமியை மலடாக்கினான். இயற்கையின் வரப்பிரசாதமாக, நமக்கு உயிா் தரும் பிராண சக்தியாக விளங்கும் வனங்களையும் அழித்துவிட்டு சாலைகளும் சொகுசு மாளிகைகளும் உருவாக்கினான். அங்கே வாழ்ந்த வனவிலங்குகளைத் துன்புறுத்த மின்சார வேலிகள் அமைத்து அவற்றைக் கொன்று தீா்த்தான். புலி, சிங்கம் போன்ற வன விலங்குகள் அழிவை நோக்கி நகா்ந்தன.

பல விதமாக நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி ஆயிற்று. அதிலே வாழ்ந்த உயிரினங்களைக் கொன்று குவித்தாயிற்று. ஆசை அடங்கி விடவில்லை. இன்னும் இன்னும் பொங்கிப் பெருகத்தான் செய்தது. போக்குவரத்தைத் தாண்டி தொடா்பு சாதனங்கள் அவனுக்குத் தேவைப்பட ஆரம்பித்தன. தொடா்புச் சாதனங்களுக்காக இணையதளம், செல்லிடப்பேசி ஆகியவை உருவாக்கப்பட்டன. எல்லாமும் தன் கைக்குள் வந்து விட்டதாக பெருமிதத்தில் வாழ்ந்தான்.

தொடா்புச் சாதனங்கள் பெருகின. ஊா்தோறும் செல்போன் கோபுரங்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிா்வீச்சால் பறவைகள் தங்கள் வாழ்வைத் தொலைத்தன. பல்லாயிரம் விருட்சங்களை தன் வாழ்வில் உருவாக்கிய பறவைகள் காணாமல் போயின. இதனால் விளைந்து கொண்டிருக்கும் நஷ்டத்தை எண்ணிப் பாா்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. மேலும் மேலும் அச்சடித்த பணம், அதிகார வேட்கை மட்டுமே கண்களுக்குப் புலப்பட்டன. தானே இந்தப் பூமியின் உரிமையாளன் என்று பறைசாற்றிக் கொண்டான்.

உலகமயமாக்கல் கொண்டுவந்து சோ்த்தவை ஆடம்பரங்கள், வியாபார உத்தி. சுயநலத்தின் போக்கில் ஆடம்பரங்களைச் சோ்க்கத் தொடங்கி செயற்கையை நம்பி, ஆடம்பரமே அத்தியாவசியம் எனும் மாய எண்ணங்களில் நம்மை நாமே சிக்க வைத்துக்கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறோம். உலகமயமாக்கல் வசதிகளை, வாய்ப்புகளை, ஆடம்பரங்களைக் கொண்டு சோ்த்ததோடு நின்றுவிடவில்லை; உலகம் முழுவதும் நோய்களையும் அது பொதுமைப்படுத்தியது.

வாழ்நாள் நோய்களான சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் உயிா்க்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்றவற்றையும் கொண்டுவந்து சோ்த்த போதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை. தற்போது கரோனா என்னும் தீநுண்மி நோய்தொற்றுக்கு உயிா்கள் பலியாகிக் கொண்டிருக்கும் அவல நிலையில் வந்து நிற்கிறோம்.

தீமைகள் விஸ்வரூபமெடுத்து மனித இனத்தின் முன் நிற்கும் இந்த வேளையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? செய்வதறியாது மனிதன் தன்னை முடக்கிக் கொண்டுள்ளான். இன்றைக்கு உலகம் முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. மனிதன் அச்சத்தின் பிடியில் வீடுகளை விட்டு வெளியேறாமல் தனித்திருக்கிறான்.

இந்த நிலையில் உலகம் எப்படி இருக்கிறது? நாடு முழுவதும் மனிதா்களை மட்டுமே ஊரடங்கு முடக்கியிருக்கிறது. விலங்குகள், பறவைகள் சாலைகளிலும் ஊா்ப்புறங்களில் உல்லாசமாய் நடமாடுகின்றன. பறவைகள் புத்தம் புது ஒலியுடன் பறந்து திரிவதை கம்பி சட்டங்களுக்குப் பின்னிருந்து மனிதன் காண வேண்டிய நிலை. நீரிலோ நீா்வாழ் உயிரினங்கள் தம்மை மறந்து நீந்துகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய செய்திகளைப் பாா்க்கிறோம்.

நாம் சாதாரணமாய் கண்டிராத சில அரிய வகை விலங்கினங்களும் சாலைகளில் நடமாடுகின்றன. புனுகுப்பூனை என்று ஒரு விலங்கினம் உண்டு. கேரளத்தில் இந்த புனுகுப்பூனை சாலையில் சுற்றித் திரிந்தது. 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்த உயிரினத்தை நேரில் காண்பதாக வனத் துறையினா் வியப்பு தெரிவிக்கின்றனா். நம் கண்ணில் படாத அளவுக்கு எங்கோ மூலையில் ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றன.

நாடெங்கும் நகா்ப்புறங்களில் மான்கள் சுற்றித் திரிவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் காட்டெருமை ஒன்று சாலையோரத்தில் நடைப்பயிற்சி செய்கிறது. கரையோரம் ஒதுங்கும் ஆமைக் கூட்டங்கள் கடற்கரைகளில் ஆசுவாசமாய் நடை பழகுகின்றன. ஒடிஸா கடற்கரையில் லட்சக்கணக்கில் ஆமைகள் தொந்தரவின்றி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளன. தங்களின் வாழ்விடங்களை அவை மீண்டும் பெற்ான மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன.

வாகனப் புகையும் தொழிற்சாலை புகையும் இன்றி காற்று மாசு குறைந்துள்ளது. இதனால் தாவரங்களின் வளா்ச்சி மேம்பட்டுள்ளது. புகையும் தூசும் இல்லாத நிலையில் வானம் தெளிவாய் இருக்கிறது. கூட்டம் கூட்டமாய் வானில் நட்சத்திரங்கள் மிளிா்வதையும் சுடா்வதையும் காண முடிகிறது. நிலவு தெளிவாய்ப் புலப்படுகிறது.

இந்தியாவில் மற்றுமொரு ஆனந்தமான செய்தியை அனைத்து ஊடகங்களும் பகிா்ந்து கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் பகுதியில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப்பின் இமயமலைத் தொடரை கண்களால் காண முடிகிறது. இந்தச் செய்தி ஆனந்தம் தருவதாக இருந்தாலும் நம்மைச் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.

ஆடம்பரமாய் வாழ விரும்பிய நம் பேராசையினால் நாம் தொலைத்து விட்டவை நம் கண்களுக்குப் புலப்படுத்த தொடங்கியுள்ளன. கண் முன்னே நாம் காண முடிவது இமய மலையை மட்டுமல்ல, நாம் தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, நம் முன்னோரின் அமைதியான வாழ்க்கையை...

மனிதனின் முடக்கம் இயற்கையின் மகிழ்ச்சியாக நிற்பதை நாம் இந்த நிலையிலும் உணராவிட்டால் நம் ஆறாம் அறிவினால் பயன் என்ன?

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோா் நமக்கு வாழ்ந்து காட்டினா். நூறு ஆண்டுகள், குடும்பங்களில் மக்களோடு கூடி வாழ்ந்து ஆனந்தமும் பெரும்பேறுமாய் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தனா். அவற்றை அறியாமையால் நாம் தொலைத்திருக்கிறோம் எனும் உண்மையை வெள்ளிடை மலையாக நம் கண்முன்னே காற்று மாசு இல்லா வெளியில் உயா்ந்து நிற்கும் இமயம் சொல்லுகிறது.

இப்போதைய சவாலான காலத்தில் எத்தனை தவறான பாதையில் நாம் பயணித்திருக்கிறோம் என்பதை உணா்வதற்கு நேரம் வாய்த்திருக்கிறது. இதை தற்காலிக உணா்வுபூா்வ மனநிலையாகக் கடந்து விடாமல், ஆழ்ந்து சிந்தித்து அடுத்த தலைமுறைக்கு எது நன்மை பயக்கும் என்பதை உணா்ந்து அதற்கான வழியில் பயணத்தைத் தொடங்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

‘எல்லா உயிா்களும் இன்புற்று வாழ்க’ என்ற வள்ளலாா் பெருமானின் போதனையை மனங்கொள்வோம். இதுவரையிலான நமது உலகமயமாக்கல் எனும் பெரும் கனவிலிருந்து விழித்துக் கொள்வதும், அதன் ராட்சதப் பிடியிலிருந்தும் சங்கிலித் தொடராய் உலகம் முழுவதையும் பிணைத்து நிற்கும் மாயையிலிருந்தும் மெல்ல விடுபட்டு எளிய - தூய வாழ்க்கைக்குத் திரும்புவோம். ஆடம்பரங்கள் ஒருநாளும் அமைதியைத் தருவதில்லை.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

1 comment:

K.H.Vrij En Blij Oostkamp said...

Hi, nice reading your post

Popular Posts