Monday 17 February 2020

“நேற்றைய அவமானங்களே இன்றைய வெகுமானங்கள்”

“நேற்றைய அவமானங்களே இன்றைய வெகுமானங்கள்” | ராஜேஷ்குமார் |நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக வளர்ந்து பரிணாமம் பெற்று இருக்கிறேன். ஆனால் ஆரம்ப பள்ளியிலும், கல்லூரியிலும் கல்வி பயின்ற நாட்களில் நான் ஒரு எழுத்தாளனாக உருவாவேன் என்று எண்ணிப் பார்த்தது கூட கிடையாது.

பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ வர விரும்புவார்கள். எனக்கும் ஒரு விருப்பம் இருந்தது. ஆனால் அந்த விருப்பம் கொஞ்சம் வித்தியாசமானது.

பி.எஸ்.சி. அக்ரி கோர்ஸ் படித்து விட்டு ஏதாவது ஒரு கிராமத்துக்கு போய் விவசாய அதிகாரியாக பணி புரிய வேண்டுமென்பது என் ஆழ்மன ஆசையாக இருந்தது. அதற்காக அப்போது இருந்த ப்ரி யூனிவர்ஸிடி கோர்சில் எழுபது சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டிய ஒரு கட்டாய விதி இருந்தது. நானும் கஷ்டப்பட்டு படித்தேன். ஆனால் மொத்த மதிப்பெண்ணில் 69 சதவீதமே எடுத்த காரணத்தால் என் ஆரம்ப கால விருப்பம் அடியோடு சரிந்தது. இந்த அதிர்ச்சிகரமான தோல்வியை ஜீரணித்து கொண்டு வேறு வழியில்லாமல் பி.எஸ்.சி. தாவரவியல் கோர்சை தேர்ந்தெடுத்துப் படித்தேன். அதில் நல்ல மதிப்பெண் எடுத்து தேறியதும், எம்.எஸ்.சி. தாவரவியல் கோர்சுக்கு விண்ணப்பித்தேன். எம்.எஸ்.சி. கோர்சில் மொத்தமே 6 என்ற எண்ணிக்கையில் மட்டுமே சீட் இருந்த நிலையில் அப்போது விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 50 பேர். இண்டர்வியூ மதிப்பீட்டு தரவரிசையில் ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து விடலாம் என்ற ஆசையும் தகர்ந்து போனது.

பி.எஸ்.சி. டிகிரி படித்து இருக்கிறோம். கொஞ்சம் முயன்றால் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எழுதி ஏதாவது ஒரு அரசு வேலை பெற்றிடலாம் என்ற எண்ணத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக மறுபடியும் படித்த பாடங்களையே படித்து தேர்வு எழுதினேன். சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பணம் விளையாடியதால் என்னைப் போன்றவர்களுக்கு அங்கே இடம் இல்லை என்பது முப்பது வயதாகும் போதும்தான் தெரிந்தது. உறவுகளுக்கு மத்தியில் ஒரு உதாசீனப் பொருளாக பார்க்கப்பட்டேன்.தனிமையிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறு கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த நிலையில்தான் பாலைவனத்தில் அடைமழை பெய்த மாதிரி பாரஸ்ட் காலேஜில் இருந்து ‘ஸ்பெசிமன் கலெக்டர்’ என்ற பணியிடத்துக்கு எனக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. மத்திய அரசு வேலை. என் தாத்தா மூலமாக கோவையில் இருந்த ஒரு முக்கியப் புள்ளியை பார்த்தேன். வனத்துறையில் உயர்பதவி வகித்த அவர் எது சொன்னாலும் நடக்கக்கூடிய கால கட்டம் அது. என்னுடைய தாத்தா உறுதியான குரலில் “வேலை உனக்கு கண்டிப்பாக கிடைக்கும். இன்டர்வியூவை நடத்தப் போகும் குழுவிடம் அந்த அதிகாரி உன்னைப் பற்றிய விவரங்களை கொடுத்து விட்டார். தாவரவியல் பாடங்களில் இருந்து நீ பதில் சொல்லக்கூடிய அளவுக்கு நான்கைந்து சுலபமான கேள்விகளை கேட்பார்கள். அதற்கு மட்டும் சரியான பதில் சொல்லி விடு. அடுத்த இரண்டு நாட்களில் பணி நியமன உத்தரவு உனக்கு தபாலில் வந்து விடும்” என்று சொன்னார்.

எனக்கு அப்போதே வேலை கிடைத்து விட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தீபாவளி பண்டிகையே வந்து விட்டது போன்ற ஒரு சந்தோஷம். மத்திய அரசு வேலை. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம். (1968-ல் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாய்க்கு சமம்) அன்று இரவு தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது.

மறுநாள் காலை பத்து மணிக்கு நேர்முகத் தேர்வு. கோவை கவுலி பிரவுன் சாலையில் இருக்கும் வனவியல் கல்லூரிக்கு ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட்டு போய் விட்டேன். கல்லூரி போய்ச் சேர்ந்து சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் அடங்கிய பைலை சொருகி வைத்து இருந்த சைக்கிள் கேரியரைப் பார்த்தேன்.

பகீரென்றது...

பைலை காணோம்...

வரும் வழியில் எங்கேயாவது விழுந்திருக்க வேண்டும். பதறி அடித்துக் கொண்டு உடலும் மனமும் நடுங்க சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்த வழியிலேயே தேடிக் கொண்டு போனேன். வழி நெடுக இருந்த கடைகளிலெல்லாம் விசாரித்தேன். எல்லோரும் பரிதாபப்பட்டார்களே தவிர அவர்களில் யாருமே பைலை கண்டு எடுக்கவில்லை. பத்து மணி வரைக்கும் தேடிப் பார்த்து விட்டு வேறு வழியின்றி வெறும் கையோடு சான்றிதழ்கள் இல்லாமல் நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டேன். சான்றிதழ்கள் காணாமல் போன விவரத்தை சொன்னேன். எப்படியும் கண்டுபிடித்து இரண்டு நாட்களுக்குள் கொண்டு வந்து காட்டி விடுவதாகச் சொன்னேன்.

பதிலுக்கு அவர்கள் கேலிப் புன்னகையோடு பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரிஜினல் சான்றிதழ்களை இப்படி அலட்சியமாய் தொலைத்து விட்டு வந்திருக்கிறீர்கள். இந்த ‘ஸ்பெசிமன் கலெக்டர்’ பணிக்கு பாதுகாப்பு உணர்வுதான் முக்கியமான தகுதி. அந்த தகுதியே உங்களிடம் இல்லாத போது அந்த வேலைக்கு உங்களை எப்படி தேர்வு செய்ய முடியும் என்று சொல்லி என்னுடைய பெயரை நேர்முகத் தேர்வு அட்டவணையிலிருந்தே நீக்கி விட்டார்கள்.

இப்படி வாழ்க்கையில் அந்த 21-வது வயதிலேயே தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்த எனக்கு ஒரு சிறிய வெற்றியாக நான் படித்த தேவாங்க உயர்நிலைப்பள்ளியிலேயே எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்த வேலையும் ஒரு ஆறுமாத காலம்தான். முறைப்படி நான் பி.எட். எனப்படும் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டப்படிப்பு படிக்காத காரணத்தினால் அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டேன்.

பி.எட். பட்டப்படிப்பை முடித்து விட்டால் நிரந்தரமாய் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பி.எட். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் முடித்தேன். படிப்பை முடித்ததுமே உடனே அரசு வேலைக்கான ஆர்டரும் வந்தது. ஆனால் வேலை கிடைத்த இடம் பண்ருட்டிக்கு பக்கத்தில் உள்ள மின்சார வசதியே இல்லாத ‘க்யூலக்ஸ்’ என்ற கொசுக்கள் உற்பத்தியாகும் ஒரு குக்கிராமமாக இருந்த காரணத்தால் நான் வேலையில் சேரவில்லை.

மறுபடியும் வேலை கிடைக்க தாமதமானதால் அப்பா செய்து வந்த கைத்தறி சேலைகள் தயாரிப்பு பிசினசை பார்த்துக் கொண்டேன். பிசினஸ் ஓரளவு நன்றாக நடக்கவே ஆசிரியர் வேலைக்கு போகும் முடிவை கைவிட்டு விட்டு பிசினசையே பார்த்து கொண்டேன். நன்றாகவே நடந்து வந்த பிசினஸில் திடீரென்று ஒரு மரண அடி. புனே பார்ட்டி ஒருவர் எங்களை ஏமாற்றி விட லட்சக் கணக்கில் நஷ்டம். பிசினசைத் தொடர்ந்து நடத்த முடியாமல் மூட வேண்டிய கட்டாயம். அந்த வினாடி வாழ்க்கை திகைப்பாய், பயமாய் இருந்தது. எல்லாத் திசைகளிலும் இருட்டு. இந்த சமயத்தில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள். வேறு பிசினசை மறுபடியும் தொடங்க முடியாது என்ற நிலையில் நைலான் பெல்ட் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் நானூறு ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

பெல்ட் ஆர்டருக்காக நான் ஒவ்வொரு மில்லாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் எனக்குள் ஏற்கனவே இருந்த எழுத்து ஆர்வம் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு சினிமாவை விட்டால் மாற்றாக பத்திரிகைகள் மட்டுமே பொழுது போக்கு அம்சங்களாக இருந்தது. எனவே சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

வாசகர்கள் புதுமையான நடையையும் வித்தியாசமான கதைகளையும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட நான் விஞ்ஞானத்தையும், குற்றவியல் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். வேலைக்கு போய்க் கொண்டே தினசரி இரவில் ஒரு சிறுகதை, விடுமுறை நாட்களில் இரண்டு சிறுகதைகள் கூட எழுதுவது உண்டு. எப்படியும் மாதத்துக்கு குறைந்தபட்சம் நாற்பது சிறுகதைகளாவது எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பேன். எவ்வளவு வேகத்தில் நான் சிறுகதைகளை அனுப்பினேனோ அதே வேகத்தில் பெரும்பாலான கதைகள் திரும்பி வந்தன. அத்தி பூத்தாற்போல் ஓரிரு சிறுகதைகள் மட்டும் பிரசுரமாயின. நண்பர்களும், உறவினர்களும் என்னை நேரிடையாய் பார்க்கும்போது ‘எதற்காக உனக்கு இந்த வேலை’ என்று வெளிப்படையாகவே கேட்டு கேலி செய்தார்கள். அதே நேரத்தில் எழுத்துத்துறை என்னை தள்ளிவிட முயன்றாலும் நான் அதை விடுவதாக இல்லை. விடாப் பிடியாய் எழுத ஆரம்பித்தேன். என் உத்வேகம் அதிகரித்ததது.

எந்த பத்திரிகைக்கு எது மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை வெகு சீக்கிரத்திலேயே தெரிந்து கொண்ட நான் அதன்படியே எழுத ஆரம்பித்ததால் நான் எழுதிய எல்லாக் கதைகளுமே பிரசுரமாக ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியான பிறகு 1980-ல் என்னுடைய முதல் நாவல், முதல் தொடர்கதை இரு பிரபல இதழ்களில் வெளிவந்து என்னை பெரும்பாலான வாசகர்களுக்கு அடையாளம் காட்டின.

அதன் பிறகு என் பேனா ஒரு பந்தயக் குதிரையாய் மாறியது. 1980-ல் என் முதல் நாவல். இந்த 2020-ல் 1500 நாவல்களை கடந்து இன்னமும் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் என்னுடைய கற்பனை திறனை மாற்றிக் கொள்வதால் இன்றைய வாசகர்களையும் என்னால் படிக்க வைக்க முடிகிறது. ஆன்லைனில் நிறைய எழுதுகிறேன்.

என் எழுத்துகளில் ஒரு துளி கூட ஆபாசம் இல்லாததால் எனக்கு பெண் வாசகர்கள் அதிகம். நான் எழுதிய புத்தகங்கள் எல்லாமே மின்புத்தகங்களாக மாறி விட்டதால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் இப்போது என்னுடைய படைப்புகளை படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

என்னுடைய ஆரம்பகால எழுத்துப் பணியை மட்டம் தட்டி பேசி என்னை அவமானப்படுத்திய நண்பர் ஒருவரை அண்மையில் ஒரு விழாவில் பார்க்க நேர்ந்த போது அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகள் இவை...

‘எனக்கு அப்பவே தெரியும், நீ இந்த எழுத்துத் துறையில் மிகப் பெரிய ஆளா வருவேன்னு.

அவர் சொன்னது பொய் என்று அவருக்கே தெரியும். ஆனால் அவருக்கு ஒரு உண்மை தெரியவில்லை.

அவரை போன்றவர்கள் அவமானப்படுத்தியதால்தான் ராஜேஷ்குமார் என்கிற எழுத்தாளன் ஒருவன் உருவானான் என்கிற உண்மைதான் அது.

No comments:

Popular Posts