Monday 17 February 2020

தொலைந்து போன கதை சொல்லிகள்...!

தொலைந்து போன கதை சொல்லிகள்...! ஆர்.ஜெயசீலன், துணை தாசில்தார், வேதாரண்யம். “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவன் மகளை ஒரு மந்திரவாதி தூக்கிட்டு போயிட்டு ஏழு கடலுக்கு அந்தாண்ட வச்சிட்டானாம். அப்புறம் இளவரசன் போயி கஷ்டபட்டு மீட்டுக்கிட்டு வந்தானாம்”. ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம். அது ஏழு குட்டிகளையும் ஒரு ஓநாய் தின்னுட்டாம். இப்படி ஆரம்பித்து கற்பனை கலந்த கதாபாத்திரங்களை மனித வாயிலாகவும், விலங்குகள் வாயிலாகவும், கேட்க கேட்க திகட்டாத கதைகளாக சொல்லி ஒரு பரவசத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி அவற்றை நிஜங்களாகவே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர்கள் உண்டு. அந்த கதைகளின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி தாலாட்டு கேட்காமலேயே சிறுவயதில் நம்மை தூங்க வைத்த அந்த “கதை சொல்லிகள்” நம் தாத்தா பாட்டிதான் .

சிறு வயது குழந்தைகள் என்றால் தனக்கு தெரிந்த தாலாட்டு பாடல்களை ராக சுருதியோடு பாடி அவர்களை தூங்க வைப்பதும் கொஞ்சம் விவரமான குழந்தை அடம் பிடித்தால் அவர்களை சாந்தப்படுத்தி தூங்க வைக்க அவர்கள் கையாண்டு கண்டு பிடித்த ஒரு கற்பனை உலகம் தான் “கதை உலகம்”. இந்த கதைகளில் ஒரு உண்மை கலந்த பொய் இருக்கும். நிஜங்களை மீறிய ஒரு கற்பனை இருக்கும். மதுவில் விழுந்த வண்டாக குழந்தைகள் அவர்கள் கூறும் கதைகளில் மயங்கி அவர்களை தூக்க நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வசியம் இருக்கும். இதுதான் அந்த கதை சொல்லிகளின் தனித்துவம்.

பேசாத உலகம் பேசுவது போன்றும் ஏழு கடல்களை இளவரசன் தாண்டுவது போலவும். மந்திரவாதியின் உயிர் அவன் தலைமுடியில் இருக்கிறது. “கழுதை பாடிய பாட்டு கேட்டு யானை அதனுடன் குடும்பம் நடத்தியது. இப்படி கற்பனைக்கும் எட்டாத விஷயங்களை நம் கண் முன்னே நிஜங்களாக நிறுத்தி நமக்கு ஒரு பிரமிப்பையும், அதிசயத்தையும் மனதில் உருவாக்கி அந்த மிருக கூட்டங்கள் இடத்திற்கும் மந்திரவாதி மன்னர்கள் உலகிற்கு நம்மை மனதால் அழைத்துச்செல்லும் அந்த அதீத ஆற்றலும் திறமையும், அந்த உன்னத கதை சொல்லிகளான தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் மட்டுமே இருந்தது என்றால் அது யாராலும் மறுக்க முடியாத உண்மையாக இருக்கும்.

இப்படி கற்பனை கலந்த கதைகளை சொல்லி நமக்கு பிரமிப்பையும், பயத்தையும், ஆர்வத்தையும். ஒரு பக்கம் செய்தாலும் “தொப்பி வியாபாரியும் குரங்கும்”, “முயல் ஆமை கதை”, “தெனாலிராமன் கதைகள்,” “பாட்டி வடைசுட்ட கதை,” “பருந்தால் உயிர் பறி போன ஆமை” என்று புத்திதாலித்தனம். முயற்சியின் பலன், ஏமாற்றம், பேராசையின் விளைவு, தந்திரக்காரர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற மானிட வாழ்வுக்கு தேவையான கருத்துகளை தங்கள் பேரக்குழந்தைகளிடம் விதைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. சிறுவயதில் அவர்கள் கூறிய கதைகளின் அழுத்தமும் அந்த கற்பனையில் தெரிந்த உண்மைகளையும் உணர்ந்து அதன் வழியில் சென்றவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அந்த உணர்வு கலந்த கதைகளை சொல்லிய நம் தாத்தா பாட்டிகள்தான். அந்த கதை சொல்லிகளின் கற்பனையில் உதித்த காவிய நெறிகளை மனதில் பதிய வைத்திருந்தால் அவர்கள் கூறிய கதைகளில் ஒளிந்திருக்கும் வாழ்க்கை நெறிகள் புரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்றால் மிகையாகாது.

அந்த தனி உலகத்தில் இப்படிப்பட்ட கதைகளை கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள். அந்த கதை சொல்லிகளின் யுக்தியில் சிறுவயதிலேயே நாம் வானத்தில் பறக்கலாம். சொர்க்கத்தை காணலாம். புலியோடு சண்டையிடலாம். மந்திரவாதியின் உலகத்திற்கு செல்லலாம். சூனியக்கார கிழவியை மனத்திரையில் காணலாம். காண முடியாத எச்சங்களை அவர்களிடம் கதை கேட்டு மதுவுண்ட வண்டு போல் நாம் உறங்கும் போது தோன்றும் கனவுலகத்தில் கண்டு ரசிக்க முடியும். பயங்கொள்ள முடியும். சிரிக்க முடியும். அப்படி ஒரு சக்தி அந்த மாபெரும் கதை சொல்லிகளின் கதைகளுக்கு இருந்தது.

ஆனால் இன்று அப்படியொரு உலகமும் அதை சொல்வதற்கு அப்படி ஒரு தாத்தா, பாட்டி இருந்தார்களா என்று இன்றைய சிறுவர்கள் முதல் இளம் வயது வரை உள்ளவர்கள் வரை வியப்பாக கேட்கும் நிலைமை உள்ளது. காரணம் வளர்ந்து விட்ட நவநாகரிக உலகில் பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும், முதியோர் ஆசிரமங்களும்தான். கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து தனிக்குடித்தனம் என்று ஒரு மனநிலைக்கு என்று மக்கள் மாறினார்களோ அப்பொழுதே வயதானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். சிலர் முதியோர் ஆசிரமங்களுக்கு சென்றார்கள். விளைவு குழந்தைகளுக்கு தாத்தா - பாட்டி என்ற உறவுகளின் அருமை தெரியாமல் போனது. அந்த உறவுகளின் உண்மையை உணர்ந்து தொலைந்து போன அந்த “கதை சொல்லிகளான” நம் தாத்தாக்களையும் பாட்டிமார்களையும் மீட்டெடுத்து மீண்டும் அந்த கதை உலகத்திற்கு பயணிக்க முன்னெடுப்பாளர்களாக!.

No comments:

Popular Posts