Monday 13 January 2020

தமிழர்களின் கடல் வணிகம்

உலகிலேயே தொன்மையான தொல்லியல் சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் பாரம்பரியச் சின்னங்களையும் அதிக அளவில் கொண்ட முதல் நாடாக இந்தியா மட்டுமே விளங்குகிறது. இவற்றின் மூலம் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டு கூறுகளையும் இந்திய நாடு 5 ஆயிரம் ஆண்டு காலமாக கொண்டுள்ளதுடன் பல நாடுகளுடன் கடல் வழியாகவும், நில வழியாகவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமையையும் அறிய முடிகிறது.

இந்தியாவின் தொன்மை நாகரிகமான சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் கடல் வழியாகவும் நில வழியாகவும் பல நாடுகளுக்கு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அக்காலகட்டத்தில் தழைத்தோங்கிய சுமேரியாவில் சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரைகள் பல கிடைத்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள லோதால் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் சிறந்த துறைமுகம் இருந்துள்ளது. இத்துறைமுகத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு கப்பல்கள் சென்றுள்ளன.

சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள முத்திரைகளிலும் கப்பலின் உருவம் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் திராவிட நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளியின் தொடர்ச்சியான சான்றுகள் பல தமிழகத்திலும் கிடைத்துள்ளன.

தமிழர்கள் பொதுவாக கடலோடிகளாக விளங்கியிருந்தனர். தமிழகத்தில் பல துறைமுகப்பட்டினங்கள் வழியாக மேலை நாட்டிலிருந்து வணிகர்கள் பலர் வந்துள்ளனர். அதே போன்று தமிழகத்திலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் தமிழ் வனிகர்கள் பலர் குழுக்களாகச் சென்றுள்ளனர். மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தங்களை கடலோடிகளாகவே கருதினர். அவர்களது மீன் சின்னம் அதனை புலப்படுத்தும். மேலும் மதுரைக்கருகிலுள்ள மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்துள்ள கி.மு 6- ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழக கல்வெட்டில் -கடலன் வழுதி நெடுஞ்செழியன்- என்ற பெயர் பாண்டியர்கள் கடலை எளிதில் வணிக உறவை வளர்த்துக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில் -கடலகப் பெரும்படைத்தலைவன்- என்ற பெயர் காணப்படுகிறது. கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய படைத்தலைவராக இவர் இருந்திருத்தல் வேண்டும்.

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் கடல் வணிகம் பெரிதும் சொல்லப்படுகிறது. மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு மேற்குக் கடற்கரையில் இருந்த முசிறி துறைமுகம் வழியாக தமிழ் வணிகர்கள் சென்றுள்ளனர். அதேபோன்று அந்நாடுகளிலிருந்து பல அயலக வணிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஐக்கிய நாட்டின் அவையில் இடம் பெற்றுள்ளதும் உலகமே வியக்கும் வண்ணம் இன்றளவும் பேசப்படும் கணியன் பூங்குன்றனாரின் - யாதும் ஊரே யாவரும் கேளிர்- என்ற புறநானூற்றுப் பாடல் பாடிய இடம் சேரர்களின் தலைநகரமான முசிறி துறைமுகமாகும். இங்கு தான் அவர் பல நாட்டுவணிகர்களைக் கண்டு இப்பாடலை எழுதுகின்றார். முசிறித் துறைமுகத்திற்கு வரும் படகுகளை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

முசிறி துறைமுகத்தில் இருந்து பல பொருள்களை தமிழர்கள் ஏற்றுமதி செய்து ஆப்பிரிக்க நாடுகளில் செங்கடலை ஒட்டி இருந்த துறைமுகங்களுக்கு பெருங்கப்பல்களில் ஏற்றிச் சென்றனர். அவ்வாறு செல்லும் பொழுது காற்றின் போக்கிற்கேற்ப பல கலங்களைச் செலுத்தினர்.

நமது தமிழ் வணிகர்களோ செங்கடலை ஒட்டியுள்ள துறைமுகங்களில் கப்பல்களை நிறுத்தி விட்டு, அத்துறைமுகங்களிலிருந்து தமிழகத்திலிருந்து கொண்டு வந்த வணிக பொதிகளை ஒட்டகங்களில் ஏற்றி ஆப்பிரிக்காவில் தெற்கிலிருந்து வடக்காக ஓடும் நைல் நதிக்கு எடுத்துச் செல்வர், நைல் நதியில் அலெக்சாண்டிரியா வணிக நகரத்திற்குச் செல்லும் கப்பல்களில் மீண்டும் சரக்குகளை ஏற்றுவர். நைல் நதி மத்தியத் தரைக்கடலில் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு அருகில் கடலில் கலக்கும் ஆறாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகத்தைச் சுற்றியவனாக தமிழன் இருந்திருப்பது இதிலிருந்து தெரிகிறது. அலெக்சாண்டிரியா துறைமுகம் வழியாக மத்தியத் தரைக்கடலைக் கடந்து தமிழகப் பொருள்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ரோமிற்கும் அக்காலத்தில் சென்றிருத்தல் வேண்டும்.

பொதுவாக மேலை நாட்டு வணிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் யவனர் எனக் குறிக்கின்றன. தமிழகத்திற்கும் அந்நாடுகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். யானர் என்ற சொல்லிலிருந்து பிறந்தது யவனர். யானர் என்றால் புதியவர் என்பது பொருள். எனவே தமிழகத்திற்கு வந்த மேலை நாட்டினரை யவனர் என சங்க இலக்கியங்கள் சுட்டும். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வசவசமுத்திரம், அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய துறைமுகங்களில் சங்க காலத்தில் யவனர்கள் வந்து தங்கியிருந்தமைக்கான சான்றுகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. ரோமானிய அரசரிடம் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் எச்சரிக்கை ஒன்றை விடுவதாக அவரது குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வணிகத்தால் ரோமானிய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகவும் தமிழகத்தின் நறுமணப் பொருள்களுக்காக ரோமானிய கஜானா காலியாகி வருகி்றது எனவும், அதனால் தமிழர்களின் கடல் வணிக உறவைக் கட்டுப்படுத்தும்படி அவர் எச்சரிக்கை விடுகின்ற அளவிற்கு தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.

கீழை நாடுகளான சுமத்ரா ஜாவா, சீனம் ஆகிய நாடுகளிலும் தமிழ் வணிகர்கள் பலர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே கடல் வணிகம் செய்துள்ளனர். அப்பகுதியிலும் தமிழர்கள் சென்றமைக்கான தடயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலை மற்றும் கீழை நாடுகளுடன் தமிழகம் சிறந்த வணிக உறவையும் அரசியல் உறவையும் கொண்டிருந்தது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே உலகை கடல் வழியாகச் சுற்றி வந்தவர்கள் தமிழர்கள் என்பது நன்கு விளங்கும். வரலாற்றுப் பிழைகளால் நாம் இன்னும் வாஸ்கோடகாமாவையும் கொலம்பஸையும் படித்துக் கொண்டிருப்பதால் தமிழரின் பெருமையை நம்மால் அறிய இயலவில்லை.

சு.ராஜவேலு, வருகைப் பேராசிரியர்,
அழகப்பா பல்கலைக்கழகம்

No comments:

Popular Posts