Tuesday 14 January 2020

ஞாபகம் வருதே...!

ஞாபகம் வருதே...! சேரன், திரைப்பட இயக்குனர் | பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கு சொல்ல நினைத்தபோது என் மனதிற்குள் ஏதேதோ நினைவுகளும் மாற்றங்களும் வந்து அலையடித்து போகிறது. எத்தனை மாற்றங்களை இந்த குறுகிய காலகட்டத்தில் நாம் கடந்திருக்கிறோம்..எதெல்லாம் நம்மிடமிருந்து பறிபோயிருக்கிறது எதெல்லாம் நம் முன்னேற்றத்தில் பங்கெடுத்திருக்கிறது...

எழுத நினைத்தவுடன் பேனாவும் மைபாட்டிலும் வெள்ளை பேப்பர் அடங்கிய ஒரு குயர் நோட்டில் ஒரு வெள்ளைத்தாளை கிழிக்கும் காட்சியும் தொலைந்து போய் போனின் ‘நோட்பேட்டில்’ குறிப்பு எடுக்க ஆரம்பித்து அதிலேயே டைப் பண்ணி காப்பி அண்ட் பேஸ்ட்...

பொங்கல் வாழ்த்து அல்லது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அட்டை தேடுவோம்.. அருகில் உள்ள நகரத்தில் ஒரே ஒரு கடையில் இருக்கும். ஒரு வாரம் முன்பே சென்று வாங்கி தபால் ஆபீசில் சென்று காந்தி தலை போட்ட ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி ஒரு கவரின் மேலே முகவரி எழுதும்போது அவர்களின் ஞாபகத்தோடு அனுப்பிய அந்த மெனக்கெடலுக்கான நேரத்தில் அவர்களைப் பற்றிய நினைவுகளும் பிரிவின் துயர வலிகளையும் அசைபோட்ட நேரங்கள் போனில் உடனே போட்டோ வைத்து வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டசில் பிறந்த நாள் வாழ்த்துகள் என நாமே டைப் செய்து டிசைன் பண்ணி நாம் நினைத்த ஐந்து நிமிடத்தில் செய்து முடித்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுகிறோம்.. அவர்களும் பதில் அனுப்பும் கடிதம் வரும் நாளில் அதைப்பற்றி குறிப்பிடுவார்களா என்ற ஏக்கம் போய் ஒரு லைக் போட்டு கடந்து செல்ல நாமும் புன்னகைத்து மறக்க ஆரம்பித்துவிட்டோம்.

திண்ணைப்பேச்சுகளும் மந்தைச்சாவடி அரட்டைகளும் பாலத்தின் மேல் அமர்ந்து மணிக்கணக்கில் புதிதாக வந்த படத்தை அருகில் உள்ள தியேட்டரில் 50 நாள் கழித்து வெளியிடும்போது 12 கி.மீ. சைக்கிள் மிதித்து சென்று பார்த்துவிட்டு வந்து விவாதித்து சண்டைபோட்ட காலங்களை முகநூலும், டுவிட்டரும் களவாடிக்கொண்டன. எப்போது நம் ஊருக்கு இந்தபடம் வரும் என் காத்திருந்த காலங்களை அடுத்த 5 மணி நேரத்தில் வெளியிடும் பைரசி சைட்டுகள் விழுங்கிக்கொண்டது.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விமர்சனம். நல்ல வார்த்தைகளிலும் கெட்ட கெட்ட வார்த்தைகளிலும் பொது தளத்தில் பேசும் சுதந்திரம் அடைந்தோம். ஒரு ஐடி உருவாக்கி வைத்துக்கொண்டு எவ்வளவு பெரிய தலைவர்களையும் உழைத்து முன்னேறியவர்களையும் சுட்டிக்காட்டி வசவு பேசும் முகமூடி மனிதர்களானோம்... அதே நேரம் சமூக கொடுமைகளை பார்த்து கண்டும் காணாமல் கடந்து சென்ற நாம் இந்த யுகத்தில் யாரோ ஒருவராக அந்த ஐடிகளை வைத்து சமூகவலைத்தளங்களில் கருத்துகளையும், ஊழல்களையும் அரசியல் தவறுகளை அலசி ஆராயும் சுதந்திரமும் அடைந்திருக்கிறோம் என்பதும் உண்மை.

காலார நடந்து சென்று கூட பயணிக்கும் நண்பர்களோடு நட்பு வளர்த்து பள்ளிக்கு சென்ற காலங்களை, சைக்கிள் மிதித்து பத்து கி.மீ. ஓட்டி சென்று மேல்படிப்பு படித்த நாட்களில் உடல் ஆரோக்கியம் சேமித்து வைத்த நாட்களையெல்லாம் பள்ளி கல்லூரி வாகனங்களில் காலை 5 மணிக்கு ஏறி அமர்ந்து 3 மணி நேரம் பயணித்து படிக்கும் சோம்பேறிகளாக மாற்றி வைத்துவிட்டது சமூகம் முன்னேற்றம் என்ற பெயரில்... குழந்தைகளை அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பி அழுக்கு மூட்டைகளாக திரும்பி வரும் காட்சிகளை தினம் தினம் காண்கிறோம். பள்ளிகளில் இருந்த விளையாட்டு மைதானங்கள் களவு போய் கட்டிடங்களாகவே பெருகிவிட்ட இடைவெளியில் நடக்கும் அவலம் அதை ஏற்றுக்கொண்டது.

மழை நீரில் வீட்டு வாசலில் காகிதக்கப்பல் விட அது நம்மை மழை நீரோடு அருகில் உள்ள கன்மாய் அல்லது ஏரிக்கு அழைத்துச்செல்லும் வரைபடங்களும் நீர் சேமிக்கும் முறைகளும் அழிந்து போய் வீட்டுக்கு ஒரு கேன் குடிக்க விலைக்கு வாங்கவும் பழகிக்கொண்டோம்.. கன்மாய்கள் இருந்த இடங்களில் அடுக்குமாடிக்கட்டிடங்கள் அலங்கரிக்க அங்கேதான் தண்ணீர் லாரிகள் வந்து நிற்கிறது...

இளம் வயதில் காதல் வரும்.. மனசுக்கு பிடிச்ச பெண்ணை தேர்ந்தெடுக்க காலங்களாகும்.. கண்ணசைவுக்கு ஒரு காத்திருப்பு.. காதல் சொல்ல ஒரு காத்திருப்பு கடிதம் கொடுக்க வாங்க ஒரு பயம்... கல்லூரிக்கு செல்லும்போது கூடவே பயணிக்க ஒரு பயம்..

கைவிரல் பட்ட சுகம்... மணிக்கணக்கில் அமர்ந்து பல விஷயங்களை அசைபோட்ட திருப்தியோடு அவளே எதிர்காலமாய் நினைத்த களைப்போடு உறக்கம் என காதலை அழகாக நகர்த்திச்சென்று வாழ்க்கை முழுதும் அந்த காதலில் அழகுணர்வுகளை சுமந்து வாழ்ந்த வாழ்க்கையை எல்லாம் பிடுங்கிக்கொண்டது செல்போன் விஞ்ஞானம். அது காதலின் காத்திருப்பையும் அனுபவிக்க விடவில்லை காதலின் பிரிவையும் உணரவிடவில்லை... காதலுக்கான வயசு ஒரு ஈசலின் வயசு போல குறைந்துவிட்டது... இப்படி எழுதிக்கொண்டே போகலாம்....

வாழ்க்கையில் நாம் உணர்ந்து உணர்ந்து வாழ்ந்த காலங்களில் நட்பும் உறவும் அன்பும் மனிதநேயமும் இருந்தது..இன்றைய அவசர உலகில் பணம்தேடி பொருள்தேடி ஓடும் அவலநிலையில் மாற்றம் விஞ்ஞானம் என்ற பெயரில் இதையெல்லாம் நாம் இழந்துவிட்ட நிலையில் எந்த ஒன்றிலுமே உறவுப்பாலம் இல்லாமல் போய்விட்டு எந்திர கதியாகிவிட்டோம்..மனித உணர்ச்சிகள் மழுங்கிபோய்விட்டது..

இனிய நினைவுகளை சுமக்கும் வாய்ப்பு சுருங்கிப்போய்விட்டது. இப்போது இது போன்ற விஷயங்களை கேட்ககூட காதுகள் இல்லாமல் ஹெட்செட் அடைத்துக்கொண்டது.

இன்றைய தலைமுறை பின்நாட்களில் அசைபோட ஒன்றுமே இருக்காது.. ஏன் அசைபோட அவர்களுக்கு நேரமே இருக்காது...

வாழுங்கள் வாழ்க்கையை என சொல்லக்கூட வாய்ப்பிருக்காது.. இடைப்பட்ட தலைமுறை செருக்கோடு சொல்லிக்க்கொள்ளும் நாங்களே கடைசியாக நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என... இது எதற்காக எழுதப்பட்டது என்றால் எப்போதேனும் மீண்டும் வராதா அந்த காலங்கள்.. அடுத்த தலைமுறைக்கு அந்த அனுபவங்கள் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம்தான்...

No comments:

Popular Posts