Sunday 5 January 2020

‘கார்பெட்’ விரிப்புகளின் நிறங்களை தேர்வு செய்வது எப்படி?

உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்க ஆசைப்பட்டால் வண்ணமயமான கார்பெட் தரை விரிப்பு அதை நிச்சயம் செய்யும். ஆனால் கார்பெட் வேண்டும் என நினைத்ததும் கடைக்கு சென்று விடாதீர்கள்.

பொதுவாக கார்பெட் வியாபாரிகள் பல்வேறு தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிய மாதிரிகளை தங்கள் கடையில் வைத்திருப்பார்கள். அத்தனையையும் பார்த்தால் உங்களுக்குத் தலையும் புரியாது, காலும் புரியாது. அதனால் வாங்கச் செல்லும்முன் முதலில் என்ன மாதிரியான கார்பெட் உங்களுக்குத் தேவை என்பதை கண்டுபிடியுங்கள். அப்பொழுதுதான் அழகு, சவுகரியம், நீடித்த உபயோகம் அனைத்தும் கூடிய தரமான கார்பெட் தரைவிரிப்பை பெற முடியும்.

பொதுவாக கார்பெட் வியாபாரிகள் பின்வரும் கேள்விகளை கேட்பார்கள். கார்பெட் விரிக்கப்படும் அறையின் பயன்பாடு? வீட்டில் வசிப்பவர்கள் அந்த அறைக்குள் அதிக முறை சென்று வருவார்களா? அல்லது அரிதாக செல்வார்களா? அந்த அறை அனைவரும் புழங்கும் அறையா அல்லது பொழுதுபோக்கும் அறையா? வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது, நேரடியாக அந்த அறைக்குள் நுழைய முடியுமா?

இந்தக் கேள்விகளை கேட்பதன் மூலம், எத்தகைய தரம், வடிவம், வகையைச் சேர்ந்த கார்பெட் உங்கள் வீட்டிற்கு உகந்தது என்பதை வியாபாரி நிர்ணயம் செய்வார். அதனால், உங்கள் எதிர்பார்ப்பை தெளிவாக விளக்க வேண்டும். ஓடி விளையாடும் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் புழங்கும் இடம் என அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்ற மாதிரியான கார்பெட்டைத் தேடுகின்றீர்களா? அல்லது உங்கள் அறை அழகியல் உணர்வோடு மிளிர வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா? இதையெல்லாம் நீங்கள் விளக்கலாம்.

கார்பெட் விரிக்கப்பட்ட அறையில் எத்தனை பேர் புழங்குவார்கள்? என்ற கேள்வியை கேட்பதற்கான காரணம், வெளிர் நிறங்கள் அதிகமானோர் புழங்கும் அறைகளுக்கு உகந்ததல்ல. வெளிர் நிறம் என்றால் பராமரிப்பும் கடினமாகிவிடும் என்பதால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. மற்றொரு முக்கியக் காரணம் குழந்தைகள் விளையாடுகையில் கார்பெட்டில் தடுக்கி விழக் கூடாது என்பதாகும்.

மேலும் கார்பெட்டின் நிறத்தைப் பொருத்து ஒரு அறை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காட்சியளிக்கும். அடர் நிறமாக இருந்தால் பிரமாண்டமான அறைகூடக் கொஞ்சம் குறுகலாகத் தோன்றும். அதே வெளிர் நிறங்களைப் பயன்படுத்தும்போது அறை அகலமாகத் தோன்றும். அறையினுள் சூரிய ஒளி பிரகாசிக்குமானால் அங்கு விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட்டின் இயல்பான நிறம் அப்படியே வெளிப்படும். ஆனால் வீட்டின் அறை வட திசையில் அமைந்திருந்தால் வெளிர் நிற கார்பெட்டே சரியான தேர்வாக இருக்க முடியும். இல்லாவிடில் இயற்கை வண்ணத்தை காட்டிலும் கருமையாக அவை தோன்றும்.

நீங்கள் பயன்படுத்தும் நிறங்கள் உங்கள் மனநிலையோடு நேரடித் தொடர்புடையவை. சிவப்பு, பச்சை போன்ற பளர் நிறங்கள் உங்களைச் சுறுசுறுப்படையச் செய்யும். அதே நீலம், வெள்ளை போன்ற நிறங்கள் மனதைச் சாந்தப்படுத்தும்.

No comments:

Popular Posts