Follow by Email

Wednesday, 25 December 2019

சிரிக்க வைத்தார்; சிந்திக்க வைத்தார்..

சிரிக்க வைத்தார்; சிந்திக்க வைத்தார் | கோ. மன்றவாணன், வக்கீல், மாவட்ட நீதிமன்றம், கடலூர் | இன்று(டிசம்பர் 25-ந்தேதி) சார்லி சாப்ளின் நினைவுதினம் | திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் யாரென்றால் எல்லாருடைய பதிலும் சார்லி சாப்ளின்தான். மொழியின்றிப் பேசி அனைத்துமொழி மக்களையும் ரசிகர்களாக மாற்றியவர் அவர்தான்.

வயிற்றுப் பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்வில் துயரங்களையே சுமந்து வருந்தும் மக்களையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த சீர்திருத்தவாதி அவர்தான். இந்த உலகத்தில் ஏழைகளே அதிகம். அவர்களைச் சிரிக்க வைப்பதுதான் எனது நோக்கம் என்று அவரே பல பேட்டிகளில் சொல்லியுள்ளார்.

கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு எனத் திரையிலக்கியத்தின் அத்தனை கோணங்களிலும் புத்திக் கூர்மையுடன் செயலாற்றிப் புதுமைகள் படைத்தார்.

பணக்காரர்களைப் பரிகாசம் செய்யும் வகையில் அவருடைய பல படங்களில் காட்சிகள் இருந்தன. இதனால் அமெரிக்க அரசாங்கம் சார்லி சாப்ளினை கம்யூனிஸ்டு எனக் குற்றம் சாட்டிக் கண்காணித்து வந்தது. அமெரிக்காவின் உளவு நிறுவனம் சார்லி குறித்துப் பலபக்கங்கள் கொண்ட பல கோப்புகளைப் பராமரித்தது. இதன்விளைவாக 1950-களில் அமெரிக்காவில் நுழைய முடியாத நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. காலம் மாறியது. சார்லிக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டோம் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தார்கள். அதற்குப் பிழையீடாக 1971-ல் சிறப்பு ஆஸ்கார் விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள் என்பது வரலாற்றுத் திருப்பம்.

ஹிட்லரை மையமாக வைத்து ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற படத்தை எடுத்துச் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லரும் சார்லியின் அதிதீவிர ரசிகர். அவருடைய படங்களைத் தன் அரண்மனையில் திரையிட்டுப் பார்த்து மனசை ரிலாக்ஸ் செய்து கொள்வது ஹிட்லருக்கு வழக்கம். பல நாடுகளில் இந்தப்படம் தடைசெய்யப்பட்டது என்பதாலேயே, அதன் அரசியல் வீரியத்தை நாம் அறியலாம். அந்தத் திரைப்படத்தில் ஒரு பூகோளம் வரைந்த பலூனை வைத்துச் சர்வாதிகாரி விளையாடுகிறான். அந்தப் பலூனை மனம்போன போக்கில் தூக்கிப்போட்டுப் பல கோணங்களில் எட்டி உதைக்கிறான். “உலகம் என் காலடியில். நினைக்கும் போதெல்லாம் எட்டி உதைப்பேன்” என்ற சர்வாதிகாரத்தின் கோரத்தன்மையை அந்தக் காட்சியில் வெளிப்படுத்தி இருந்தார். ஹிட்லரும் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறார்.

அன்று உலகத் தலைவர்களாக விளங்கிய ஸ்டாலின், சர்ச்சில் ஆகியோரும் ஹிட்லரைப் போலவே சார்லியின் தீவிர விசிறிகளாக இருந்துள்ளார்கள். காந்தியடிகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டும் படித்தும் இருக்கிறார் சார்லி. காந்தியின் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. எனவே லண்டனில் காந்தியைச் சந்தித்தார். காந்தியோ சார்லியின் ஒரு படத்தைக்கூடப் பார்க்காதவர். அவரிடத்தில் என்ன பேசுவது என்று தவித்தார். எந்திரங்களின் வருகையால் மனிதர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது குறித்து இருவரும் பேசிக்கொண்டார்கள். நம் ஜவஹர்லால் நேருவும் சார்லியின் தீவிர ரசிகர்தான். நீண்டநெடு நேரம் பேசி மகிழ வேண்டும் என்பதற்காகவே சார்லியுடன் ஒரே காரில் பயணித்திருக்கிறார். இந்திராவும் சார்லியைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.

ஊமைப்படங்கள் காலம் முடிந்து பேசும் படங்கள் வந்தபோதும், பேச்சற்ற படங்களையே தயாரித்து நடித்தார். உலகில் பல மொழிகள் உள்ளன. அத்தனை மொழியினருக்கும் சார்லியின் படம் அவர்கள் மொழியில் பேசுவது போலவே இருக்கும். ஆங்கிலம் பேசி நடித்தால் பிற மொழியினருக்கு அன்னியமாகிவிடும் என்று நம்பினார்.

தன் தாயின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். தாயின் மனநிலை குலைந்ததால் அவரை மனநலக் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்தார். சார்லியைப் புகழ்ந்து பேசிய மருத்துவரிடம் அந்தத்தாய், “சார்லி தன்மகன் இல்லை” எனச்சொன்னது பெருஞ்சோகம். சார்லியின் முதல் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் இறந்து போனது. அந்தக் குழந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே தாயையும் அடக்கம் செய்தார். குழந்தை இறந்தபோதும் தாய் மறைந்த போதும் சிரிக்க வைத்த மேதை அழுதது அதிகம்.

1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் சார்லி மறைந்தார். கண்ணீர் ததும்பத் ததும்ப மண்ணில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெரிய இடத்துச் சடலங்களைத் திருடிச் சென்று பணம்பறிக்கும் கொள்ளையர்கள் இருந்தனர். அதுபோலவே சார்லியின் உடலையும் திருடிச் சென்றனர். சடலத்தைத் திருப்பித்தரக் கொள்ளையர்கள் அதிகவிலை நிர்ணயம் செய்தனர். காவல் துறையினர் பலநாட்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சடலத்தைக் கைப்பற்றினர். மீண்டும் கொள்ளை அடிக்காதவாறு ஆழத்தில் அவரது உடல் மறுஅடக்கம் செய்யப்பட்டு உறுதியான கல்லறை கட்டப்பட்டது.

ஆனாலும் கல்லறையில் உள்ளது அவரது உடலல்ல என்றும் ஒருபேச்சு உலாவுகிறது.

No comments:

Popular Posts