Monday 16 December 2019

வீரத்தின் விளைநிலம் வங்கம்

பாகிஸ்தான் படைகளின் தலைவர் ஜெனரல் அமீர்அப்துல்லாகான் நியாசி 93 ஆயிரம் துருப்புகளுடன் இந்திய ராணுவத்திடம் டாக்காவில் சரணடைந்ததற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன்,

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரி.

இ ன்று (டிசம்பர் 16-ந் தேதி) உலக வரைபடத்தில் வங்காள தேசம் என்ற நாடு உருவாக வித்திட்ட தினம்.

இந்திய பிரிவினையின் போது, தெற்கு ஆசிய நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான் ஒரு நாடாக சுதந்திரம் பெற்றது. பிரிவு மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது.

மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் இருந்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது, பரந்த இந்து பெரும்பான்மை பகுதிகளில் இருந்து இந்தியா உருவாக்கப்பட்டது. மேற்கு மண்டலம் மேற்கு பாகிஸ்தான் என்றும், கிழக்கு மண்டலம் (நவீனகால வங்காளதேசம்) கிழக்கு வங்கம் என்றும், பின்னர் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகரம் மேற்கு பாகிஸ்தானின் கராச்சியில் நிறுவப்பட்டது, பின்னர் இஸ்லாமாபாத்துக்கு மாற்றப்பட்டது.

1970 மற்றும் 71-ம் ஆண்டில், பாகிஸ்தானிய ராணுவம் வங்காளதேசம் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) அப்பாவி வங்காள மக்கள் மீது, குறிப்பாக சிறுபான்மை இந்து மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை செய்ய தொடங்கியது. பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது, கிழக்கு பாகிஸ்தானியர்கள் சுயாட்சி மற்றும் சுதந்திரம் கோரினர். உள்நாட்டு ஒத்துழையாமை அலைகளை அடக்குவதற்கு ஆபரேஷன் தேடல் விளக்கு என்பது 1971-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட ராணுவ நடவடிக்கையாகும்.

இஸ்லாமியர்களின் ஆதரவைக் கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவம், உள்ளூர் மக்கள் மீதான சோதனைகளின் போது அதற்கு உதவ தீவிர மத போராளிகளை (ரசாக்கர்கள், அல்பத்ர் மற்றும் அல்ஷாம்ஸை) உருவாக்கியது. பாகிஸ்தானிய ராணுவ உறுப்பினர்கள் மற்றும் ரசாக்கர்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய போராளிகள் 4 லட்சம் வங்காளதேச பெண்கள் மற்றும் சிறுமிகளை இனப்படுகொலை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பாகிஸ்தான் ராணுவ உறுப்பினர்கள் மற்றும் துணை போராளிகள் வெகுஜன கொலை, நாடு கடத்தல், இனப்படுகொலை மற்றும் கற்பழிப்பு ஆகியவை புள்ளிவிவர ரீதியாக ஹிட்லரின் இனப்படுகொலை அளவை எட்டியது. 1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறைக்கு தப்பி லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். சிலநாட்களிலேயே அந்த எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. அகதிகள் முகாம்களை பார்வையிட்ட பிரதமர் இந்திராகாந்தி அகதிகளின் நிலை கண்டு கண்கலங்கினார்.

பாகிஸ்தானிய ராணுவம் செய்த அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலையால் வங்காளதேச சுதந்திர பிரகடனம் சிட்டகாங்கில் இருந்து முக்தி வாஹினியின் உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திராகாந்தி உத்தரவிட்டார். முக்தி வாஹினி புரட்சிப்படையினருக்கு இந்தியா உதவி கரம் நீட்டியது. இங்கு நடந்து கொண்டிருப்பதை உலக சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நடத்தும் இனப்படுகொலையை தொடர இனியும் அனுமதிக்க முடியாது என அந்த இரும்பு பெண் மணி முழங்கினர். இந்த சூழ்நிலையில் 1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி முன்னணி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய விமான தளங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டு மழை பொழிந்தது. கொதித்தெழுந்தார் இந்திராகாந்தி.

இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய இந்திரா கட்டளையிட்டார். ஜெனரல் மானெக்‌ஷா தலைமையில் இந்த போர் தொடங்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை தெரிவித்தாலும், ரஷியாவின் ஆதரவுடன் தைரியமாக இந்தியா போர்க்களத்தில் குதித்தது. இங்கிலாந்து தன் ஆதரவை அமெரிக்காவுக்கு தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு உதவியாக இருந்த சீனாவும் இந்த போரில் ஈடுபடவில்லை. போர் தொடங்கியது. இந்தியாவின் மூன்று சக்திகளும் ஒற்றுமையாக போராடியது இதுவே முதல் முறையாகும்.

இந்திய ராணுவம், கிழக்கு ஆக்கிரமிப்பு, மேற்கு தற்காப்பு போர் தந்திரத்தை பின்பற்றியது. இந்திய ராணுவம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் படைகளைத் தவிர்த்து, பின்புறத்தில் உள்ள நதி படகுகள் குறுக்குவெட்டுகள் பாலங்கள் நோக்கிச் சென்று தாக்கியது. டிசம்பர் 13, 14-ந் தேதிகளில் இந்திய துருப்புகள் டாக்காவை அடைந்தன. மேற்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வுகளுக்கு இந்தியா விரைவாக பதிலளித்து, சுமார் 15,010 கிலோமீட்டர் பாகிஸ்தான் பிரதேசத்தை கைப்பற்றியது. இந்திய விமானப்படை மேற்கிலும், கிழக்கிலும் பாக் இலக்குகளை தாக்கி பாக் தகவல் தொடர்பு முறையை சீர்குலைத்தது. எரிபொருள் மற்றும் வெடிமருந்து இருப்புக்களை அழித்து மற்றும் தரைப்படை முன்னேற்றத்தை தடுத்து விரிவான சேதத்தை ஏற்படுத்தியது.

1971-ம் ஆண்டு போரில் இந்திய விமானப்படை இரு முனைகளிலும் இந்திய தரைப்படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கியது.

மேற்கு கடற்படையின் கடற்படை போர்க்குழு டிசம்பர் 4 மற்றும் 5-ந் தேதிகளில் கராச்சி துறைமுகத்தை தாக்கி 3 கப்பல்களை அழித்தது. இது துறைமுகத்தின் எண்ணெய் தளத்தில் விரிவான சேதத்தை ஏற்படுத்தியது. டிசம்பர் மாதம் 8-ந் தேதி கராச்சி துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே சமயம், இன்னுமொரு போர்குழு மக்ரான் கடற்கரையில் ஒரு திசை திருப்பல் தந்திரத்தை மேற்கொண்டு ஒரு பாக் வணிக கப்பலை கைப்பற்றியது. இந்த துணிச்சலான செயல்களால் பாக் போர் கப்பல்கள் சக்தியை இழந்து துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

16-12-1971 அன்று பாகிஸ்தான் படைகளின் தலைவர் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, 93 ஆயிரம் துருப்புகளுடன், இந்திய ராணுவத்திடம் டாக்காவில் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய ராணுவ சரணடைதல் நிகழ்ச்சி ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அன்று முதல் வங்காளதேசம் சுதந்திர நாடானது. அன்றே அந்த நாட்டை இந்தியா அங்கீகரித்தது. இந்த விவகாரத்தில் இரும்பு பெண்மணி இந்திராகாந்தி எடுத்த தடாலடியான நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதியை அலற வைத்து உலக நாட்டு தலைவர்களின் புருவத்தை விரியச் செய்தது

யுத்தம் வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இது வரலாற்றில் மிக குறுகிய போர்களில் ஒன்று ஆகும். இந்திய ராணுவத்தின் சுமார் 600 அதிகாரிகள் மற்றும் வீரர்கள், 4 பரம் வீர் சக்ரா, 76 மகா வீர் சக்ரா மற்றும் 513 வீர் சக்ரா வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர்.

இந்த போரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2,908 பேர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார்கள். இந்த மிக உயர்ந்த தியாகத்திற்கு நாம் தலை வணங்கி வணக்கம் செய்வோம். இன்று வங்காள தேச மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கிறார்கள் என்றால் அதன் முழுமையான பெருமை இந்திராகாந்தியையும், இந்திய ராணுவத்தையுமே சேரும்.

No comments:

Popular Posts