Sunday 17 November 2019

காலம் மறக்காத காதல் மன்னன்

காலம் மறக்காத காதல் மன்னன்

ஆரூர்தாஸ், திரைப்பட வசனக்கர்த்தா

இ ன்று (நவம்பர் 17-ந்தேதி) நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த தினம்.

17.11.1920-ல் புதுக்கோட்டை சமஸ்தான அரண்மனையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து புதுக்கோட்டையில் குடியேறிய - ராமசுவாமி அய்யர்- கங்கம்மா தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு ‘கணபதி சுப்ரமணியன் சர்மா’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டு, பின்னர் ராமசுவாமி கணேசன் என்று மாறியது. அந்தக் குழந்தைதான் பின் நாட்களில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் என்று திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கியது.

சிறுவன் கணேசனுக்கு பத்து வயது நிறைவதற்குள் 1930 ஜூன் 30-ல் தந்தை ராமசுவாமி அய்யர் திடீரென காலமாகி விடவே, அவருடைய தம்பியின் இரண்டாந்தாரமாக வாழ்ந்த பிராமண குலத்தைச் சேராத பெண்ணிடம் கணேசன் வளர்ந்தார். அவருடன்கூடவே அந்தப் பெண்ணுக்கும் தன் சிற்றப்பாவுக்கும் பிறந்த முத்துலட்சுமி என்னும் குழந்தையும் வளர்ந்து வந்தது. இந்தப் பெண்தான் பிற்காலத்தில் இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவராகி, ஒரு தெலுங்கு மொழி பேசும் இளைஞரை காதலித்து, மணந்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்று பெரும் புகழ் பெற்றார். புதுக்கோட்டை அரசுக் கல்லூரியில் பயின்று, வேதியியலில் (கெமிஸ்ட்ரி) இளங்கலைப் பட்டம் பெற்ற கணேசன் சென்னை வந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 19 வயதிலேயே மாயவரம் அருகில் உள்ள மங்கநல்லூரைச் சேர்ந்த அலர்மேலு என்ற ‘பாப்ஜி’ என்னும் செல்லப் பெயர் கொண்ட பிராமண பெண்ணை மணந்து கொண்டார்.

அவர்களுக்கு முறையே ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் பிறந்தனர். இவர்களில் ரேவதி, கமலா, ஜெயலட்சுமி ஆகிய மூவரும் மருத்துவக் கல்வி பயின்று டாக்டர் ஆனார்கள். கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருந்த கணேசனுக்கு சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு அதை அவருடைய தூரத்து உறவினரான எஸ்.எஸ். வாசனிடம் தெரிவித்து வாய்ப்பளிக்கும்படி வேண்டினார். அதை ஏற்று வாசன் தனது ஜெமினி ஸ்டூடியோவில் ‘கேஸ்டிங் டிபார்ட்மென்ட்’ என்னும் நடிகர்- நடிகையரைப் பேட்டி கண்டு (வாய்ப்பு கேட்டு வருபவர்களை) அவர்களைப் பற்றிய வாழ்க்கை மற்றும் திறமைகள் பற்றிக் குறித்து வைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இதில் விந்தை என்னவென்றால், பின்நாட்களில் மிகப்பிரபலமான ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடிகையர் திலகம் சாவித்திரி, குணசித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் முதலியோர் கணேசனிடம் வந்து நடிக்க வாய்ப்பு கேட்டவர்கள். இதை சிவாஜியே ‘பாசமலர்’ படப்பிடிப்பின் போது ஜெமினியை நேரில் வைத்துக் கொண்டு என்னிடம் கூறி இருக்கிறார்.

கணேசனின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்தது. சிறிய வேஷங்களில் நடிக்க வைத்து வாசன் ஜெமினியை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினார். அதன் மூலம் ராமசாமி கணேசன் இப்போது ‘ஜெமினி கணேசன்’ என்று அழைக்கப்பட்டார். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த பல படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றிருந்த ‘புஷ்பவல்லி’ கணேசனின் அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் தொடங்கினார். பதிலுக்கு அவரும் புஷ்பவல்லியின் அழகிலும் நடிப்பிலும் மயங்கி, தனக்கு மனைவியும் பெண் குழந்தைகளும் இருப்பதை மறந்து புஷ்பவல்லியை ‘இளையதாரம்’ ஆக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ‘ரேகா’ ‘ராதா’ என்று பெயரிடப் பெற்றனர். இவர்களில் ரேகா பின்நாட்களில் இந்திப் பட உலகில் நுழைந்து கதாநாயகியாக நடித்துப் பிரபலமாகி ‘நம்பர் ஒன்’ ஹீரோயின் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனின் ஜாதக அமைப்போ என்னவோ- அவரது காதல் கடலில் மூன்றாம் முறையாகப் புயல் மையம் கொண்டு வேகமாக வீசத் தொடங்கியது.

1953-ல் தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற ‘தேவதாஸ்’ படத்தில் ஏ.நாகேஸ்வரராவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்ற சாவித்திரி, நாராயணன் கம்பெனி தயாரித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படத்தில் ஜெமினி கணேசனின் ஜோடியாக நடித்தார். அப்போது கதாநாயக நடிகருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும் பெண் குழந்தைகளும் இருக்கின்றனர் என்று நன்றாகத் தெரிந்திருந்தும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் சாவித்திரி கணேசனை தீவிரமாக காதலித்தார். அனைத்தும் அறிந்திருந்தும் ‘எத்தனை நடிகைகள் வந்தாலும், எத்தனை முறை ஆனாலும் நான் அவர்களைக் காதலித்து மணந்து கொள்ளத் தயார்’ எனச் சொல்லாமல் சொல்வது போன்று கணேசன் சாவித்திரியின் கரம் பற்றி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது மயில் கழுத்தில் மாங்கல்யம் புனைந்து ‘மனம்போல் மாங்கல்யம்’ என்னும் படத்தின் பெயரை உறுதிப்படுத்தினார்.

சிறிது நாட்கள் தங்கள் திருமணம் வெளியில் தெரியாதபடி ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் நாளாக ஆக வெளிச்சம் பரவ தொடங்கியது. இதை இரண்டாம் தாரமான புஷ்பவல்லி பொருட்படுத்தவில்லை. முறையாக மணந்து கொண்டு முதல் தாரமான பாப்ஜி அம்மாள் தன் கணவர் மீது கொண்டிருந்த பதிபக்தியின் காரணமாக பூமாதேவி போல பொறுத்துக் கொண்டார்.

ஜெமினி கணேசன்- சாவித்திரி தம்பதியினருக்கு 1958-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்து அதற்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயரிட்டனர். 1965-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் நாள் ஜெமினி கணேசன் சாவித்திரிக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து அதற்கு ‘சதீஷ்’ என்று பெயரிட்டார்கள். அவன் இப்பொழுது ‘கலிபோர்னியா’ நகரில் ‘சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து அங்கேயே நிரந்தரமாக மனைவி, மகனுடன் தங்கி இருக்கிறான்.

ஜெமினி கணேசனுக்கு மூன்று மனைவிகளின் மூலமாகப் பிறந்த எட்டு குழந்தைகளில் இந்த சதீஷ் ஒரே ஒருவன் மட்டுமே ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ல் பெங்களூர் மேயர் கே.எம்.நாகண்ணா தயாரித்த ‘செளபாக்கியவதி’ என்ற படத்திற்கு ஏ.எல். நாராயணன் வசனகர்த்தாவாகவும் நான் துணை வசனகர்த்தா மற்றும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தோம். அந்த படப்பிடிப்பின் போது ஜெமினி- சாவித்திரி இருவருடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது நல்ல நட்பாக மாறி என் மீது அவர்கள் இருவரும் அன்பு கொண்டனர்.

பின்நாளில் நான் தனியாக முதன் முதலாக கதை வசனம் எழுதி ‘சாண்டோ’ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த ‘வாழ வைத்த தெய்வம்’ படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அந்த தொடர்பில் அவர் 1959-ல் ஒரு நாள் என்னை அழைத்து சென்று ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் செய்து ‘பாசமலர்’ படத்திற்கு வசனம், எழுத வைத்தார். ‘பாசமலர்’ பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டு எனக்குப் புகழ் கொடுத்தது. அதன் மூலமாக ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பார்மகளே பார்’, ‘அன்னை இல்லம்’, ‘புதிய பறவை’ மற்றும் ‘தெய்வமகன்’ போன்று சிவாஜி நடித்த 28 வெற்றி படங்களுக்கு வசனம் எழுதிப் பெரும் புகழ் பெறக்கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிட்டியது என்றால் அதற்குக் காரணம் ஜெமினி கணேசன்தான் என்றால் அது சற்றும் மிகை அல்ல.

நான் கதை வசனம் எழுதிய முதல் படத்திலும், முதன் முதலாக நான் இயக்கிய ‘பெண் என்றால் பெண்’ படத்திலும் ஜெமினி கணேசன்தான் நடித்தார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நான் திரைப்பட உலகில் அடி எடுத்து வைத்து இது 66-வது ஆண்டு ஆரம்ப காலத்தில் என் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருந்த ஜெமினி கணேசன் தன் வாழ்நாளில் ‘கல்யாணப் பரிசு’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ மற்றும் 1961-ல் நான் வசனம் எழுதிய ‘பாசமலர்’ ‘பார்த்தால் பசி தீரும்’ போன்ற நூற்றுக்கணக்கான வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்னர் தனது 85-வது வயதில் 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி மறைந்தார்.

இன்று 17.11.2019 அவருடைய 99 வயது நிறைவு பெற்று 100-வது ஆண்டு ஆரம்பம் ஆகிறது. காலம் மறக்காத காதல் மன்னனுடன் பழகிய நினைவுகள் பசுமையானவை!..

No comments:

Popular Posts