Thursday 21 November 2019

தொலைக்காட்சி: அன்றும், இன்றும்...!

தொலைக்காட்சி: அன்றும், இன்றும்...!

பாத்திமாபாபு

(தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்)

இ ன்று (நவம்பர் 21-ந்தேதி) உலக தொலைக்காட்சி தினம்.

தெருவோரங்களில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி செல்லும் மாணவர்களையும், வார பத்திரிகைகளையும், மாத நாவல்களையும் படிப்பதை மட்டுமே ஒரே பொழுதுபோக்காக கொண்ட வீட்டின் பெண்களையும் ஒரு சேர வீட்டின் ஹாலில் கட்டிப்போட்ட சாதனம் டெலிவிஷன்.

குடும்பத்தலைவர் மாதம் ஒருமுறை கூட்டிப் போகும் சினிமா, நாடகம், பீச், தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்தவர்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறந்தது டெலிவிஷன் பெட்டியால் தான் என்றால் அது மிகையாகாது.

சபாக்களில் நாடகங்கள் சற்று சரிவைச் சந்தித்தது சினிமாவின் வரவினால். ஆனால் பெரும் சரிவு தொலைக்காட்சித் தொடர்களால் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் சொல்லிக் கொடுத்துச் சென்ற கிரிக்கெட்டின் மீது இந்திய இளைஞர்களுக்கு பெரும் மோகம் உண்டு. ஆனால் ‘டெஸ்ட் மேட்ச்’கள் நடந்தால் அதை நேரில் பார்க்கும் பாக்கியம் வெகு சிலருக்கே கிடைத்தது. மற்றவர்கள் ரேடியோவில் கேட்டு திருப்தி பட்டுக்கொண்டார்கள்.

தொலைக்காட்சி வந்த பிறகு நேரில் காண்பதை விட மிக துல்லியமாக சுவாரசியமான அனுபவத்தை தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது. ‘அவுட்’டாகும் காட்சிகளை ஸ்லோமோஷனிலும், விளையாடும் ஆட்டக்காரர்களை குளோசப்பிலும் என்று பட்டையைக் கிளப்பியது அது. மேட்ச் நடக்கும் நாட்களில் தெருக்களில் ‘டிராபிக்’ சுத்தமாக இருக்காது.

இன்றளவும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க வெளியே வருவது கூட தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு தான் என்பது தொலைக்காட்சிகள் எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து உள்ளது என்பதை நமக்கு சுட்டிக்காட்டும். எனக்கும் தொலைக்காட்சிக்குமான முதல் நினைவுகளை கிளறி பார்க்கிறேன்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 1976 -ம் ஆண்டு. தெருவிற்கு ஒரு வீட்டில்தான் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அக்கம்பக்கத்தினர் எல்லாம் வீட்டாரோடு இணக்கமாக இருந்தால்தான் டெலிவிஷன் பார்க்க முடியும். சினிமா பாடல்கள் ஒளிபரப்பாகும் வெள்ளிக்கிழமை ‘ஒளியும் ஒலியும்’ நாட்களில் டிக்கெட் போட்டு ஆட்களை அனுமதித்த வீடுகளை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

விவசாயம் பார்க்கவில்லை என்றாலும் ‘வயலும் வாழ்வும்’ பார்த்தவர்கள் தமிழகத்தில் உண்டு. நன்னன் சொல்லிக்கொடுத்த தமிழ் பால பாடங்களை என் வயதை ஒத்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் அப்படி அக்கம் பக்க வீடுகளுக்கு சென்று தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்காததால் வகுப்பில் தோழிகள் பாடல்கள் ஒளிபரப்பாகும் போது அதன் காட்சி கோர்வையும் ஒளிபரப்பாகிறது என்று சொன்னதை விழிகள் விரிய கேட்ட ஞாபகம். அந்த நொடி இன்றளவும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

இப்படித்தான் ஒரு நாள் என் தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்று நாங்கள் ஒன்றாக செல்லும் இந்தி கிளாஸ் புறப்படுவதற்காக அவளுக்காக காத்திருந்த அந்த நிமிடங்களில் அவள் வீட்டு ஹாலில் தொலைக்காட்சி செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பட்டாம்பூச்சிக் கண்கள் படபடக்க, சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு, இதைவிட அழகான ஒரு முகத்தை பார்த்து இருக்கவே முடியாது என்னும் வண்ணம் ஒரு பெண்மணி செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். வைத்த கண் வாங்காமல் என்று சொல்வார்களே அப்படி பார்த்தேன். அந்த நிமிடங்கள் தான் என் வாழ்க்கையின் பாதையை எனக்கு காட்டிய தருணம் என்று சொல்வேன். எனக்குள் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற விதையைத் தூவிய நாள் அது. ஆம் ஷோபனா ரவி யைத்தான் சொல்கிறேன். நான் தொலைக்காட்சியில் சேர்ந்த போது அவருக்கு பன்னிரண்டரை ஆண்டுகால அனுபவம் செய்தி வாசிப்பு துறையில் இருந்தது. அதற்குப் பிறகு சேர்ந்த என்னை அவரோடு ஒப்பிட்டு சொல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு கூச்சம் இன்றளவும் ஓடும். காரணம் பீஷ்மர் ஆகிய அவரை விஞ்சியதாக நான் என்றுமே எண்ணியதில்லை இன்றளவும்.

9 மணி ஆனால் மாநில ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து இந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்தி பாடல் நிகழ்ச்சியான சித்ரஹார், சனிக்கிழமைகளில் இந்தி திரைப்படம், ஒன்பது மணிக்கு பிறகு ஒளிபரப்பாகும் ஜுனூன், ஹம்லோக் போன்ற இந்தித் தொடர்கள் தான் பார்க்க முடியும்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான, சுஜாதா கதையான, 47 நாட்கள், முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடப்பதை போன்ற ஒரு கதைக்களம் கொண்டது. அந்த திரைப்படத்தில் கதாநாயகனான சிரஞ்சீவி தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்கள் மாற்ற மாற்ற வேறு வேறு நிகழ்ச்சிகள் தோன்றுவதைப் போல காட்டியிருப்பார். அது அந்த காலகட்டத்தில் எங்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியம். ஏனென்றால் எங்களுக்கு சேனல் திருப்புவதற்கான அவசியம் இல்லாத காலகட்டம் அது. பிறகு வந்தது சென்னையில் மெட்ரோ ஒளிபரப்பு. இப்போதோ நூற்றுக்கணக்கான சேனல்கள் காண கிடைக்கின்றன. இப்படி நடக்கும் என்பதை அந்த காலகட்டத்தில் சத்தியமாக நம்பி இருக்க மாட்டோம்.

தொலைக்காட்சி வரமா சாபமா என்ற பட்டிமன்றம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை லட்சக்கணக்கான குடும்பங்கள் வருமானத்திற்கு வழிவகை செய்தது தொலைக்காட்சி தான். இன்று எத்தனையோ சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் என்று தொலைக்காட்சியின் விஸ்தீரணத்தால் வாழ்வு பெற்றவர்களை வார்த்தைகளில் அடக்க முடியாது.

திரை அரங்குகளில் சினிமாக்கள் 100 நாட்கள், 25 வாரங்கள் என்று வெள்ளி விழா கண்டு கொண்டிருந்த காலம் மாறி மக்கள் தொலைக்காட்சியில் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மாறும் அளவுக்கு திரைப்படங்களை வீடுகளுக்கு கொண்டு வந்து மக்களுக்கு வழங்கியது தொலைக்காட்சி தான். இப்போது அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்று வெப் உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கும் காலகட்டங்களில் தொலைக்காட்சியை இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

No comments:

Popular Posts