Wednesday 20 November 2019

எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?

எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?

-ராஜேஷ்குமார்

இ ப்போது நான் சொல்லப் போற ஓர் உண்மை பலருக்குத் தெரியாது.ஒரு நபர் பாடகராக வரவேண்டுமென்றால் ஒரு சங்கீத வித்வானிடம் போய் முறையாய் சங்கீதம் பயின்று பின்னாளில் சிறந்த பாடகராய் உருவாகலாம். அதே போல் ஒரு நபர் ஓவியராக வரவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய துறை வாய்ந்த ஓவியக்கலைஞர்களிடம் போய் பயிற்சி எடுத்துக் கொண்டு ஒரு சிறந்த ஓவியராய் திகழலாம்.

இப்படி எந்தத்துறையில் யார் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று என்று விருப்பப்படுகிறார்களோ அவர்கள் அந்தத் திறமை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போய் குருகுலவாசம் செய்யாத குறையாய் ஓராண்டு ஈராண்டு என்று பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அது சாத்தியமாகும்.

ஆனால் ஓர் எழுத்தாளரை அப்படி பயிற்சியின் மூலம் உருவாக்கிட முடியாது. ஓர் எழுத்தாளன் என்பவன் சுயமாக தனக்குள் உருவாக வேண்டும். அவனே குருவாகவும், சிஷ்யனாகவும் இருந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் மட்டுமே அந்த நபர் எழுத்தாளனாக பத்திரிகை உலகில் பவனி வர முடியும். அது காலம் காலமாய் நடந்து வருகிற வரலாறு சொல்கிற உண்மை.

அண்மையில் ஒரு கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நீண்ட கேள்வி.

“சார்.. அன்றைக்கு இருந்த வார இதழ்களும், நாளிதழ்களும் இன்றைக்கும் வந்து கொண்டிருக்கின்றன. 1960 -ல் பிரபலமாய் இருந்து எழுத்தாளர்கள் மு.வ., அகிலன், ஜெயகாந்தன், சாண்டில்யன், கோவி மணிசேகரன், சாவி, நா.பா., தமிழ்வாணன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

1960-க்கு பின் அந்த எழுத்தாளுமைகளுக்குப் பின்னால் இன்னொரு எழுத்தாளர்அணி மெள்ள மெள்ள உருவாகி 1970 முதல் 1990 வரை எழுத்துஉலகில் கொடிகட்டி பறந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் சுஜாதா, லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், பாகம் கிருஷ்ணன், வேதா கோபாலன், கி.ராஜநாராயணன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், விமலாரமணி, ஜோதிர்லதா கிரிஜா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது அந்த எழுத்தாள படைக்குப் பின்னால் நீங்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சவுந்திரராஜன், தேவிபாலா, பா.ராகவன் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் உருவாகி எழுத்து உலகில் வெற்றிகரமாக பவனி வந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களின் இந்த சம காலத்து எழுத்தாளர்களுக்குப் பின்னால் எந்த ஒரு எழுத்தாளர் அணியும் உருவாகாமல் அந்த இடம் ஒரு வெற்று மைதானம் போல் காணப்படுகிறதே, இதற்குரிய காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

இப்படியொரு நீண்ட கேள்வியை அவர் கேட்டு விட்டு உட்கார்ந்ததும் நான் அவர்களுக்கு பதில் சொன்னேன்.

‘நானும், என் சமகால எழுத்தாளர்களும் எழுத்துப் பணியில் இப்போதும் பிசியாக இருக்கிறோம். காரணம் நாங்கள் எல்லோரும் ஒரு பாணியில் கதைகள் எழுதாமல் அவரவர்களுக்குரிய தனித்தனி பாணியில் எழுத்துப் பணியைத் தொடர்வதுதான். அப்புறம் இன்னொரு விஷயம் எங்களுக்குப் பின்னால் இளம் எழுத்தாளர்கள் உருவாகவே இல்லை என்று நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சில எழுத்தாளர்கள் வீரியத்தோடு உருவானார்கள். முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் எழுதியும் வந்தார்கள். எங்களுக்குப் பின்னால் சிறந்த எழுத்தாளர்களாக வலம் வருவார்கள் என்றும் நினைத்தேன்.

ஆனால் காலப்போக்கில் அவர்கள் எழுதுவதை சிறிது சிறிதாய் குறைத்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அந்த எழுத்துப் பணியும் அறவே நின்று விட்டது. சென்னையில் நடந்த ஒரு எழுத்தாளர் வீட்டு திருமணத்தில் எனக்கு மிகவும் பிடித்த அந்த இளம் எழுத்தாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

‘என்ன தம்பி....நாலைஞ்சு வருஷத்துக்கு முந்தி வரை உங்களுடைய சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துகிட்டு இருந்தது. எல்லாக் கதைகளுமே சிறப்பாய் இருந்தது. அதுக்கப்புறம் உங்களுடைய படைப்புகளையே என்னால் பார்க்க முடியலேயே? என்ன விஷயம்? வீட்ல, வேலை செய்யற இடத்துல ஏதாவது பிரச்சினையா? இல்லை உடம்புக்கு ஏதும் முடியலையா?

அந்த இளம் எழுத்தாளர் சிரித்தார்

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்...”

“அப்புறம் என்ன?”

“சார்... இந்த எழுத்துத் துறையில் எவ்வளவு வருஷம் எழுதினாலும் பெரிசா எதுவும் சம்பாதிக்க முடியாது. அதுவுமில்லாமலே வெளியில் நம்ம பேரைச் சொன்னா எல்லோருக்கும் தெரியற அளவுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்காது.. அதனால...”

“அதனால?”

“சினிமாவுக்கு போயிட்டேன். பிரபல ஹீரோக்களுக்கு செட்டாகிற மாதிரி கைவசம் பத்து பதினைந்து கதை வெச்சிருக்கேன் சார். மாசத்துல பத்து நாள் சென்னைக்கு வந்து தங்கி தயாரிப்பாளர்கள் கிட்டேயும், இயக்குனர்கள்கிட்டேயும் அப்பாய்மெண்ட் வாங்கி கதைகளைச் சொல்லிக்கிட்டிருக்கேன் சார்...”

“அவங்க என்ன சொல்றாங்க...?’

“கதை நல்லாயிருக்கு... ஒரு ஆறுமாசம் பொறுங்க... ஹீரோ வேற ஒரு சூட்டிங்கில் இருக்கார்.. அவர் ப்ரீயானதும் அவர் கிட்ட ஒரு தடவை கதை சொல்லுங்க.. அவர் ஓ.கே. சொல்லிட்டார்னா மத்த விஷயங்ளை பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க சார்...?

“அப்படி எந்த ஒரு ஹீரோவைப் பார்த்தாவது கதை சொல்லியிருக்கிறீர்களா?”

“இல்ல சார்’

“ஏன் ஹீரோவைப் பார்த்து பேச முடியலை...?’

“ஏதோ ஒரு காரணத்தால தள்ளி தள்ளி போகுது சார்... எப்படியும் இந்த மாசத்துல மூணு முக்கியமான ஹீரோவைப் பார்த்து பேசிடுவேன்.. ஒரே ஒரு படம் வந்தா போதும் சார் அப்புறம் என்னை தேடி தயாரிப்பாளர்கள் வருவாங்க...”

“தம்பி! ஒரு நல்ல ரைட்டராய் வரக்கூடிய திறமை உங்ககிட்ட இருக்கு... சிறுகதை நாவல்னு எழுதிகிட்டே சினிமா வாய்ப்பையும் தேடலாமே?’

அது சரிபட்டு வராது சார்... ஒரே நபர் ரெண்டு குதிரையில் சவாரி பண்ண முடியாது”

“தம்பி... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?”

“என்ன சார்?’

“இதுக்கு முன்னாடி பல எழுத்தாளர்கள் சினிமாவுக்கு போயிருக்காங்க.. ஜெயிச்சிருக்காங்க.. உதாரணத்திற்கு அகிலன், சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களைச் சொல்லலாம். அவங்க சினிமாவுக்கு தன்னோட பங்களிப்பைச் கொடுத்து இருந்தாலும் அந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் அவர்களை ஓர் எழுத்தாளராகத்தான் பார்க்கிறார்களே தவிர சினிமாவைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை”

“நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனா ஓவர் நைட்ல புகழோட உச்சிக்குப் போகனும்ன்னா பத்திரிகைகளில் எழுதறதை விட சினிமாவுக்கு முயற்சி பண்றதுதான் சரி...”

அதற்குப் பிறகு நான் அவரோடு விவாதம் செய்வதை நிறுத்தி விட்டேன்.

இந்த இளம் எழுத்தாளர் இப்படியென்றால் இன்னொரு திறமைமிக்க எழுத்தாளரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன காரணம் வேறு மாதிரியிருந்தது.

“சார்... முதல் அஞ்சாறு வருஷம் அருவி கொட்டற தினுசில் கற்பனை வளம் இருந்தது. எல்லா பத்திரிகைக்கும் எழுதினேன். கடந்த ரெண்டு வருஷ காலமாய் எழுத எதுவுமே தோணல. ஒரு மணி நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்து எழுதுறது ரொம்ப கஷ்டமா தெரியுது. ஒரே ப்ளான்காய் இருக்கு. எழுதுறதையே விட்டுட்டேன்.”

இப்படியாக ஏதேதோ பிரச்சினைகள் காரணமாக எத்தனையோ திறமைமிக்க இளம் எழுத்தாளர்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் மங்கி மறைந்து காணாமல் போய் விட்டார்கள்.

எழுத்தாற்றல் என்பது ஒரு வரம். அந்த வரம் பெற்றவர்கள் கடின உழைப்புக்கு அஞ்சக்கூடாது. அது ஒரு வேலை என்று நினைக்காமல் ஒரு தவமாய் நினைத்து செயல்பட வேண்டும். நிறைய படிப்பதும், சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், அவலங்களையும் உற்று பார்த்து அதற்கு தீர்வு காணும் வகையில் படைப்புகளை எழுதுவதும் ஒரு எழுத்தாளரின் கடமை.

சில பேர் எழுத்தாளர்களின் படைப்புகளை இலக்கியம், ஜனரஞ்சகம் என்று பார்த்து குறுக்கே சுவர் கட்டி சந்தோஷப்படுவார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்லும் எந்த ஒரு படைப்பும் அந்த எழுத்தாளனுக்கு பெருமை பெற்று தரும். என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு புத்தகத்தை இரண்டு மூன்று முறை படித்தாலும் புரியவில்லையென்றால் அது இலக்கியம். ஒருமுறை படித்ததுமே புரிந்து விட்டால் ஜனரஞ்சகம்.

அய்யா ஆதித்தனார் ‘தினத்தந்தி’ நாளிதழை ஆரம்பித்த பின்புதான் நம் மக்கள் தமிழையே ஒழுங்காக பேச ஆரம்பித்தார்கள். அதே போல் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எழுத்துத்துறைக்கு வந்த பின்புதான் மக்களின் வாசிப்பு பழக்கம் அதிகமாயிற்று.

நம்மிடையே திறமைமிக்க வளரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறேன். கதை எழுதும் ஆர்வம் யாருக்கு முளை விடுகிறதோ அவர்கள் எழுத்தாளர்களாக உருவாவது சர்வ நிச்சயம்.நம்முடைய சமூக நலன் சார்ந்த வாழ்க்கைக்கு விவசாயிகள், டாக்டர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு எழுத்தாளர்களும் அவசியம்.

உங்கள் வீடுகளில் யாருக்காவது கதைகள் எழுதும் ஆர்வம் இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். எதற்காக இந்த வேண்டாத வேலை என்று திட்டி முளை விடும் பயிர்க்கு வெந்நீர் ஊற்றி விடாதீர்கள்.

ஒரு கடுகு போன்ற சிறிய விதைக்குள் ஓர் ஆலமரமே ஒளிந்திருக்கிறது என்கிற உண்மையை மறந்து விடாதீர்கள்.

No comments:

Popular Posts