Wednesday 11 September 2019

காசியில் கூவிய தமிழ்க்குயில்...!

இன்று (செப்டம்பர் 11-ந் தேதி) மகாகவி பாரதியார் நினைவு நாள்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டம் (அன்று திருநெல்வேலி) எட்டயபுரத்தில் 1882-ம் வருடம் டிசம்பர் மாதம் 11-ந் தேதி பாரதியார் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் தன்மை கொண்டவர் பாரதியார். தமது எழுத்துகள் மூலமாக சாதாரண மக்களின் மனதிலும் சுதந்திர உணர்வினை ஊட்டியவர். ஆங்கிலேயே ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டிலும், பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட புதுச்சேரியிலும் அவரது வாழ்க்கை குறித்து பரவலாக எல்லோரும் அறிவார்கள். ஆனால், பாரதியார் சுமார் ஐந்து ஆண்டுகள் பழம் பெருமை மிகுந்த காசி நகரத்தில் வாழ்ந்திருக்கிறார். அவரது காசி வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் பலருக்குத் தெரியாது. அதுபற்றி அறிந்து கொள்வோம்.

பாரதியாரின் தந்தை சின்னசாமி 1898-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி மறைந்தார். அதன் காரணமாக பாரதியின் படிப்பு பாதியில் நின்று போனது. அப்போது அவருக்கு வயது 16. அவரது எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது. குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காசியில் வாழ்ந்து வந்த பாரதியாரின் அத்தை (சின்னசாமியின் சகோதரி) குப்பம்மாள் பாரதியாரை தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். பாரதியார் தன் மனைவி செல்லம்மாளை, கடையத்தில் இருந்த அவரது பிறந்த வீட்டில் விட்டுவிட்டு, தன் அத்தையுடன் காசிக்குப் புறப்பட்டார்.

காசி நகரில் கங்கை நதிக்கரையில் வரிசையாக 64 நீராடு துறைகள் உண்டு. அவற்றை “காட்“ என்று மக்கள் குறிப்பிடுவார்கள். அவற்றில் ஒன்றுதான் அனுமான் காட். அந்தப் பகுதியில்தான் பாரதியாரின் அத்தை குப்பம்மாளும், அத்தையின் கணவரான கிருஷ்ண சிவனும் வசித்து வந்தார்கள். பக்தியில் சிறந்து விளங்கிய அந்த தம்பதி, ஒரு சிவபக்தரால் உருவாக்கப்பட்டு, தங்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவமடத்திலேயே தங்கி, மடத்தையும் பராமரித்து வந்தனர். நாளடைவில் காசிக்கு வரும் தென் இந்தியர்கள், இவர்களின் சிவ மடத்துக்கு வருவதும், அங்கே இவர்களின் உபசரிப்பில் தங்கி இருப்பதும் வழக்கமாகிவிட்டது.

காசியில், பாரதியார் “ஜெயநாராயண கலாசாலை“ என்ற ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் இந்தியும், சமஸ்கிருதமும் படித்தாலும், தமிழ் படிக்க அங்கே வசதி இல்லை. எனவே, சொந்த முயற்சியில் பாரதியார் தனது தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய இந்து கல்லூரியின் நுழைவுத் தேர்வினை எழுதி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். காசியில் பலதரப்பட்ட மக்களைக் காணும் வாய்ப்பு பெற்ற பாரதியாருக்கு உற்சாகமான, புதிய அனுபவங்கள் கிடைத்தன. கங்கைக் கரையில் காலாற நடந்தவாறே இயற்கையை ரசித்தார்; ஆனந்தப் பரவசம் கொண்டார். காசி பாரதியாரை ஒரு புதிய மனிதராக மாற்றியது என்றால் அது மிகை இல்லை. காசியில் உள்ள துர்கை என்ற காளி வழிபாட்டையும், அங்கே எருமை மாடுகள் பலியிடப்படும் கொடுமையும் கண்ட பாரதியார் மனம் பதறினார்.

காசியில் இருந்த காலத்தில், பாரதியார் தனது குடுமியை நீக்கிவிட்டு, கிராப் வைத்துக் கொண்டார். வடக்கத்திய பாணியில் வாலுடன் கூடிய பெரிய தலைப்பாகையை கட்டிக் கொண்டார். கச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொள்ளும் பழக்கத்தையும் கடை பிடித்தார். சக்தி வழிபாட்டிலும் ஈடுபடலானார். கிருஷ்ண சிவன் தம்பதியின் அரவணைப்பில், காசியில் புதுப் புது சிந்தனைகளோடு வாழ்ந்த பாரதியாரது வாழ்க்கையில் 1903-ம் வருடம் ஒரு திருப்பு முனையான சம்பவம் நிகழ்ந்தது. இங்கிலாந்து மகாராணியாரின் மறைவை அடுத்து, அவரது மகன் ஏழாவது எட்வர்டு முடிசூட்டிக் கொண்டார். அதை ஒட்டி, அப்போதைய ஆங்கிலேயே வைசிராய் கர்சன் பிரபு, டெல்லியில் ஒரு தர்பாருக்கு ஏற்பாடு செய்தார். அந்த தர்பாருக்கு பல சுதேச மன்னர்களும், ஜமீன்தார்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் எட்டயபுரம் ஜமீன்தாரும் ஒருவர்.

டெல்லியில் தர்பாரில் கலந்து கொண்டுவிட்டு, ஊருக்கு திரும்பும் வழியில் எட்டயபுரம் ஜமீன்தார் காசிக்கு வந்தார். அங்கே, பாரதியார் வசித்து வந்த சிவ மடத்துக்கும் வந்து தங்கி இருந்தார். அப்போது, பாரதியாரும், ஜமீன்தாரும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்கள். அப்போது, பாரதியாரை அவரது சொந்த ஊரான எட்டயபுரத்துக்கே திரும்பி வந்துவிடும்படியும், தன்னுடைய ஜமீனிலேயே அவருக்கு வேலை போட்டுக் கொடுப்பதாகவும், சொந்த ஊரிலேயே சுகமாக வாழலாம் என்றும் எட்டயபுரம் ஜமீந்தார் கூறினார். அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாக பாரதியார் நினைத்தார். காசியை விட்டு, எட்டயபுரம் புறப்பட்டு வருவதற்கு சம்மதம் தெரிவித்தார். இப்படியாக 1898-ம் ஆண்டின் பிற்பகுதியில் காசி வந்த பாரதியார், 1903-ம் ஆண்டின் முற்பகுதியில் எட்டயபுரம் திரும்பினார்.

இன்றும் கூட காசியில், அனுமான் காட் பகுதியில், சிவ மடம் என்ற பாரதியார் வசித்த அவரது அத்தை வீடு இருக்கிறது. அந்த வீட்டில் இன்றும் கிருஷ்ண சிவன், குப்பம்மாள் தம்பதியரின் பேரன் கே.வி.கிருஷ்ணன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணன், புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். எண்பது வயதாகும் பேரா. கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்றவர். காசி தமிழ் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் செல்லும் இலக்கிய ஆர்வலர்கள், “அனுமான் காட்”டில் இருக்கும் சிவ மடத்தை தேடிச்சென்று பாரதியார் வசித்த வீட்டை பார்க்கிறார்கள். அந்த வீடு, காசியில் உள்ள சங்கர மடத்துக்கு எதிரில், சற்றே உள்ளடக்கி இருப்பதால், போக்குவரத்து நிறைந்த தெருவை ஒட்டிய வீட்டின் பகுதியில் பாரதியாருக்கு மார்பளவு சிலையும், ஒரு நினைவுக்கல் குறிப்பும் நிறுவப்பட்டிருக்கிறது. இது, பல்லாண்டுகளுக்கு முன்னால், உத்தர பிரதேச அரசால் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்றாலும் கூட, அந்த இடம் முறையான பராமரிப்பு இல்லாமல், அக்கம்பக்கத்தவர்கள் தங்கள் தட்டுமுட்டுச் சாமான்களை போட்டு வைக்கும் இடமாகவே இருந்து வந்துள்ளது. காசி சென்ற தமிழர்கள் இந்த இழி நிலையைப் பற்றி தங்கள் வேதனைகளை பத்திரிகைகள் வாயிலாகப் பகிர்ந்து கொண்டதும் உண்டு. இதனை அறிந்த காசியில் செயல்பட்டு வரும் நகரத்தார் சங்கம் பாரதியாரின் சிலை அமைந்திருக்கும் இடத்தைப் பராமரிக்கும் பொறுப்பினை கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, அந்த இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதுடன், பாரதியாரின் சிலைக்கு நாள் தோறும் மாலை அணிவிக்கப்படுகிறது.

காசிக்குச் செல்லும் தமிழர் கள் குறிப்பாக இலக்கிய ஆர்வலர்கள், கண்டிப்பாக “அனுமான் காட்”டில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் நினைவிடத்துக்குச் சென்று வரவேண்டும். அது மட்டுமில்லாமல், பாரதியார் குறித்த புத்தகங்களும், ஆவணப்படங்களும் கொண்ட ஒரு நூலகமும் அங்கே அமைக்கப்பட்டால் பாரதிக்கு பெருமை சேர்க்கும்.
எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர்.

No comments:

Popular Posts