Sunday 22 September 2019

உலக அமைதிக்கு உன்னத வழி

உலக அமைதிக்கு உன்னத வழி

மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், இளைய சன்னிதானம், தருமை ஆதீனம்.

இ ன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அமைதி தினம்.

ஆசையின் காரணமாக தன்னை வருத்திக்கொண்டு மனிதர்கள் அலைகிறார்கள். எது கிட்ட வேண்டுமென தன்னை வருத்திக்கொள்கிறார்களோ, அது கிட்டியவுடன் தன் வருத்தத்தை போக்க ஈட்டியதையே செலவு செய்கிறார்கள். இதற்கு காரணம் மன அமைதி இல்லாமை. மன அமைதி எப்போது கிட்டும் என்றால் அது தவத்தினால் மட்டுமே கிட்டும். அத்தவம் நிறைந்த பூமி நமது பாரத பூமி “மோனத்திலே அன்னதானத்திலே சிறந்தநாடு” என பாரதி காட்டினார். தருமபுரத்தில் புலியும், பசுவும் ஒன்றாக நின்று நீர் அருந்துமாம். சிராப்பள்ளியில் பசுவும், புலியும் ஒன்றாக விளையாடுமாம். காரணம், அவ்வூர்களில் மன அமைதியுடன் தவம் செய்வோர் நிறைந்திருந்தனர். “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்றார் வள்ளுவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதிக்கு வித்தூன்றினான் கணியன் பூங்குன்றன் எனும் தமிழ் புலவன். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று உயிர் நேசிப்பினால் மலரும் உன்னத உலகுக்கு வழி காட்டினார் தாயுமானவர்.

அமைதி என்பது தோன்ற வேண்டுமெனில் போர் பகைமை, வன்முறை, ஆதிக்கம் பேராசை முதலியன விலக வேண்டும். மேலும் பாதுகாப்பின்மை, சமூக நீதியின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியன போட்டியையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி “ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் சமூகநீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்கிறார். எனவேதான் அவர் சமதர்மத்தையும், அகிம்சையையும், சத்தியத்தையும் போதித்தார்.

உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன. தனிமனிதன் தனக்குள்ளேயே சில மோதல்களை உணருகிறான். அது வெளியிலும் நீள்கிறது. குடும்பத்தோடு பக்கத்து வீட்டோடு நிகழும் மோதல்களே சமூகங்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் மதங்களுக்கு நடுவிலும் நிகழ்கின்றன. உலக மயமாக்கல், நவீனமயமாக்கல், கைக்குள் உலகம் என்று பல அறிவியல் கொள்கைகள் மனிதர்களை இணைத்திருந்தாலும் இதய அளவில் அவர்கள் தனித்தனியே வாழ்வதை அறிய முடிகிறது. இதற்கு காரணம் மனம் விசாலப்படாமை எனலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பர்.

தனிமனித அமைதி ஏற்பட்டாலே சமூக அமைதியும், உலக அமைதியும் எளிதாகும். ஆயிரம் துன்பத்திற்கு நடுவே இறைவனை மனதார நினைத்து ‘நிச்சயம் ஒருநாள் விடியும்’ என்று விடா முயற்சியுடன் நாள்தோறும் உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் எவர் தந்தாலும் எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என குறிக்கோளோடு வாழ்பவர்களின் மனதிலே மலர்வதுதான் அமைதி.

உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமும், சகோதரத்துவமும் பொதுமையும் ஆகும். 20-ம் நூற்றாண்டில் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும், சொத்துகளையும் பழி கொண்டுள்ளன. 2-ம் உலக யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945-ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களை தடுக்க உயரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் போரும், பயங்கரவாதமும், வன்முறையும் உலக மக்களை அச்சுறுத்தத்தான் செய்கிறது.

யுனெஸ்கோவில் முகவுரை வாசகமானது “மனித உள்ளங்களில்தான் போர் தோன்றுவதானால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற வேண்டும்” என்கிறது. உலக நாடுகள் குடிமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து ராணுவ பலத்தை பெருக்குகின்றன. இதனால் சர்வதேச அச்சம் பெருகி வருகிறது. உலக அமைதி என்பது ‘மாறுபாடுகளின் சேர்க்கை, கலாசாரங்களின் இனக்கலப்பு அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக பண்பாட்டு அரசியல் சமூக பொருளாதார சூழல்களில் ஆழ வேரூன்றிய ஒன்றாகும். இந்திய திருநாடு இக்கொள்கையில்தான் நின்று அமைதியை நிலைநாட்டி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை இம்மந்திரச் சொல்லே இந்திய ஒற்றுமையின் பலம். 1956-ம் ஆண்டு ஐ.நா. சபையில் ஆயுத குறைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியாவாகும்.

‘எந்த நாடும் மற்ற நாடுகளை தாக்கக்கூடாது. பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிற நாடுகளுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடாக திகழ வேண்டும். பிற நாடுகளின் இறையாண்மையைப் போற்ற வேண்டும். சகோதரத்துவ முறையில் இணங்கி இருக்க வேண்டும் என்னும் கொள்கையை கடைபிடித்து வருவதால் இந்தியா அமைதியின் தேசமாக நட்பின் நல்லுறவையும் பெற்று வருகிறது’. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ‘உலகில் குடியரசு ஆட்சி முறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி’ என்கிறார். இந்தியா இந்த நடைமுறையைத் தான் பின்பற்றி வருகிறது. பன்னாட்டு அமைதியை வளர்த்திடவும் ஒருங்கிணைப்பு செய்திடவும் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தொடங்க பெற்றது. இது செப்டம்பர் 21-ம் நாளை உலக அமைதி தின நாளாக கொண்டாடி வருகிறது.

இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி வணிகம் தழைத்து தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில் நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலக மயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இது உலக அமைதிக்கு வழி என்னும் கருத்து பின் வருமாறு சொல்லப்பட்டால் அமைதியை வளர்க்கலாம்.

கல்வி வழியாக போதித்தல், அதிகாரம் பரவலாக்கல் அகிம்சை நெறியை பின்பற்றல் ஊடகங்கள் வழி ஒற்றுமையை உணர வைத்தல் அரசியல் உறவுகளைப் பேணுதல், பொருளாதாரம் அறம் பேணல், சமய இனநாடு வேறுபாடுகளை களைதல், நடுநிலையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், சகோதரத்துவம் பேணுதல், தனிமனித அறம் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்கல், நல்லுறவு ஒத்துழைப்பு, ஒற்றுமை மன்னித்தல், மனித நேயம் பொறுப்புணர்வு இவை அமைதியை வளர்க்கும். சைவ சமயத்தில் அமைதிக்கான வழியை பல அருளாளர்களும் கவிஞர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ அன்பென்று கொட்டு முரசே - அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு’ எனும் தொடர்கள் அமைதிக்கான அடிப்படை எனலாம்.

புரட்சி கவிஞர் பாரதிதாசன், “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அனைத்துகொள் உன்னை சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு” என்று அறிவுரை கூறுகிறார். இக்கருத்துகள் உலக உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாக அனைவரும் இந்த உலக அமைதி நாளில் உறுதி கொள்வோம்.

No comments:

Popular Posts