Thursday 12 September 2019

பொருளாதார வளர்ச்சி குறைகிறதா?

பொருளாதார வளர்ச்சி குறைகிறதா?

- டாக்டர் சோமவள்ளியப்பன்

க டந்த சில வாரங்களாக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை. மோட்டார் வாகனத்துறையில் சில லட்சம் பேர் வேலையிழப்பு, ‘மக்களிடம் ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க கூட காசு இல்லை; ஒரு தனியார் கம்பெனியில் பத்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்’ போன்றவற்றில் தொடங்கி, அடுத்து, ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது. ஆகவே மக்களே செலவுகளை குறையுங்கள்’ என்கிற அறிவுரைகள் வரை வந்திருக்கிறது.

‘ஆகவே நீங்கள் செய்யும் செலவுகளை குறையுங்கள், முதலீடுகளைத் தள்ளிப்போடுங்கள்’ என்று ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. பலரும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் ஆபத்து இருக்கிறது. ஆகவே, விவாதிக்கப்படுகிற தகவல்கள் சரிதானா? உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலைமை என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, வங்கிகள் ஆகிய துறைகளில் சில ஆண்டுகளாகவே சுணக்கம் இருப்பது உண்மை.

அடுத்ததாக, மோட்டார் வாகனங்கள் விற்பனை கடந்த ஓராண்டில் கணிசமாக குறைந்திருக்கிறது; சில லட்சம் தற்காலிக மற்றும் கேஷுவல் ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; பல பெரிய நிறுவனங்கள், அவர்களது உற்பத்தி நாட்களை குறைந்திருக்கின்றன போன்ற தகவல்களும் சரியானவையே.

அவற்றிற்கும் அடுத்தபடியாக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியான, ஜி.டி.பி. வளர்ச்சி, 2019-20 ஆண்டின் முதல் காலாண்டில், வெறும் 5 சதவீதம் என்கிற தகவல். இதுவும் சரியான தகவல்தான். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு, ஜி.டி.பி. வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது என்பது உண்மை.

மேலும், 2017 இறுதியில் தொடங்கி, 2019 ஜூன் மாதம் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்த இந்தியா, இப்போது ஒரு காலாண்டில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி என்பதுடன் உலகில் ஐந்தாவது இடத்திற்கும் கீழே போய் விட்டது.

ஆக, தனிப்பட்ட முறை, கால அளவில் ஒப்பிட்டு முறை மற்றும் சமகாலத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும் முறை என்ற மூன்று வகைகளிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து இருப்பது உண்மை.

சீனாவுடனான வர்த்தக போர் மற்றும் பிற காரணங்களால் அமெரிக்காவில் தொடங்கி, சீனா, தைவான், சிங்கப்பூர் என பல நாடுகளிலும் 2020-ம் ஆண்டில் பொருளாதார சுணக்கம் வரலாம் என்று ஒரு சில அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் யூகிக்கிறார்கள். ஆகவே இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது.

எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது! ஏன் இப்படி இறகுமுகம்? என்று கேட்டால் அதற்கான பதில்களாக, மூன்றைச் சொல்லலாம். ஒன்று, பணமதிப்பு நீக்கம். இரண்டாவது ஜி.எஸ்.டி. வரி அறிமுகம். மூன்றாவது பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனில் தொலைத்த பல லட்சம் கோடி ரூபாய்கள். நம் நாட்டில் கணக்கில் வராத பணம் கணிசமான அளவு புழங்கிக்கொண்டிருந்ததும், இணை பொருளாதாரம் என்று சொல்லும் அளவில் பெரிதாக இருந்தது என்பதும் உண்மை.

பணமதிப்பு நீக்கம், மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பண பரிமாற்றம், ஆதார் அறிமுகம், பான் கார்டு எண் தரவேண்டிய கட்டாயம் போன்றவற்றாலும், அவை தடைபட்டு அல்லது குறைந்துபோய், கணிசமான பகுதியினரின் வியாபாரம் அழிந்திருப்பது நிஜம்.

அதே போல, மிகக் குறைந்த லாபங்களில் அல்லது நஷ்டங்களில் இயங்கிக்கொண்டு வந்த லட்சக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால், கூடுதல் செலவுக்கு தள்ளப்பட்டு, நஷ்டத்திற்கு உள்ளாகி நசிந்துவிட்டன.

ஜி.எஸ்.டி. வரி ஒரு அவசியமான சீர்திருத்தம் என்றாலும், நீண்ட காலத்தில் நாட்டின் வருமானத்திற்கு அது பலனளிக்கும் என்றாலும், இடைப்பட்ட காலத்தில், நிச்சயமாக அது சிறு குறு தொழில் முனைவோருக்கு பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது. பலரை காணாமல் போக செய்துவிட்டது. ஆகவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக குறைந்திருக்கும். அவற்றோடு சேர்ந்துகொண்டு, வாராக் கடன்கள், கடனுக்கு பணம் கிடைப்பதையும், நாட்டில் பணப் புழக்கத்தையும் குறைத்துவிட்டன.

காரணங்கள் எதுவாக இருந்தால் என்ன? இந்த நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. ஏதோ ஒரு காலாண்டில் குறைவு என்றால் சரி. வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைகிறபோது, அவசர மற்றும் போதுமான நடவடிக்கைகள் நிச்சயம் வேண்டும்.

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி, பள்ளத்தில் இறங்க தொடங்கும் நேரம் ஆட்கள் இறங்கி, தடுத்து நிறுத்தி, வண்டியை மேலே தள்ளிவிட வேண்டும். இது சாத்தியம். இதைச் செய்யத்தவறிவிட்டால், வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும். பின்பு அதை மீண்டும் சாலைக்கு ஏற்றுவது கடினம்.

தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்கிற வண்டி பள்ளத்தில் இறங்கப் பார்க்கிறது. அரசு கண்டிப்பாக தேவையானவற்றை செய்து, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதே நேரம் பேராபத்து வருவது போல அச்சப்பட்டு முடங்கிக்கொள்ள வேண்டாம்.

எதிர் வரும் பண்டிகை காலத்தில் பி.எஸ் 6 என்ற புதிய தரக்கட்டுப்பாடு அந்த புதிய வகை வாகனங்கள் அறிமுகமாகி, மீண்டும் விற்பனை சூடுபிடிக்கும் என்கிற நம்பிக்கை சந்தையில் இருக்கிறது.

ரியல் எஸ்டேட் துறைக்கு அபோர்டபிள் ஹவுசிங் என்ற வகை வீடுகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 1.95 கோடி வீடுகள் என்ற இலக்கு இருக்கிறது. நாடு முழுவதும் நல்ல மழை பெய்திருக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 99 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இவையும் கவனிக்கத்தக்கவை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 100 என்ற இடத்தில், இந்த ஆண்டு 105. அதாவது ஐந்து சதவீத வளர்ச்சி. ஆமாம். 100 என்ற இடத்தில் 95 அல்லது 99 அல்ல. நூற்று ஐந்து. உள்நாட்டு உற்பத்தி மதிப்பு என்ற ஜி.டி.பி. முன்பெல்லாம் 100-ல் இருந்து 108 ஆக வளர்ந்தது. இப்போது முதல் காலாண்டில் 100-ல் இருந்து 105 என்ற அளவில் வளர்க்கிறது. வேகம்தான் குறைந்திருக்கிறதே தவிர, வளர்ச்சி இருக்கிறது. அரசு வேகமாக செயல்பட்டால் போதும்.

முன்பு, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய இரு நிதி ஆண்டுகளில், நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி இதேபோல 4.5 மற்றும் 4.7 சதவீதங்களாக குறைந்து போய், பின் அதிலிருந்து அடுத்த ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. அதே போல் இப்போதும் மீண்டும் உயரும் வலு இந்திய பொருளாதாரத்திற்கு நிச்சயம் உண்டு.

கிராமபுறங்களில் வாங்குசக்தி, ஒட்டுமொத்த நுகர்வு, தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்தால் போதும். விரைந்து செய்யும் என நம்புவோம்.

No comments:

Popular Posts