Sunday 14 April 2019

விவேகானந்தர் சொன்னது.. விவேகமானது..

சுவாமி விவேகானந்தர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 27-1-1897 அன்று சொற்பொழிவாற்றினார். அவரது உரையில் இருந்து கொஞ்சம் இங்கே தொகுத்து தரப்பட்டு உள்ளது.

* அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும் தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை.

* ஒருவன் உடலும், மனமும் தூய்மையாக இல்லாமல், கோவிலுக்கு செல்வதும், வழிபடுவதும் பயனற்றவை.

* உடலும், மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு, பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

* புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும், தூய்மையும் தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றி செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* ‘நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு ஒரு திருத் தலத்திற்கு சென்றால், அந்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று நினைக்கும் அளவிற்கு கீழான நிலைக்கு இந்த கலியுகத்தில் மக்கள் வந்து விட்டார்கள்.

* தூய்மையற்ற உள்ளத்துடன் கோவிலுக்கு செல்லும் ஒருவன், ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான். கோவிலுக்கு புறப்பட்டபோது இருந்ததை விட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

* திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும், மகான்களாலும் நிரம்பி இருப்பவை.

* மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோவில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள் தான்.

* 100 கோவில்கள் இருந்தாலும் அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்வீகம் மறைந்து விடும்.

* திருத்தலங்களில் வாழ்வது மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களை சுலபமாக நீக்கி கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது.

* மனதை தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.

* ஏழை-எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன் தான் உண்மையாக கடவுளை வழிபடுகிறான். விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

No comments:

Popular Posts