Friday 18 January 2019

அரசியல் தெரிவோம்... தெளிவோம்!

அரசியல் தெரிவோம்... தெளிவோம்! மு.முத்து மீனா, எழுத்தாளர். உ லக நாடுகளில் இரண்டாவது பெரும் ஜனநாயக நாடாக உள்ளது நம் இந்தியா. 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமகனும், குடிமகளும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் பள்ளிப் பாடத்திலேயே நாம் கற்ற ஒன்று. இன்றைய சூழ்நிலையில் முதல் முறை வாக்காளர்கள் பொதுவான கருத்துகளாலும், வீட்டில் உள்ளவர்களாலும் உந்தப்பட்டும் தங்களுடைய முதல் வாக்கினை செலுத்துகிறார்கள். அதற்கு அடுத்து வரும் தேர்தல்களில் அவர்களாகவே ஆங்காங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து தங்கள் ஓட்டைச் செலுத்தத் தொடங்குகிறார்கள். மக்களாகிய நம்மால் தான் பெரும் மாற்றத்தை கொண்டுவர இயலும் என்று அரசியல் தலைவர்கள் மேடையில் கூக்குரலிட்டாலும், ஓட்டுரிமையைப் பற்றி வருடம்தோறும் திரைப்படங்கள் வந்தாலும், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கினாலும் இறுதியில் கருத்துகள் என்னவோ சென்றடைவதில்லை என்பதே உண்மை. ஏறக்குறைய அனைத்து குடும்பங்களிலும் கட்டாயம் ஒரு நபராவது படித்திருக்கும் சூழ்நிலை வந்தாகிவிட்டது. நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தேவையான அனைத்துத் தொழில்நுட்பங்களும் கையிலே உள்ளது. ஓட்டுரிமை பற்றி வரும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டையும் பெறுகிறது. இருப்பினும் ஒவ்வொரு தேர்தலின் பிறகும் ஆட்சி மாற்றம் தேவை என்ற கருத்து கணிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது. ஆட்சியைப் பற்றி மக்கள் மனதில் குழப்பங்கள் பெருகிக்கொண்டுதான் போகிறது. காலம் காலமாக நம்மிடையே ஒரு பெரும் தவறு நடந்து கொண்டு இருக்கிறது. எதையும் முழுமையாக சென்று பார்க்காமலும், எதற்காக இந்த விஷயத்தை செய்கிறோம்? இதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாமலும், மேம்போக்காக இருந்து வரும் குணம் உள்ளது. முக்கியமாக எந்த இடத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டுமோ, அங்கே கண்டுகொள்ளாமல் விட்டு, பின்னால் சமுதாயத்தையும், ஆட்சியையும் குறை கூறிக்கொண்டிருப்பது தவறான செயலாகும். தேர்தல் வருகிறது என்றால் இது எந்த பதவிக்கான தேர்தல் என்பதை முதலில் அறிய வேண்டும். வாக்களிக்கும் பதவியின் பொறுப்புகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தொகுதியில் போட்டியிடும் கட்சிகளைப் பற்றி அறிதல் அவசியம். அக்கட்சியின் கொள்கை முடிவுகள் என்ன? என விசாரித்தல் முக்கியம். இவை அனைத்தும் அறிந்த பின், தங்களுடைய வாக்கை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அளிக்கலாம் என்ற ஒரு முடிவு கிடைக்கும். அப்போது அந்த கட்சி இதற்கு முன் வகித்த பொறுப்புகள் பற்றியும், கொண்டு வந்த திட்டங்களைப் பற்றியும் ஆராய வேண்டும். தங்கள் தொகுதி வேட்பாளர் குறித்து முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும். முதலில் மற்றவர்களின் கருத்துகளால் உந்தப்படுவதை தவிர்த்தல் வேண்டும். வாக்களிக்கும் உரிமையைச் சொந்தமாக தேர்வு செய்தல் அவசியம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களின் பின்புலத்தை ஆராய்ந்து விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மவர்களால் நாட்டை ஆளப்போகும் கட்சிகளையும், கொள்கைகளையும் பற்றி அறிய ஆர்வமில்லை. சட்டமன்றத்தில் அன்றாடம் என்ன நடக்கிறது? கூட்டத்தொடர் என்றால் என்ன? நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் வேலை என்ன? என்று கேட்டால், பெரும்பாலானோருக்கு விடை தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பப்படவும் முயலவில்லை. அரசியல் பிரசாரத்திற்கு கட்சிக்காரர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். தான் வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார கூட்டத்திற்கு அனைவரும் செல்லத் தொடங்கவேண்டும். நேரில் செல்ல முடியவில்லை என்றாலும், அவர்களின் கொள்கைகளை கேட்டறிவது மிகவும் அவசியமான ஒன்று. பிரபல டி.வி நிகழ்ச்சிகள் பற்றியும், கிரிக்கெட் தொடரைப் பற்றியும் அன்றாடம் நண்பர்களிடத்தில் பேசிக்கொள்ளும் நாம், எப்போது தேர்தலின் மீதும், கட்சிகளின் மீதும் மட்டுமே குறைபட்டுக்கொள்ளாமல் கட்சி திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளப்போகிறோம். நாமும் வாக்களிக்காமல் நம் நண்பர்களிடத்திலும் “வாக்களித்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை” என்றுதானே கூறிக்கொண்டு வருகிறோம். ஆரம்பமே பிழையாக உள்ள சமூகத்தில் முடிவைப்பற்றி குறைப்படுவதில் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. மாற்றங்கள் நிகழ பெரிய புரட்சி வரும் என்று எண்ணிக்கொண்டே காலங்கள் கடத்திவரும் நாம் அதற்கான முயற்சியை மேற்கொள்ளப் பழக வேண்டும். பொழுதுபோக்கிற்கு அளிக்கும் 100 சதவீத ஆர்வத்தில் பாதியாவது, தேர்தல் நேரங்களில் ஓட்டுரிமை மீதும், வாக்களிக்கப்போகும் தேர்விற்காகவும் அளித்திடல் வேண்டும். மேற்கூறிய அடிப்படை விஷயங்களை இன்றுள்ள தொலைக்காட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும். அரைகுறை அறிவினால் குழப்பங்கள் பெருகி, பக்கச்சார்பான முடிவுகளைத் தேர்ந்தெடுத்து வரும் நாம், இனியாவது விழித்தெழ வேண்டும். தனக்கும், தன் நாட்டிற்கும் எவ்வித பயனும் இல்லாத செயல்களில் உயிர்மூச்சாய் ஆர்வம் காட்டுவதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அதில் இருந்து வெளிவர வேண்டும். ஆட்சியாளர்களையே என்றும் குறை கூறி வரும் வாக்காளர்களாகிய நாம், நம்முடைய குறையை முதலில் சரி செய்ய வேண்டும். கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சிப்பதில் மட்டுமல்ல உரிமை. அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதில் தான் ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் வெளிப்படுகிறது. இன்றைய சூழலில் பல இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அதற்கு முன்னதாக அரசியல் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளவும், தான் புரிந்து கொண்ட அரசியலை மக்களிடத்தில் பகிர வேண்டும் என்பதையும் கடமையாக கொண்டு ஒவ்வொரு இளைஞனும் செயல்பட வேண்டும்.

No comments:

Popular Posts