Wednesday 23 January 2019

என்ன ஆனது பள்ளி மாணவர் பயண சலுகை?

என்ன ஆனது பள்ளி மாணவர் பயண சலுகை? அ.சவுந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (சி.பி.எம்.) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பயண அட்டையை வழங்காமல் 8 மாதங்களாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் போக்கு காட்டி வருகிறது. இது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கும், முறையீடுகளுக்கும் ஏதாவது சாக்குப் போக்குகள் கூறி வந்த நிர்வாகம் இறுதியில் சீருடை அணிந்து வந்தால் டிக்கெட் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு கூறிவிட்டதாக தெரிவித்தது. நிர்வாகத்தின் அக்கறையற்ற அசட்டைப் போக்கு கண்டனத்திற்கு உரியதாகும். 1989-ம் ஆண்டு இந்த மாணவர் இலவச பயணச் சலுகைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான உதவித் திட்டங்களில் இது மிகவும் முக்கியமான திட்டம். குறிப்பாக கிராமத்து ஏழை எளிய மாணவர்களின் பள்ளிக் கல்வி வளர்ச்சியில் ஒரு முறிப்பை உண்டாக்கிய திட்டம் இது. இதற்கான செலவைக் கல்வித்துறை ஏற்க வேண்டுமே தவிர, போக்குவரத்துக் கழகங்கள் அல்ல. இருந்தாலும் போக்குவரத்துக் கழகங்கள் சற்று உபரி வருமானம் ஈட்டியவரை இந்தக் கட்டண இழப்பை ஏற்றுக்கொண்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்த இலவச பயண திட்டத்திற்கான இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அரசு இப்போதும் அந்த இழப்பை முழுமையாக ஈடுகட்ட முன்வரவில்லை. அதாவது இந்த மாணவர் இலவச பயண வசதியை தொடருவதில் அரசிற்கும் ஒரு அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே உள்ள பல திட்டங்களை நிறுத்த முடியாத நிர்ப்பந்தத்தில் அவற்றை வெட்டுவது, சுருக்குவது, குறைப்பது, தாமதப்படுத்துவது போன்ற பல உத்திகள் கையாளப்படுகின்றன. பொது வினியோக முறை, குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ஐ.சி.டி.எஸ்), சத்துணவு போன்றவற்றோடு மாணவர் இலவச பயண வசதியும் குறி வைக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள் “சிக்கன சீர்திருத்தங்கள்” என்ற நோக்கில் தற்போது மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள் பயணிகளை கடுமையாக பாதித்து வருகிறது. பஸ் கட்டண உயர்விற்குப் பிறகு படிப்படியாக பல வழித்தடங்களில் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 22 ஆயிரம் அரசுப் பஸ்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடி பேர் பயணம் செய்தனர். இப்போது இது 1 கோடியே 75 லட்சமாக குறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் 25 லட்சம் பயணிகள் மாநிலம் முழுவதும் பயணத்தை குறைத்துக் கொண்டனர் அல்லது பயண ஏற்பாட்டை மாற்றிக் கொண்டனர். அரசு இதிலும் உரிய கவலை கொண்டதாகக் தெரியவில்லை. இதனோடு சேர்த்துத்தான் மாணவர் இலவச பயண அட்டை பிரச்சினையைப் பார்க்க வேண்டியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த கல்லூரி சிறப்பு பஸ், மகளிர் சிறப்பு பஸ் நடைகள் குறைக்கப்பட்டு விட்டன. இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவச மாணவர் பயண அட்டையை ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கிவிடுவார்கள். பஸ் கட்டண உயர்விற்குப் பிறகு இந்த ஆண்டு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்குவது, அனைத்துப் பஸ் டிக்கெட் வழங்குவது, மாணவர் இலவச பயண அட்டை வழங்குவது மூன்றையுமே போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்தின. இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதில் சின்னச் சின்ன மாறுதல்கள் அரைகுறை மனதோடு செய்யப்பட்டன. அப்படியும் கூட மாணவர் இலவச பயண அட்டை வழங்குவதை கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நிறைவேற்றவில்லை. 2018-19 கல்வியாண்டு முடியப் போகிறது. இப்போது தான் சில கழகங்களில் இலவச பயண அட்டை வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிகாரிகள் நடத்துனர்களுக்கு மனம் போனபடி மாணவர் இலவச பயணம் குறித்த உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கும் நடத்துனர்களுக்கும் சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சீருடை அணியாத மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையைக் காட்டி பயணம் செய்கின்றனர். கல்லூரி மாணவர் விஷயங்களில் இது மோதல்களாகவும் வெடிக்கிறது. சென்றவாரம் பழைய மாமல்லபுரம் சாலை, பெரும்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இலவச பயண விஷயத்தில் மோதல் ஏற்பட்டு வேலை நிறுத்தமாக உருவெடுத்தது. ‘சமுதாய போக்கோடு, லாப நஷ்ட கணக்குப் பார்க்காமல் போக்குவரத்துக் கழகங்களை நடத்துகிறோம் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறினார்’. இது பேச்சளவில்தான் என்பதை நடக்கும் செயல்கள் காட்டுகின்றன. சிக்கனம் என்பது பயணிகளின் வசதியைக் குறைப்பதன் மூலமோ, மாணவர்களின் இலவச பயண வசதியை நெருக்குவதன் மூலமோ நடக்கக்கூடாது. ஊழலை, முறைகேடுகளை, விரயச் செலவுகளை ஒழிக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசு ஈடுகட்ட வேண்டும். சிக்கனம் என்ற பேரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுகிற கல்வித்துறையின் திட்டமும் ஏற்கத்தக்கதல்ல. தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கவே இது பயன்படும். ஏழை, எளியோர் மற்றும் கிராமத்து நலிந்தோருக்கான கல்வித் தேவையில் விளையாடுவது தமிழகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும். இந்தப் பின்புலத்தில், மாணவர் இலவச பயண வசதியை மறைமுகமாக நடைமுறையில் பறிக்கும் திட்டமிட்ட முயற்சியாகவே பயண அட்டை வழங்குவதில் செய்யும் தாமதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

No comments:

Popular Posts