Tuesday 8 January 2019

ஏன் இந்த வேலை நிறுத்தம்?

ஏன் இந்த வேலை நிறுத்தம்? ஜி.ராமகிருஷ்ணன் சிபி.ஐ.(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ம த்திய அரசு ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (8-ந்தேதி), நாளையும்(9-ந்தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டுகளில் உழைப்பாளி மக்களின் கோரிக்கைகள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத பின்னணியில், 2019 ஆங்கில புத்தாண்டு தொடங்கிய இரண்டாவது வாரத்தில் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வங்கி, காப்பீட்டுதுறை, தொலைபேசி, உள்ளிட்ட மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர் சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்துள்ளன. வேறு வகையில் சொல்வதென்றால் கோடிக்கணக்கான கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் இணைந்து நடத்தகூடிய போராட்டம் இது. திடீர் என்று அறிவிக்கப்பட்ட போராட்டம் அல்ல மத்திய அரசுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசு ஏற்காததால் வேறு வழியின்றி நடைபெறும் போராட்டம். நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சங்கம் வைக்கும் உரிமை, சங்கத்தில் சேரும் உரிமை, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை போன்ற போராடிப்பெற்ற உரிமைகைள் தற்போது மறுக்கப்படுகின்றன. குறிப்பாக 1991-ம் ஆண்டில் தாராள மயம், தனியார் மயம், உலகமயம், என்ற கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு தொழிலாளர், ஊழியர்களின் உரிமைகளும் சலுகைகளும் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. 1992-ல் இருந்து 15 அகில இந்திய வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது. மத்திய அரசுடன் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. உதாரணமாக தொழிற்சங்க உரிமை மறுப்பு. 1918-ம் ஆண்டு சென்னையில் பின்னி தொழிற்சாலையில் மெட்ராஸ் லேபர் யூனியன் தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சங்கம். இச்சங்கம் 1921-ல் பின்னி ஆலையில் நடத்திய வேலைநிறுத்த போராட்டடத்தினால் நிர்வாகத்திற்கு ரூ. 7 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என்றும், இத்தொகையை தொழிற்சங்க தலைவர்கள் திரு.வி.க., சர்க்கரை செட்டியார் மற்றும் அந்த தொழிற்சங்க தலைவைர்களே கட்ட வேண்டுமென்று நீதிமன்றம் அபராதம் விதித்தது. “நீதிபதிகளே நான் உடுத்தியிருக்கும் ஆடைகள்தான் என்னுடைய ஒரே சொத்து. வேண்டுமானால் அதனை இங்கேயே கழட்டிக்கொடுத்துவிடுகிறேன். ஆனால் அதன்பிறகும் கோவணத்தை கட்டிக்கொண்டாவது தொழிற்சங்க வேலைகளை தொடர்ந்து செய்வேன் என்றார்” சர்க்கரை செட்டியார். இதற்கு காரணம் அப்போது தொழிற்சங்கம் வைக்கும் உரிமையோ வேலைநிறுத்தம் செய்யும் உரிமையோ கிடையாது. இப்பின்னணியில் தான் 1926- ம் ஆண்டு இந்திய தொழிற்சங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. சங்கம் வைக்கும் உரிமையும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் கிடைத்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில் சங்கம் வைக்கும் உரிமை, சங்கத்தில் சேரும் உரிமை மறுக்கப்படுகிறது. உதாரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வளாகத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து தலைவர், செயலாளராக இருந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு 55 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. நமது நாட்டில் மூலதனம் இடும் பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டு சட்டத்தை அமலாக்கிட வேண்டும். இதை மத்திய மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்திட வேண்டும். இதைப்போல் ஏராளமான உதாரணங்களை சொல்லலாம். தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துவதாக கூறி 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் தொழிலாளர் போராடி பெற்ற சங்கம் சேரும் உரிமை, கூட்டுபேர உரிமை, வேலைநிறுத்த உரிமை பறிபோகும். இத்தகையை சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. நிரந்தர பணித்தன்மையுள்ள இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என்பது வேலை நிறுத்தத்தில் ஒரு கோரிக்கை. விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மிகப்பெரிய துயரமிக்க செய்தியாகியுள்ளது. இந்த வேலையில் இருந்தவர் ஒரு ஒப்பந்த ஊழியர் என சொல்லப்படுகிறது. எனவேதான் நிரந்தர பணிகளில் பயிற்சி பெற்ற நிரந்தர தொழிலாளர்கள், ஊழியர்கள் நியமிக்க வேண்டும். இது அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தொழிற்சங்கங்களின் கூட்டியக்கம் முன்வைக்கும் 12 அம்ச கோரிக்கை பட்டியல். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட பொது விநியோக முறையை அனைவருக்கும் என்றாக்க வேண்டும். சரக்கு சந்தைகளில் யூக வணிகத்தை தடை செய்ய வேண்டும்! வேலை வாய்ப்பை விரிவாக்க திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுத்து வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். விதிவிலக்குகள் எதுவும் இன்றி அனைத்து அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்களையும் கறாராக அமல்படுத்த வேண்டும். இச்சட்டங்களின் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளிகளுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்பதை நிறுத்த வேண்டும். பங்கு விற்பனை மூலம் தனியாரிடம் நிர்வாகத்தை தருவதை நிறுத்த வேண்டும். நிரந்தர, நிலைத்த பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் சலுகைகள் வழங்க வேண்டும். போனஸ் மற்றும் வைப்பு நிதிகளுக்கான வரம்புகளையும் உச்சவரம்புகளையும் நீக்கவேண்டும். பணிக்கொடை தொகையை உயர்த்த வேண்டும், விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் ஐ.எல்.ஓ அமைப்பின் சி-87 மற்றும் சி-98 ஷரத்துகளுக்கு உடனடியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர் நலசட்ட திருத்தங்களையும் கைவிட வேண்டும். ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும். இன்றும் நாளையும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் இந்திய உழைப்பாளி மக்களுக்கானது மட்டுமல்ல இது தேசம் காக்கும் போராட்டமும் ஆகும்.

No comments:

Popular Posts