பிளாஸ்டிக் தடை பயனளிக்கிறதா?
முனைவர் ஜெ.வீ.அருண்,
கல்லூரி உதவி பேராசிரியர்.
இ ந்தியாவில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சராசரியாக வருடத்திற்கு 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதில் மக்கா கழிவாக தங்கி விடும் பிளாஸ்டிக்கின் அளவு மட்டும் 9 டன் மில்லியனாக இருக்கிறது. மேலும் 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் மட்டும் 20 மில்லியன் டன்னாக உயர வாய்ப்புள்ளது என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
நம் நாட்டில் மராட்டியம், தெலுங்கானா மற்றும் இமாசலபிரதேசத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. இந்த புத்தாண்டின் முதல் தேதியில் (ஜனவரி 1) இருந்து தமிழகமும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடிகள் என பெருமளவில் துணி பைகள் புழக்கத்தில் வர தொடங்கிவிட்டன. ஜனவரிக்கு சற்று முன்னதாகவே இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இருப்பினும் வீடுகளிலும், கடைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவது குறித்தோ அதனை இனி வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை பற்றியோ ஒரு தடையோ? சட்டமோ? இன்னும் வந்ததாக தெரியவில்லை. பிளாஸ்டிக்கின் துணையை சிலரால் ஒரேடியாக ஒதுக்கிவிடவும் முடியவில்லை. பலசரக்கு கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே சீராக பேக்கிங் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு தான் இருக்கிறது.
பல்பொருள் அங்காடிகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றப்பட்ட பொருட்களை தான் இறுதியில் நாமும் துணி பைகளில் வாங்கி செல்கிறோம். பிளாஸ்டிக் தடையினால் ஏற்பட்டுள்ள சிரமங்களும் ஏராளம் தான். பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பதும் பெரும் கேள்விக்குறிதான்.
பத்து வருடத்துக்கு முன்பெல்லாம் குப்பை கொட்டுவது ஒரு சாதாரண செயல். வீடுகள் அருகில் சிமெண்டினால் ஆன நிரந்தர குப்பை தொட்டிகள் நகரங்களின் வீதிகளில் பல இடங்களில் காணப்படும். வீட்டில் உள்ள திடக்கழிவுகளை பிளாஸ்டிக் பையின் துணையின்றி குப்பை டப்பாக்களில் எடுத்து கொட்டிவிடுவோம்.
இன்றோ குப்பைகள் போடுவதற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தள்ளிக்கொண்டு வரும் சக்கர ஊர்திகளுக்காக காத்து இருக்க வேண்டியது உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளின் துணையில்லாமல் குப்பைகளை தேக்கவும் முடியாது. அதுவும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கும் செல்லும் குடும்பத்தில் குப்பை கொட்ட கூட வீட்டில் யாருமில்லாமலும், நேரமில்லாமலும் போகும் சமயம் அருகில் உள்ள ஏதாவது இடத்தில் குப்பையை கொட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனாலேயே பல இடங்கள் சிறு, சிறு குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன.
இதுபோல் வீசி எறியும் பிளாஸ்டிக் பைகள் காணும் இடமெல்லாம் மக்குவதற்கு வழியில்லாமல் ஒன்று மண்ணில் புதைந்தோ அல்லது திட குப்பையாகவோ மாறி விடுகிறது. முன்பெல்லாம் எவர்சில்வர் டிபன் பாக்சுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இன்றோ ஒழுகாதென்ற உத்திரவாதத்துடன் பல வண்ணங்களில் பிளாஸ்டிக் உணவு டப்பாக்களே உபயோகிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் ஓர் திட பொருள். அது ஓர் திட கழிவு அல்ல. அதை அத்தனை சுலபமாக அழித்து விடவும் முடியாது. வளரும் மற்றும் வளர்ந்த மேலை நாடுகள் கூட இன்றும் திணறுவது இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தான். சுலபமாக உருவாக்கி விட கூடிய பிளாஸ்டிக் பாலிமர்களின் ஒரு சிறு இழை மக்குவதற்கு குறைந்தது ஆயிரம் வருடங்கள் எடுக்கும்.
உணவுடன் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மை கலக்கும் போது புற்றுநோய் போன்ற பல வியாதிகள் வருவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில் வீடுகளில் திரும்பிய இடமெல்லாம் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களே காணப்படுகிறது. இவையெல்லாம் மக்குவதற்குள் உலகமே அழிந்து கூட போகலாம். முன்பெல்லாம் பெட்டிகடைகளில் கிடைத்த கடலை மிட்டாய், தேன் மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் கூட இன்று அதற்கே உரிய ஸ்மார்ட் கோடுகளுடன் பிளாஸ்டிக் உறைகளில் உலா வர தொடங்கிவிட்டது.
நவீனமயமாக்கல் என்ற பின்னணியில் எந்த ஒரு பொருளும் சுத்தமாக அழகாக சுற்றப்பட்டு பிளாஸ்டிக் கவர்களின் உதவியுடன்தான் விற்பனையும் செய்யப்படுகிறது. பெட்டிக்கடைகளில் கடைக்காரர் கையால் எடுத்து தரும் திண்பண்டங்களை சுகாதார சீர்கேடு என தவிர்க்கும் நாம், பல மாதங்கள் பிளாஸ்டிக் தாள்களுடன் இறுக்கமாக இணைந்து பயணித்து பின் நம் உடலில் நச்சாக சேர போகும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி மகிழ்ச்சி அடைகிறோம்.
பிளாஸ்டிக் உபயோகம் புலி வாலை பிடித்த கதையாக போய்விட மனிதர்களுக்கு அதில் இருந்து மீள தேவையெல்லாம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வும், தெளிவும்தான். மனிதன் அவசர வாழ்க்கையை விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ தொடங்கிய பின்விளைவுதான் இந்த பிளாஸ்டிக்கால் மனிதனும், விலங்குகளும் படும் பாடு. சுழல மட்டுமே தெரிந்த பூமிக்கு தன்னை மனிதன் சுத்தமாக வைத்திருக்கிறானா? என்ற கேள்வி எழுந்து பல நாட்களாகி விட்டது.
தன் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் அழித்து வரும் மனித குலத்திற்கு நிதான அழிவை பூமி உணர்த்த தொடங்கி விட்டது என்பதே உண்மை. பிளாஸ்டிக் தடை பயனளிக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த முயற்சி சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான சிறு தொடக்கமாக இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதானே.
Friday, 18 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment