Monday 28 January 2019

மனிதனுக்கு, இயற்கை அன்னையின் எச்சரிக்கை

மனிதனுக்கு, இயற்கை அன்னையின் எச்சரிக்கை. துரைபாபு, வனக்கல்லூரி மாணவர், மேட்டுப்பாளையம். மனிதர்கள் நிம்மதியாக உயிர்வாழ இயற்கை அன்னை எண்ணற்ற வளங்களை அள்ளிக்கொடுத்துள்ளது. ஆனால் இன்றைக்கு எளிதில் கைக்கு கிடைக்கும் தொழில்நுட்பங்கள் மனிதனை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறதோ இல்லையோ, இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்பதே உண்மை. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஏன் நம்மையும் வாழ வைத்து கொண்டிருக்கும் புவியின் சொர்க்கங்களாகிய மரங்கள் தங்களது இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் சாலை விரிவாக்கத்திற்காக, மேம்பாலங்கள் கட்டுவதற்காக, வானளாவிய கட்டிடங்கள் கட்டுவதற்காக வனங்களை அழித்து அதன் அழுகையை மகிழ்ச்சியாக ரசித்து கொண்டிருக்கிறோம் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல். அந்நிய மோகத்தினால் வெளிநாட்டு குடிநீர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறோம். காடுகளை, மரங்களை அழித்து வருவதன் மூலம் அதனை சார்ந்து வாழக்கூடிய சின்னஞ்சிறு பறவைகளும், விலங்குகளும் மெல்ல மெல்ல மரணத்தை தழுவி வருகின்றன. இவ்வாறு நாம் இயற்கை அன்னைக்கு செய்யும் கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையை தொடர்ந்து நாசமாக்கி வருவதற்கான தண்டனையை கூடிய விரைவில் அனுபவிக்க போகிறோம். ஆனால் ஒன்றுமறியாத எதிர்கால சந்ததியினரும் இதை அனுபவிக்க போகிறார்கள் என்பதுதான் பரிதாபம். இதற்கான எச்சரிக்கை மணி ஏற்கனவே அடிக்க தொடங்கி விட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அங்கு நிலவிய கடும் வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தது அந்நாட்டு அரசு. அரசாங்கத்திற்கு தெரியாமல் புதிய ஆழ்துளை கிணறுகளோ, ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளையோ பயன்படுத்தக்கூடாது. அங்குள்ள விவசாயிகள் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள்தான் அனுமதி என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தண்ணீரையும், வளங்களையும் வரன்முறையின்றி பயன்படுத்தியதன் விளைவுதான். அங்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வருணபகவான் கருணை காட்டி உள்ளார் என்றால் நிலைமையை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள். இதே நிலை நம் நாட்டிற்கோ, ஊருக்கோ வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தோராயமாக இன்னும் 50 ஆண்டுகளில் இந்த உலகம் மரங்கள், பறவைகள், விலங்குகள் இன்றி வெறிச்சோடி காணப்படும். ஏன் தண்ணீர் கிடைக்காமல் நாம் இறந்த பிறகும் நமது உடல்களை உணவாக உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் கூட இருக்காது என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படியே இயற்கையை தொடர்ந்து வஞ்சித்து வந்தால் நம் நாட்டிலும் வருங்காலத்தில் குடிப்பதற்கு நீர் இருக்காது. தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் துயரங்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். முற்றிலுமாக மரங்களை அழித்துவிட்டால் சுவாசிக்க காற்று எங்கிருந்து கிடைக்கும்? இதனால் பள்ளி குழந்தைகள் புத்தக பைகளை சுமப்பது போல் ஒவ்வொருவரும் முதுகின் பின்னால் சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கிச் செல்ல நேரிடும் 18 வயது உடைய ஆண், பெண் இருபாலருமே 70 வயது முதியவரைப் போல தோற்றமளிக்கும் அபாயமும் காணப்படும். நம்முடைய மூளைச்செல்கள் பலவீனம் அடைந்து முற்றிலுமாக சிந்திக்கும் திறனை இழந்து நிற்போம். மரங்கள் இல்லாததால் புவியின் வெப்பநிலை பன்மடங்கு அதிகரித்து காணப்படும். உடல் உஷ்ணத்தால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டு தன்மை ஏற்படும் சோகத்திற்கும் வாய்ப்பு உள்ளது. இயற்கையை தண்டிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பல்வேறு நோய்கள் நமது உடலில் அணி அணியாக குடியேறி விடும். இதனால் மனிதனின் சராசரி வாழ்நாள் 40 வருடமாக குறைந்து விடும். இயற்கைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் துரோகத்தால் விவசாய பயிர்கள் விளைய வேண்டிய இடம் எல்லாம் நஞ்சாக மாறி விடும். உண்பதற்கு உணவு இருக்காததால் உணவினை மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டியது வரும். இவையெல்லாம் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. இயற்கை அன்னைக்கு தொடர்ந்து பாவம் செய்து வந்தால் இதை அனுபவிக்க வேண்டியது வரும் என்ற எச்சரிக்கைதான். வளர்ச்சி என்பது இன்றைய சமுதாயத்திற்கு தேவைதான். ஆனால் வளர்ச்சியையே மேற்கோள் காட்டி வனங்களையும், ஆறுகளையும் அழித்து நாம் மகிழ்ச்சியாக வாழப்போகிறோமா, இல்லையே. எனவே நாமும் வாழுவோம். இயற்கை அன்னையையும் வாழ விடுவோம்.

No comments:

Popular Posts