பெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் |
By அர்ஜுன் சம்பத் |
தனியார் கட்டண சேனல்களுக்கு (கேபிள் டி.வி. மற்றும் டிடிஎச் உள்ளிட்டவை) புதிய கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') விரைவில் அமல்படுத்த உள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் முறை மூலம் மட்டுமே இனி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைப் பார்க்க முடியும்.
இலவச சேனல்களைக் பார்ப்பதற்குக்கூட செட்-ஆப் பாக்ஸ் அல்லது டிடிஎச் நிறுவனத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக தமிழக அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70 சந்தா செலுத்தி கட்டணச் சேனல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கண்டு களித்துவந்த பொது மக்கள் இனிமேல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
"டிராய்' விதிமுறைகளின்படி விரும்பும் கட்டணச் சேனல்களைத் தேர்வு செய்து அந்த சேனல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி மட்டுமே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களைக் காண முடியும். கட்டணத்துடன் அதற்கான ஜிஎஸ்டி-யும் சேர்த்து பொதுமக்கள் செலுத்த வேண்டும். ஒருவகையில் பேக்கேஜ் முறையில் தாங்கள் விரும்பாத, பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி வந்த பொதுமக்களுக்கு இது நன்மை செய்வதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களுக்கும் "டிராய்' மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்டண சேனல்களும் தங்களுக்கான கட்டணத்தை வெளிப்படையாக அறிவித்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.
வருங்காலத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்திட குறைந்தபட்சம் மாதம் ரூ.130 மற்றும் இதற்கான ஜிஎஸ்டி விதிப்புடன் சேர்த்து ரூ.153.40 முதல் ரூ.300 வரை செலவு செய்ய நேரிடும். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். நடுத்தர குடும்பத்தினர் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது.
தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70-க்கு கட்டணச் சேனல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்த்து வந்த மக்கள், இனிமேல் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் .
இது ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்துடன் உருவாக்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்குதல் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இனி அனலாக் முறை சிக்னல்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கேபிள் டி.வி. வர்த்தகத்தில் தனியார் தொலைக்காட்சிகளுக்குச் சாதகமாக இருந்த சூழலை மாற்றிடவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று கொண்டிருந்ததைத் தடுக்கவும் இந்தத் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோக முறையை ஒழித்துக் கட்டவும், அரசுக்கு வந்து சேரவேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழக அரசு கேபிள் டி.வி.நிறுவனம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே தமிழக அரசு கேபிள் டி.வி. யை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
38 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பலம் பொருந்திய தமிழகத்தின் பெரிய நிறுவனமாக மக்களுக்குச் சேவை செய்துவரும் அரசு கேபிள் டி.வி.க்குப் போட்டியாக தனியார் டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் தனியார் செட்-ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மக்களுக்குத் தேவையான இணையதள சேவைகளும் வழங்கப்படுகின்றன.
தொடக்கம் முதலே மத்திய அரசின் "டிராய்' நிறுவனம் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை ஒவ்வொரு விஷயத்திலும் தாமதப்படுத்தி வருகிறது. உரிய அங்கீகாரத்தை வழங்க பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு முறையும் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வருகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கத்தைத் தடை செய்ய வேண்டும். கொள்ளை லாபநோக்கத்துடன் கட்டண சேனல்களை தனியார் தொலைக்காட்சி முதலாளிகள் நடத்துகின்றனர்.
ஏற்கெனவே விளம்பரம் மூலம் அதிக வருவாய் ஈட்டி லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், திடீரென கட்டண சேனல்களாக மாறி மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன.
கட்டண சேனல்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி-யையும் சந்தாதாரர்களே (பொதுமக்கள்) செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகளான தூர்தர்ஷன் உள்பட ஏராளமான இலவச சேனல்களும் மேலும் தனியாருக்குச் சொந்தமான இலவசச் சேனல்களும் உள்ளன.
இனிமேல் இவற்றை கேபிள், செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடி எச் முறை மூலம் காணவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்தித்தான் ஆகவேண்டும். சன் டி.வி. குழுமம், விஜய் டி.வி. குழுமம், ராஜ் டி.வி. குழுமம் உள்ளிட்டவை இலவச சேனல்களாகவே இருந்தன; லாபகரமாகவும் இயங்கி வந்தன. இவர்கள் தங்கள் குழுமத்தின் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு, மீதி அனைத்துச் சேனல்களையும் கட்டணச் சேனல்களாக மாற்றி "பேக்கேஜ்' முறை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.
இனி அரசுக்குச் சொந்தமான இலவசேனல்களைக் பார்ப்பதற்குக்கூட, அதாவது தொலைக்காட்சி பார்ப்பதற்குகூட குறைந்தபட்ச கட்டணமாகிய ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கேபிள் டி.வி. தொழிலில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') அறிவித்துள்ள மக்களே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் சிறு நன்மை மட்டுமே உண்டு. மற்றபடி "டிராய்' நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாகும்.
எனவே, கட்டண சேனல்களை தடை செய்யும் வகையில் விதிமுறைகளிலும் சட்டத்திலும் "டிராய்' நிறுவனம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டணச் சேனல் முறையைத் தடை செய்ய வேண்டும்.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரம் மூலம் லாபம் ஈட்டி வருகின்றன. அவற்றுள் சில கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தில் கட்டண சேனல்களாக மாற்றுவதற்குத் தடை செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களையும் தடை செய்ய வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாகும்.
இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குச் சேனல்கள், செய்திச் சேனல்கள், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு உதவி செய்யக்கூடிய அனைத்துச் சேனல்களும் இலவசமாகவே வழங்கப்படவேண்டும்.ஸ்ரீ
தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தனியார் டி.வி. சேனல்கள், கொள்ளை லாபம் அடிக்க துணைபோகும் வகையில் புதிய சட்டம் மற்றும் விதிமுறைகள் அமைந்துள்ளன.
தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை "டிராய்' அங்கீகரித்து, அதிகாரம் கொடுத்து மக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.70) அனைத்துச் சேனல்களையும் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர
வேண்டும்.
ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவையாக விளங்கும் அரசு கேபிள் டிவிக்கு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும். கேபிள் டிவி தொழிலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
கேபிள் வயர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்றும் மின் கம்பங்களில் கேபிள் கொண்டு செல்ல அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கட்டண சேனல்களின் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை மேம்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் மூலம்தான் ஒளிபரப்புகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களில் அரசு சேவை நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வினாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக வரவிருக்கின்ற கேபிள் டிவி கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்.
கட்டண சேனல்களை பொதுமக்கள் புறக்கணித்து மத்திய அரசின் தூர்தர்ஷன் பொதிகைச் சேனல்களையும் இலவச் சேனல்களையும் மட்டுமே ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பெரும் சுமையாக வரவிருக்கும் கேபிள் டி.வி. கட்டண உயர்விலிருந்து தப்பிக்க முடியும்.
கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment