தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடம் இல்லையா?
மு.முத்துமீனா, எழுத்தாளர்
உ லகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழின் வழிவந்த தமிழின மக்கள் என்று அனைவரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான மொழிகளில் முதுமொழி தமிழ் என முழக்கமிடவும் நாம் தவறுவதில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று மார்தட்டிக் கொள்வதிலும் ஐயமில்லை. இவை யாவும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரல் என்று ஒப்புக் கொண்டாலும், சற்று ஆழத்தில் சென்று சில நடப்புகளைக் கண்டறிவது மிக அவசியமான ஒன்றாகும்.
பொதுவாக ஒரு மனிதனுக்கு தமிழுணர்வு எவ்வாறு ஏற்படுகிறது? சிறுவயதில் பாடத்தில் படிக்கும் திருக்குறளும் நன்னெறியும் போதித்த நற்சிந்தனைகளினாலும், செந்தமிழ் கவிதைகளின் உணர்வுபூர்வ கருத்துகளினாலும், கற்பனைமிகு கதைகளினாலும், பாரம்பரியமிக்க காவியங்களினாலும், ஆழ்மனதில் தாய்மொழியான தமிழ் மீது பற்று உருவாகிறது. இன்றைய காலகட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே தமிழைப் பாடத்தின் வழியே கற்க முடியும். அதன் பிறகு பெரும்பாலும் கல்லூரியில் அனைத்து ஆங்கில மொழிக் கல்வியே. தாய்மொழி ஆகி விட்ட காரணத்தினால் பேசிக்கொள்ள மட்டுமே மாணவர்களிடத்தில் பயன்படும் மொழியாக ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தமிழ் செய்தித்தாள்களைக் கூட பெரும்பாலானோர் படிப்பதில்லை. ஆங்கில செய்தித் தாள்களை தான் வாசிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சில வருடங்களாக ஆங்கில நாவல்களை படிக்கும் வழக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
நெடுந்தூர ரெயில் பயணங்களிலும் பஸ் பயணங்களிலும் தங்கள் கையில் கட்டாயம் ஒரு ஆங்கில நாவலை அதிகப்படியான இளைஞர்களிடத்தில் காணமுடியும். வரவர புத்தகத்தை எடுத்து வராமல் போனிலேயே இது போன்ற நாவல்களைப் படித்து வருகிறார்கள். ஆங்கில புத்தகங்களை படித்தால் தான் நாகரிகம் எனக் கருதி நம் தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆங்கிலம் உலக மொழியே. படிப்பதற்கு, வேலை செய்வதற்கு இன்றியமையாத ஒன்றே. அதற்காக நம் சுயமானத்தன்மையை இழந்து, தமிழை மறந்து அந்த மொழியை கற்க வேண்டும் என்பது தவறான ஒன்று. ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நோக்கம் தவறில்லை. அதற்கு நாம் முயற்சி என்ற பெயரில், நம் தமிழ் மொழியை ஒதுக்கி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது பிரபலமாக இருக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை விட நூற்றுக்கணக்கான அருமையான நாவல்களை நம் தமிழ் எழுத்தாளர்கள் அளித்துள்ளனர். ஆனால் இவற்றை படிக்க யாரும் முன்வரவில்லை.
இதுவே தமிழ் படைப்புகளையும் எழுத்தாளர்களையும் பற்றி கேட்டால் ஒரு நான்கு பேரை விரல்விட்டு இவர்கள் கூறினாலே ஆச்சரியம். 700 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தகத்தை ஒரே இரவில் படித்து முடிக்கும் நம் தமிழ் இளைஞர்களால் 70 பக்கம் கொண்ட தமிழ் நூலுக்கு ஒரு மணி நேரம்கூட ஒதுக்க விருப்பமில்லை. இவ்வாறு நாட்கள் செல்லத் தொடங்குமெனில், புதிய படைப்பை உருவாக்க இளம் எழுத்தாளர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். இதன் விளைவு தமிழ் மொழியின் மீதுள்ள பற்று என்பது அறவே இல்லாமல் அழிந்துவிடும். குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் வடமொழி எழுத்துகள் கலக்காமல் அனேகம்பேர் பெயர் சூட்டுவதில்லை. அழகிய தமிழில் தனித்துவமான இனிய பெயர்கள் இருப்பினும், சுத்தமான தமிழ்ப் பெயர்களை வைக்க முன்வருவதில்லை. மேலும் ஆங்கில பாடல்களையும், கேட்பதில் உள்ள ஆர்வமே தனி, நம் இளைஞர்களிடத்தில். அர்த்தம் புரியவில்லை என்றாலும் இந்தி பாடல்களையும், வாயில் நுழையவே இல்லை என்றாலும் ஆங்கில பாடல்களையும் கேட்டால்தான் இவர்களுக்கு பெருமை. இதனால் தமிழுக்கு ஏற்படும் நிலைமை என்ன? என்று பார்க்கப்போனால் இன்றைய இளம் தலைமுறை நாளை முதுமை தலைமுறைக்குச் செல்லும்போது இன்று போல் தமிழின் பெருமையைப் பேச யாரும் இருக்கமாட்டார்கள். எங்கோ ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்கள் பேச்சு எடுபடாமல் போய்விடும். இன்று 50 பேர் கொண்ட வகுப்பறையில் 5 பேர் பிரெஞ்சு மொழியையும், 5 பேர் இந்தி மொழியையும் மீதமுள்ள 40 பேர் தமிழையும் முதல் மொழியாக தேர்ந்தெடுத்துப் பயின்றுவரும் விகிதமானது, அடுத்த தலைமுறையில் அப்படியே தலைகீழாக மாறிவிடும். பெயரளவில் மட்டுமே தமிழர்கள் என்றும், தமிழ்நாடு என்றும் பேசிக்கொள்வதில் உண்டாகாது தமிழ் உணர்வு. அன்றாட வாழ்க்கையில் மொழியோடு சேர்ந்து நாமும் பயணித்தல் அவசியம். இக்காலத்தில் தமிழை வளர்க்க முடிகிறதோ இல்லையோ, நிராகரிக்க எளிதில் முடிகிறது. மகாகவி பாரதியும், பாரதிதாசனும் கண்ட கனவில் நூற்றில் பத்து சதவீதமாவது இன்றைய இளைஞர்கள் பின்பற்றுதல் மிகவும் தேவையான ஒன்றாகும். பிறமொழிகளின் ஆதிக்கத்தினால் அழிந்து போன நூற்றுக்கணக்கான மொழிகளில் தமிழ் மொழியும் சேர்ந்துவிடும் அபாயம் தெளிவாக உள்ளது. அதற்காக புறநானூற்றையும், தொல்காப்பியத்தையும் இளைஞர்கள் படிக்க வேண்டும் என்பதில்லை. பொழுதுபோக்கிற்காக ஆங்கில நாவலைப் படிக்கும் நேரத்தை தமிழ் நூல்களுக்கும் அளித்தால் போதுமானது. மனதில் தோன்றும் கருத்துகளை அவ்வப்போது ஒரு டைரியில் தமிழில் எழுதப் பழக வேண்டும். உரை செய்தி அனுப்பும் போது தமிழ் வாசகத்தை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யாமல் கீபோர்டை தமிழுக்கு மாற்றி தமிழில் மெசேஜ் அனுப்புதல் நல்லது. இந்தக் கருத்துகள் யாவும் பின்பற்றுவதற்கு மிகவும் எளிதானவை. இவையாவும் செய்வதால் வேலையிலோ வெளியிலோ தன்மான இழுக்கு எதுவும் வரப்போவதில்லை. பிற மொழிகளின் ஆதிக்கம் எப்படி அணு அணுவாக நுழைந்ததோ, அதேபோல் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து அவற்றின் ஆதிக்கத்தைத் தகர்த்து, தமிழையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும் காத்திட வேண்டும். தமிழ் மொழியை காக்க முழக்கங்கள் தேவையில்லை. சில பழக்கங்களும், வழக்கங்களுமே தேவையானது. பார் போற்றும் தமிழ் என்பதில் பெருமை இல்லை. ஊர் மக்களாகிய நாம் போற்றிப் பின்பற்றுவதே பெருமை.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment