அழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்
கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் பாலம். கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ என்ற லத்தீன் உச்சரிப்பில் இருந்து உருவானதே ‘காலண்டர்’ என்ற ஆங்கில வார்த்தை. இதை அழகிய தமிழில் ‘நாட்காட்டி’ என்று கூறுகிறோம். எகிப்தியர்கள்தான் காலண்டரை முதன்முதலில் பிரபலப்படுத்தினர் என கூறுகிறார்கள். விவசாயம் செய்யவும், அறுவடை செய்யவும், ஆற்றில் வெள்ளம் வருவதை கணக்கிடவும் எகிப்தியர்கள் காலண்டரை பயன்படுத்தினர். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என முடிவு செய்து, அதில் 12 முறை வானில் பவுர்ணமி உருவாவதை கணக்கிட்டு 12 மாதங்களாக பிரித்தனர். இந்தியாவில் பல மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பட்டாசு தொழிலுக்கு சிவகாசி எவ்வாறு பெயர் பெற்றதோ, அதேபோன்று காலண்டர் தயாரிப்பு தொழிலும் இங்கு சிறப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள மொத்த காலண்டர் உற்பத்தியாளர்களில் 85 சதவீதம் பேர் சிவகாசியில் உள்ளனர். இங்கு 100-க்கும் அதிகமான காலண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் ஒட்டு மொத்த காலண்டர் தயாரிப்பு பணிகளையும் தாங்களே செய்கிறார்கள். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளை பிரித்து கொடுத்து செய்து வருகிறார்கள். அதாவது, ஸ்கோரிங், லேமினேஷன், கட்டிங், பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங், பாலீஸ் ஒர்க்ஸ் உள்ளிட்ட பணிகள் இதில் முக்கியமானவை. இந்த பணிகளை குடிசை தொழிலாக செய்ய முடியும். இந்த பணிகளை பலரும் தங்கள் இருப்பிடங்களிலேயே செய்து வருகிறார்கள். இதனால் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக காலண்டர் தயாரிப்பில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது காலண்டர் தொழில் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த காலண்டர் உற்பத்தி தொழிலுக்கு திடீரென 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இது உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலண்டருக்கு ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து வாங்கியதால், பல வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை குறைத்துக்கொண்டனர். இதனால் கடந்த ஆண்டு காலண்டர் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. ஏற்கனவே தொழிலாளர்களின் கூலி உயர்வு, பேப்பர் விலை உயர்வு, அட்டை விலை உயர்வு, மின்சார தடை போன்றவற்றால் காலண்டர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பெரும் சுமையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்காக காலண்டர் தயாரிப்பு தற்போது சிவகாசியில் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த காலங்களை போல் இல்லாமல் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறும் போது 5 சதவீதம் மட்டும் வரியாக செலுத்தி வந்த நாங்கள் குடிசை தொழிலாக உள்ள காலண்டர் தயாரிப்புக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது அவர் தமிழ் காலண்டர்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதுவரை ஆங்கிலத்தில் காலண்டர்கள் கேட்டவர்கள் தமிழ் காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்தனர். மேலும் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலும் ஆர்டர் கொடுத்தனர்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் காலண்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இது உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக பாதித்தது.நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படும் காலண்டர்களுக்கு 12 சதவீதம் விரி செலுத்த முன்வராத பலர் அன்பளிப்பு பொருட்களாக காலண்டர்களை கொடுப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 30 சதவீதம் உற்பத்தி பாதித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் காலண்டர் தொழில் முற்றிலும் அழிந்துவிடும்.
ஏற்கனவே சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு மாற்றாக காலண்டர் தயாரிப்பு தொழில் இருக்கிறது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள இந்த தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் இதில் ஈடுபட்டு வரும் 1½ லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். காலண்டர் உற்பத்திக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைத்தால் மட்டுமே இந்த தொழில் காக்கப்படும். இல்லை என்றால் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று குறிப்பிட்டார். சிவகாசியின் அடையாளமாக விளங்கும் காலண்டர் தயாரிப்பு தொழிலை பாதுகாத்து, தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
-சாமி சன், ஆலந்தலை.
Sunday, 16 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment