Follow by Email

Monday, 24 December 2018

போற்றுவதும் தூற்றுவதும்தான் அரசியலா?

போற்றுவதும் தூற்றுவதும்தான் அரசியலா? பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் த மிழக அரசின் 2017-18-ம் ஆண்டுக்கான வருவாய் ரூ.94 ஆயிரம் கோடி. இதில் ரூ.45 ஆயிரம் கோடி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போய்விடுகிறது. சரிபாதி! அவர்களின் ஓய்வூதியத்திற்குச் செலவாவது ரூ.20 ஆயிரம் கோடி. மொத்தத்தில் இரண்டும் சேர்ந்து முக்கால் பங்கு! அதாவது 70 சதவீதம் அரசை நடத்துவதற்கான செலவு; அது ஒரு ரூபாயில் முக்கால் ரூபாய்! அரசு வாங்கி வாங்கித் திரட்டி வைத்திருக்கும் ‘அழுக்குச் சுமையான’ கடனுக்கு ஆண்டொன்றுக்குக் கொடுக்கும் வட்டி, ஆண்டு வருவாயில் சற்றேறழத்தாழ நான்கில் ஒரு பங்கு; அதாவது 24 சதவீதம். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்த 94 சதவீத செலவை மாற்றமுடியாது. இதில் 24 சதவீத வட்டி இவர்களின் பொறுப்பற்ற ஆட்சியின் விளைவு! மீதியிருக்கும் 6 சதவீத வருவாயும், மைய அரசு நமக்குத் தருகின்ற பங்கும் சேர்த்து மொத்தம் ரூ.41 ஆயிரத்து 600 கோடி. இது முழுவதையும், ‘மனதிற்கு தோன்றிய இலவசங்களுக்கு’ செலவு செய்கிறார்கள்! இதுதான் இவர்களுக்குத் தெரிந்த ஆட்சிமுறை! வருவாயில் கால்பங்கை, 24 சதவீதத்தை வட்டியாகக் கொடுக்க நேரிட்டிருக்கும் அடிமூலம் பெருமளவுக்கு மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, போன்ற நிலைமைக்கு இலவசங்கள்தாமே! முந்தைய ஆட்சியில் தொலைக்காட்சி கொடுத்ததைக் கடுமையாக விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்த ஒருவர், தன்னுடைய அடுத்த ஆட்சியில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டரெல்லாம் கொடுத்தார்! அவருக்கு அடுத்து வந்தவர் இளம் பெண்களுக்கு மொபட் வாங்குவதற்கான தொகையில் சரிபாதியான ரூ.25 ஆயிரத்தை மானியமாகக் கொடுத்தார்! நம்முடைய வண்டார்குழலிக்குக்கூடத் தெரிகிறது, எண்ணெயும் பருப்பும் வாங்கியது போக மிச்சக் காசில்தான் நகப்பூச்சு வாங்க வேண்டுமென்று! இது நிதியமைச்சருக்குத் தெரியாதா? 1947 தொடங்கி ராஜாஜி, காமராஜர், கடைசியாக ஆண்ட கலைஞர் காலம்வரை நம்முடைய கடன் மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய்! கடைசி ஆட்சிக்காலக் கடன் 4.5 லட்சம் கோடி ரூபாய்! அதற்கான வட்டி, வருவாயில் கால்பங்கு! அம்மா உணவகம்! நம்முடைய தெருக்களில் மரத்திற்கு மரம் ஆயா உணவகங்கள் உண்டு! ஒரு ஆயா தோசை, ஆப்பம், இட்லி போன்றவற்றைச் சுட்டு, இருந்த இடத்திலிருந்தே தட்டில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார். வாடிக்கையாளர்கள் பெரும்பகுதி ரிக்‌ஷாக்காரர்கள் உள்பட தொழிலாளர்கள் அங்கு சாப்பிடுவார்கள். அம்மா உணவகத்தில் என்ன விலையோ அதே விலைதான் ஆயா உணவகத்திலும். அம்மா உணவகம் இழப்பில் நடக்கிறது; ஆயா உணவகம் லாபத்தில் நடக்கிறது! காலங்காலமாக மரத்தடிதோறும் நடந்து வந்த மலிவு விலை உணவகத் திட்டம்தான் அம்மா உணவகம். இதற்கென்று அரசு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. எவர்சில்வரில் ஏனங்கள், பாத்திரங்கள், தட்டுகள் வாங்கப்பட்டன. சமைப்பதற்கும் பிற வேலைகளுக்கும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்ச் சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் அமர்த்தப்பட்டனர். அரசின் தணிக்கை அதிகாரி தன்னுடைய 2015-ம் ஆண்டு அறிக்கையில் சென்னையில் மட்டும் இதனால் ஏற்படும் இழப்பு ரூ.170 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியின் நிதிநிலையில் ஏற்படும் பற்றாக்குறை அம்மா உணவகங்களின் விளைவாக ரூ.303 கோடியில் இருந்து ரூ.417 கோடியாக அதிகரித்து விட்டது. இழப்பு ஏறத்தாழ ரூ.170 கோடி. ஒவ்வொரு வீதியிலும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டவும் பராமரிக்கவும் மாநகராட்சிக்கு வக்கில்லை! தமிழ்நாடு அரசின் முதுகெலும்பை முறிப்பவை இலவசங்கள்தாம்! ஆடு மேய்க்கின்ற பையனும் படிக்க வேண்டுமென எண்ணிப் பள்ளிகளைப் பெருக்கினார் காமராஜர். அந்தப் பையனின் பிரச்சினை கல்விமட்டுமல்ல; கஞ்சியும்தான் என்பது காமராஜருக்குப் புரிகிறது. மதிய உணவுத் திட்டம் பிறக்கிறது. வருங்காலத் தலைமுறையைக் கட்டமைக்கின்ற இந்த இலவசம் காலத்தின் கட்டாயம்! விவசாயத்திற்கு மின்சாரம் முற்றிலும் இலவசம் என்பது மிகவும் ஏற்புடைய ஒன்று. ஏற்கனவே விவசாயம் கட்டுப்படியாகக் கூடியதாக இல்லை. அதில் மின்சார இலவசம் என்பது உணவு உற்பத்தி சார்ந்தது. கட்டுப்படியாகாத விவசாயத்தைக் கைவிட்டுவிடாமல் இருக்கத் துணைபுரியும் உற்பத்தி நோக்குடைய இலவசம் இது! எந்த ஒரு இலவசத்தையும் உற்பத்தித் தொடர்புடையதா? அல்லது நுகர்ச்சித் தொடர்புடையதா? என்று பாகுபடுத்திப் பார்க்கத் தெரிந்த ஆட்சிதான் நல்லாட்சியாகத் திகழ முடியும்!அவினாசி அத்திக்கடவு நீர்ப்பாசனத் திட்டத்திற்கான தேவை 1967-ம் ஆண்டிலேயே உணரப்பட்டது.1997-ல் மீண்டும் இது வலியுறுத்தப்பட்டது.2002-ல் திட்டம் மீண்டும் கைவிடப்பட்டது.2009-ல் அந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியை மைய அரசிடம் கோரி அது கிடைக்க பெறாததால், அந்தத் திட்டம் இன்னொரு முறை கைவிடப்பட்டது. பாட்டன் காலத்துத் திட்டம் இப்போது பேரன் காலத்தில் மீண்டும் தூசிதட்டி நெருக்கமாக ஆராயப்படுகிறது.இந்தத் திட்டம் நிறைவேறினால் நூறு இருநூறு ஏக்கரல்ல, இரண்டு லட்சத்து முப்பதினாயிரம் ஏக்கர் விளையும்! அந்த நீர் செல்லும் வழியெல்லாம் நிலத்தடி நீர் செழிக்கும்.ஐம்பது அறுபது ஆண்டுகளாக அதனுடைய தேவை உணரப்பட்டிருந்தும், அதற்குத் தேவையான வெறும் 1,500 கோடி நம்மிடம் இல்லையா? ஏன் அடுத்தடுத்து வந்த அரசுகள் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தன? இரண்டு லட்சத்து முப்பத்தினாயிரம் ஏக்கரை விளையவைப்பதைவிட, வேறு எந்த வேலை பெரிதாகப் போய்விட்டது? ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் மின்விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டதற்கு அரசு செலவு செய்த தொகை ரூ.7 ஆயிரத்து 686 கோடி!இந்தப் பணத்தில் இதுபோன்ற ஐந்து அவினாசிஅத்திக்கடவு திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாமே! வாய்க்கால்களில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்திருக்குமே; எவ்வளவோ பொட்டல்காடுகள் விளைந்திருக்குமே; எவ்வளவோ குடும்பங்கள் செழித்திருக்குமே!சொந்தப் பணத்தில் மிக்சிகள் வாங்கி இருப்பார்களே!உற்பத்திசார்ந்த செலவினங்கள் வேறு; நுகர்ச்சிசார்ந்த செலவினங்கள் வேறு!அரசின் நிதிநிலை கடல்நீர்போல் அளப்பரியது அன்று;ஊற்று நீர்போல் வரம்புடையது!எதை முதன்மைப்படுத்துவது என்றுஅறியத் தெரிந்தவனே சிறந்த ஆட்சியாளன்!எத்தனை எத்தனை கட்சிகள்? எத்தனை எத்தனை பொதுக்குழுக்கள்? எத்தனை எத்தனை கோடி உறுப்பினர்கள்?அரசியல் கட்சிகள் ஏன் விவாதிக்க அஞ்சுகின்றன?போற்றுவதும் தூற்றுவதும்தான் அரசியலா?

No comments:

Popular Posts