Sunday 16 December 2018

ரபேல் தீர்ப்பு ஏமாற்றமா?

ரபேல் தீர்ப்பு ஏமாற்றமா? பிரசாந்த் பூஷன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ‘ர பேல்’ என்ற வார்த்தை கடந்த சில மாதங்களாக பா.ஜ.க.வினரை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. பா.ஜ.க.வின் ஆட்சியில் ஒரு கறையாக ரபேல் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் அதுதொடர்பான வழக்கில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு, அவர்களை ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டு டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 போர் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், கடந்த 2015-ம் ஆண்டில் அந்த நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 57 ஆயிரம் கோடி ரூபாயாகும் (7.87 பில்லியன் யூரோ). கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்க வேண்டும். இந்த நிலையில் டசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்தது. இதற்கிடையே மத்திய பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் கட்சி, ரபேல் போர் விமான ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹொல்லாண்டே , “எங்களது வர்த்தக பங்காளராக இந்தியா சுட்டிக்காட்டிய ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு வாய்ப்புகளை நாங்கள் நாட முடியாமல் போய்விட்டது” என்று அளித்த பேட்டி, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தூபம் போட்டது. ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல வழக்கு தொடர்வதில் பிரபலமான சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ரபேல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்; ரபேல் ஒப்பந்தத்தை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்த மூன்று கோரிக்கைகளையும் 14-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து பிரசாந்த் பூஷன், அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் செய்திக் குறிப்பு மூலம் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதை பிரசாந்த் பூஷன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:- இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. 36 ஜெட் விமானங்கள் வேண்டும் என்று விமானப்படையின் தலைமையகம் கோராத நிலையிலும், பாதுகாப்பு உறுதிக் கவுன்சிலின் (டி.ஏ.சி.) அங்கீகாரத்தை பெறாத நிலையிலும் ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலுக்கான முதல் கட்டத்தின்படி, அதற்கான கோரிக்கையையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். ஆரம்பத்தில் 126 போர் ஜெட் விமானங்களை விமானப்படை கேட்டு, அதற்கு டி.ஏ.சி. அங்கீகாரம் அளித்திருந்தது. அதற்கான ஒப்பந்தப்புள்ளியை டசால்ட் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தன்னிச்சையாக செயல்பட்டு 36 போர் விமானங்களை மட்டும் வாங்க பிரான்ஸ் அதிபருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்பங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கைக்கு முரணானது. இந்த சூழ்நிலையில்தான் டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் பங்குதாரர்களாக இணைந்து கொண்டன. ரிலையன்ஸ் பற்றி ஹொல்லாண்டே தனது பேட்டியில், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை. என்றாலும், அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று கூறி உறுதி செய்துள்ளார். 36 விமானங்களின் விலையை 5.2 பில்லியன் யூரோ என்றுதான் விலை பேச்சுவார்த்தைக் குழுவில் 3 மூத்த அதிகாரிகள் முதலில் நிர்ணயித்தனர். அதன் பின்னர் பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு, அந்தத் தொகையை 8.2 பில்லியன் யூரோ என்று உயர்த்தியது. கடைசியில், 7.2 பில்லியன் யூரோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தொகைப்படி ஒரு விமானத்தின் விலை ரூ.1,650 கோடி ஆகும். ஆனால் அதற்கு முன்பு 126 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின்போது ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தோம். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. எனவேதான் ரபேல் விவகாரத்தில் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தோம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், எங்கள் மனுவில் கூறப்பட்ட விவகாரத்தின் உண்மை நிலை பற்றி பேசவில்லை. விசாரணை கோரும் எங்களின் பிரதான கோரிக்கையைக்கூட ஆராயவில்லை. ரபேல் ஒப்பந்தத்தைத்தான் மனுதாரர் எதிர்க்கிறார்கள் என்ற அளவில்தான் கோர்ட்டால் எங்கள் வழக்கு கவனிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு மத்திய அரசு ரகசியமாக அளித்த ஆவணங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் தவறாக உள்ளன. அதில் ஒன்று என்னவென்றால், விலை பற்றிய விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் ஜெனரலிடம் (சி.ஏ.ஜி.) சொல்லப்பட்டதாகவும், அதுபற்றிய சி.ஏ.ஜி.யின் அறிக்கையை பொது கணக்குக்குழு ஆய்வு செய்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அந்த அறிக்கையின் குறிப்பிட்ட பாகம் வைக்கப்பட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. பாராளுமன்றத்தில் அது வைக்கப்படவே இல்லை. வழக்கில் பதிவு செய்யாமல், மத்திய அரசு நேரடியாக கோர்ட்டுக்கு கொடுத்துள்ள தவறான தகவலாக இது இருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களின் அடிப்படையில்தான் வழக்கை கோர்ட்டு முடிவு செய்துள்ளது. ஆனால் அவை தவறான தகவல்களாகும். ரகசியமாக சீலிட்ட கவர்களில் தரப்படும் தகவல்களை நம்புவது எவ்வளவு ஆபத்து என்பது புலப்படுகிறது. ரபேல் விமானங்களை வாங்குவதில், கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது உள்பட நாங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையுமே கோர்ட்டு ஆராயவில்லை. விலையை 5.2 பில்லியன் யூரோவில் இருந்து திடீரென்று 8.2 பில்லியன் யூரோவாக உயர்த்தியது பற்றி நாங்கள் கூறிய கருத்தையும் கோர்ட்டு ஆராயவில்லை. எனவே ரபேல் ஒப்பந்தத்துக்கு நற்சான்றிதழை கொடுத்ததுபோல் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. ரபேல் விவகாரத்தில் தனிப்பட்ட விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும்வரை மக்கள் மனதில் இது உறுத்திக்கொண்டுதான் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Popular Posts