Sunday 16 December 2018

நினைவை நிலை நிறுத்தும் கலைஞர் சிலை

நினைவை நிலை நிறுத்தும் கலைஞர் சிலை டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், முன்னாள் எம்.எல்.ஏ. எ ல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் எப்போதுமே ‘ஏக்கம்’ இருப்பது உண்டு. அத்தகைய ஓர் ஏக்கம் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் இருந்ததை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். சட்டப் பேரவையில் பத்தாண்டு காலம் அவரோடு நெருங்கிப் பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 1998-ம் ஆண்டு கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” தன் வரலாற்று நூலின் முன்னுரையில் அவர் எழுதியிருந்ததை நான் சட்டப் பேரவையில் பதிவு செய்தேன்.“நான்காவது முறையாக நாடாளும் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கியுள்ள நிலையில், நாலாவது பாகத்தினை நானே எழுதுவேனோ அல்லது நாட்டு மக்கள் இதயத்தில் இந்த வரலாற்றுக் குறிப்புகள் வரிகளாக வடிவம் கொள்ளுமோ, அதை நிர்ணயிக்கும்போது நான் இருப்பேனோ? என்று அப்போது வெளியாகியிருந்த “நெஞ்சுக்கு நீதி” மூன்றாம் பாக முன்னுரையினை வாசித்து விட்டு நான் பேசினேன்: “நாம் நம்புகிற இறைவன், நீங்கள் நம்புகின்ற இயற்கை உங்களுக்கு மேற்கொண்டு எழுதும் வாய்ப்பை நல்கட்டும்!” இந்தப் பேச்சைக்கேட்ட சட்டப்பேரவையில் ஒரே ஆரவாரம். முதல்-அமைச்சர் கருணாநியை வாழ்த்திடும் விதமாக பலமாக மேஜைகளைத் தட்டி உறுப்பினர்கள் எனது பேச்சினை வரவேற்றார்கள். அந்த நிகழ்வுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும், “நெஞ்சுக்கு நீதி” ஆறாம் பாகம் வரை வெளிவந்தது என்பதும் வரலாறு. சிறிது இடைவெளி விட்டு “நெஞ்சுக்கு நீதி” தொடரின் ஏழாவது பாகத்தினைத் தொடங்கி எழுதுகிறேன்! இயற்கையின் துணையை நம்பி! என்று ஆறாம் பாக நிறைவிலும் அவர் குறிப்பிட்டு இருப்பார்.நிறைவாக மேலும் மேலும் வாழவேண்டும் என்ற ‘வேட்கை’, ‘ஏக்கம்’ அவருக்குள்ளே இருந்தது என்பது வெளிப்படை. மக்களுக்கு நெடுந்தொண்டு ஆற்றிட அவர் விரும்பியதில் வியப்பேதுமில்லை. கலைஞரைப் பொறுத்தமட்டில், வரலாற்று நிகழ்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தொண்டாற்றிய ராஜராஜ சோழன் காலத்திலிருந்து அண்மைக் காலத்தில் தொண்டாற்றிய தேவநேயப் பாவாணர் வரை அவர்களின் நினைவுகளுக்கு நீங்காத சின்னங்களை இயற்றி, பெருமை சரித்திரத்தில் சரியாகப் பதிவிடப்பட வேண்டும் என்பதில் குறிப்பாக இருப்பார். எல்லா மதங்களுக்கும் பொதுவாக அறியப்பட்ட ‘பொதுமறை‘யான திருக்குறள் தந்த வள்ளுவருக்கு அவர் செய்த சிறப்பு அலாதியானது. தமிழகத்தின் வடமுனையான சென்னையில் வள்ளுவர் கோட்டம் நிறுவி, தென்முனையான கன்னியாகுமரியில் 133 அடி உயரமான வள்ளுவர் சிலையை நிறுவி மகிழ்ந்தவர். அவர் பேரழிவுகளை உண்டாக்கிய ‘சுனாமி’யையும் தாண்டி குமரிமுனை வள்ளுவரின் சிலை, நிற்பதும், நின்றதும் ‘காலத்தை’ வென்று நிற்கக்கூடிய நினைவுச் சின்னம் அந்தப் பேராசானின் சிலை என்பது உண்மைதானே? “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பதில் கலைஞருக்கு இருந்த தெளிவு அதிசயத்தக்கது. திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் சென்னை மாநகராட்சியில் அதிகாரத்தில் அமர்ந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் (1961) மாறுபட்ட வரவேற்கத் தகுந்த வியப்பான ஒரு காரியத்தை அந்தக் காலத்தில் தி.மு.க. செய்தது. சென்னை பிரதான சாலையில் காமராஜருக்கு ஒரு சிலையை முதன் முதலாக நிறுவியது. “மாற்றான் தோட்டத்திற்கும் மணம் உண்டு” என்ற பொருளினை என்றைக்கும் உணர்த்தும் விதமாக அந்த மகத்தான காரியத்தைச் செய்தது. “வாழும் மனிதர்களின் சிலையைத் திறந்து வைக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்த அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, அந்தச் சிலையை திறந்து வைத்ததோடு மட்டும் அல்லாமல், காமராஜருக்கு என்றைக்கும் அழியாப் புகழ் மாலைகளை வரிசையாக தொகுத்து, பெருமைகளைச் சேர்த்தார். “அசாதாரண, அரிய மக்கள் தொண்டர் காமராஜர்!” என்ற பொருளில் அன்றைய பிரதமர் நேரு பேசிய உரையினை 11-10-1961 வெளியான அத்தனை பத்திரிகைகளும் பெரிதாக மகிழ்ந்து வெளியிட்டன. 1967-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றிய பொழுதில் மறு வருடம், 1968 ஜனவரி முதல் தேதியில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தியதும், அழிவுறாச் சின்னங்களாக தமிழகத்திற்கு, தமிழுக்குத் தொண்டாற்றிய பெருமக்கள் 10 பேருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலைகளை நிறுவியதையும் “மறக்க முடியுமா?”இந்த நிகழ்வில் அன்றைய முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களோடு கலைஞரின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை எளிதாக கணக்கு போட்டுவிடலாம். அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதல்வராக விளங்கிய பொழுது 1975-ம் ஆண்டு அவருடைய சிலையை திராவிடர் கழகம் நிறுவிட, அதை குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். பிற்காலத்தில் தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில், கலைஞரின் அந்த சிலை கடப்பாரைகளைக் கொண்டு உடைக்கப்பட்டது. தன் சிலை உடைக்கப்படும் காட்சியைப் பார்த்து கலைஞர் தனக்கே உரிய பாணியில் ்அதை வேதனை கலந்த பெருந்தன்மையோடு பதிவு செய்ததும் நினைவில் நிற்கக் கூடியது. “என் தம்பி என் மார்பில்தானே குத்துகிறான். புற முதுகில் அல்ல” என்று அவர் அதைக் குறித்து பதிவிட்டதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இப்படி ‘சிலைகள் கூறும் கதைகள்’ நிஜமானவை. சுவையானவை. வரலாற்றின் போக்கில் அழியாதவை என்ற வரிசையில் நிச்சயம் சிலைகளுக்கு இடம் உண்டு.கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் கருணாநிதி என்ற தனி மனிதரின் உழைப்பை, எழுத்தை, இலக்கிய வன்மையை, பேச்சாற்றலை, நினைவாற்றலை, பன்முகத் தன்மைகளைப் பார்த்து, எண்ணி வியக்காதவர்கள் எவருமில்லை.இன்றைக்கு அவர் மறைந்துவிட்ட நிலையில், என்றைக்கும் நினைவில் வாழும் வண்ணம் சென்னையில் வெண்கலச் சிலை திறக்கப்படுவது சாலப் பொருத்தமான ஒன்று. சென்னையில் காமராஜர் முதல் சிலையைத் திறந்து வைத்தார் அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவரின் திருமகள் இந்திரா காந்தியின் மருமகள் சோனியா காந்தி கலைஞரின் முதல் சிலையை நாளை(16-ந்தேதி) திறந்து வைப்பது இயற்கையாய் அமைந்த ஓர் வினோதம். பொருத்தம்.

No comments:

Popular Posts