மீண்டும் தாங்குமா டெல்டா மாவட்டங்கள்?
வெ.ஜீவகுமார், வக்கீல், தஞ்சாவூர்.
சோ ழநாடு சோறுடைத்து, என்பது கவிஞரின் வாக்கு. காணும் திசையெல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் நன்செய் வயல்களும், தென்னை, தேக்கு, மா, முந்திரி என பசுஞ்சோலையாக காட்சியளித்த தஞ்சைத் தரணி கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி, சின்னாபின்னமான நிலையில் காட்சி அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கே வழியின்றி தவித்துக்கொண்டு இருக்கும் அவல காட்சி அங்கே அரங்கேறி கொண்டு இருக்கிறது.
டிசம்பர் எப்போதும் கடல் கொந்தளிக்கும் மாதம்தான். 2004 டிசம்பரில் சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்தன. தற்போது டிசம்பரில் மீண்டும் ஒரு புயல் பெதாய் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது காலப் பெருவெளியில் 1890 முதல் 2002 வரையிலான இடைவெளியில் மட்டும் கிழக்கு கடற்கரை பகுதி 304 புயல்களை சந்தித்துள்ளது.
இதே காலத்தில் மேற்கு கடற்கரை சந்தித்த புயல்கள் 48 மட்டுமே. சென்ற மாதம் நவம்பரில் கஜா ஏற்படுத்திய காயங்களின் ரணம் இன்னும் சிவந்தே கிடக்கிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்க்கை வேறு விதமாக இருந்தது.
குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பாதாம்கீரை அவர்கள் பருகி கொண்டிருக்கலாம். அவர்கள் பிள்ளைகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வரலாம்.
அதே சமயம் சுமார் 200 கி.மீ. தொலைவில் காவிரி டெல்டாவின் அருகிலேயே பாருங்கள்; கரி புகை படிந்த சிமினிகள், பெருமூச்சுவிடும் மெழுகுவர்த்திகளோடு கொசுக்கடியில் கிடப்பவர்களை, அவர்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை சேறும், ஈரமும் தின்றன. சேதுபவாசத்திரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பல இடங்களில் இப்போதும் இதுதான் நிலைமை. நவம்பர் 15-ந்தேதி நள்ளிரவு தொடங்கி துவம்சம் செய்த கஜா சில மணி நேரங்களில் காவிரி டெல்டாவையே புரட்டி போட்டது. ஒரு கோடி தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்தன. தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் வயது கடந்தது. அங்கு வராகி அம்மன் சன்னதியில் இருந்த பழைய கொன்றை பூ மரம் சரிந்தது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் புயல் காற்றில் சிட்டு குருவிகளின் கூடுகளைப்போல் சின்னாபின்னமாயின. மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், வேதாரண்யத்தின் மான்கள், குதிரைகள் என அத்தனையும் மடிந்தன.
ஆலமரம், மாமரம், தேக்கு, வாகை, மூங்கில், பூவரசு, புளியம், வேம்பு, செம்மரம், யூகலிப்டஸ், வாதாமடக்கி இன்னும் வாழை, கரும்பு, வெற்றிலை, சந்தனம், பாக்கு அனைத்தும் அழிந்தன. சிறுதலைக்காடு தீவில் மீன்கள், நண்டுகள், இறால்கள் செத்து மிதந்தன.
நிற்பதுவும், நடப்பதுவும், பறப்பதுவும் அத்தனையும் நாசமாயின. கடற்கரையோர நாகரிகமும் ஆற்றங்கரையோர நாகரிகமும் ஒருங்கே செழித்ததுதான் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையின் ஒருபகுதி உள்ளிட்ட மாவட்டங்களாகும். பஞ்சமென வந்தவருக்கு படி அளந்த மண்வாகு சோழநாட்டுடையது.
காசா படி அளந்தா, கனத்த நேரம் ஆகுமின்னு
நெல்லா படி அளந்தா, நீண்ட நேரம் ஆகுமின்னு
அரிசியா படி அளந்தா, ஆக்க நேரம் ஆகுமின்னு
சோறா படி அளந்தா, சொக்கநாத பூமி இது... என சோழநாடு சிறப்பிக்கப்பட்டது.
“வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை...”
பார்க்கும் இடம் எங்கும் பசுமையான வயல்களும் இருபுறமும் சோலைகளை கொண்ட சாலைகளுமே என சிலப்பதிகாரம் பெருமிதப்பட்டது.
‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி ஆறுக’ என மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுத சுரபி ஏந்திய பூமி இது. கஜா அட்சய பாத்திரங்களை திருவோடாக்கியது. வள்ளலாய் வாழ்ந்த விவசாயிகளை ரோட்டோரம் யாசிப்பவர்களாக துணி விரிக்க வைத்தது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ இல்லை. தமிழகத்தில்தான் உள்ளது. ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய அலையாத்தி காடும் இங்குதான் உள்ளது. அதுவும் அழிந்தது. இங்கு ஏற்பட்ட பாதிப்பு தேசிய பேரிடரே. மத்திய அரசு இதனை இன்னும் தேசிய பேரிடர் என்று சொல்லவில்லை. மத்திய அரசின் உதவிக்குறித்து மாநில அரசும் ஒருமித்து பேசவில்லை.
தானே, வார்தா, ஒக்கி ஆகிய புயல்களுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணமாக ரூ.1,02,573 கோடி கேட்டது. மத்திய அரசு தந்ததோ ரூ.2,012 கோடிதான். இப்போதும் கஜா புயலுக்கு மாநில அரசு கேட்டது ரூ.14,910 கோடி. மத்திய அரசு இதுவரை தந்துள்ளதோ ரூ.353 கோடியே 70 லட்சம்தான். நிவாரண கணக்கெடுப்பும் முடியவில்லை.
இதுவரை நிவாரண வினியோகமும் நடக்கவில்லை. கஜா நடத்திய ருத்ரதாண்டவத்தால் காவிரி டெல்டா துவண்டு சரிந்து கிடக்கிறது. வேளாண்மையின் வீழ்ச்சி என்பது தனிநபர் சார்ந்தது அல்ல. தென்னை மரம் வீழ்ந்தால் தேங்காய் கிடைக்காது என்பது மட்டுமல்ல. அதன் பாதிப்பு மரம் ஏறுவோரை, தேங்காய் உறிப்போரை, கீற்று பின்னுவோரை, கயிறு எண்ணெய் எடுப்போரை, லோடுகளில் சரக்கு ஏற்றுவோரை அத்தனை பேரையும் முடமாக்குகிறது. தென்னந்தோப்பினை சுற்றிய தேனீக்கள் பிற தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடத்த முடியாமல் போனது. எலிகளை பிடிக்கும் ஆந்தை வம்சத்தையே காணோம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு வைத்து இருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் கிட்டியது. 20 ஆண்டுகள் உழைப்பில் ஒரு தென்னந்தோப்பு உருவாகிறது. அழிந்துபோனதை உருவாக்க மீண்டும் அவ்வளவு காலம் பிடிக்கும். ஒரு அழிவு பேரழிவு ஆவது இதுதான். நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் தென்னைக்கு மாறிய விவசாயிகளின் தலைமுறை அதோகதியானது.
கஜாவின் சுவடுகள் டெல்டாவின் நெஞ்சில் முள்ளையும் கண்ணாடி சில்லுகளையும் ரத்தம் சொட்ட புதைத்துவிட்டது. அதற்குள் பெதாய் மிரட்டுகிறது. மிரண்டுபோய் கிடக்கிறோம் நாங்கள். இனி ஒரு இயற்கை சீற்றத்தை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. இயற்கை அன்னையே, எமக்கு வரம் தராவிட்டாலும் பரவாயில்லை எங்களை சபித்து விடாதே!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment