Sunday 16 December 2018

உயிர்ப்பலி வாங்கும் சாலைப் பள்ளங்கள்

சாலை விபத்துகள் நடக்காத நாளில்லை. சாலையில் நடப்பதே ஆபத்தாகவும் விபத்தாகவும் முடிகிறது. அதைமீறி நடந்து வீடுவந்து சேர்வதே சர்க்கஸ் வித்தை ஆகிவிட்டது. மிகவேகமும், கவனக்குறைவும், பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படாத முரட்டுத்தனமாக ஓட்டும் முறையும்தான் விபத்துகளுக்குக் காரணங்கள் என்று பொதுவாக சொல்லி விடலாம். எல்லா விபத்துகளுக்கும் ஏதோ ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தான் காரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. விபத்துகளுக்குச் சாலைகளும் காரணம் என்பதை நாம் அறவே மறந்துவிடுகிறோம். சாலைகளில் உள்ள சரிசெய்யப்படாத பள்ளங்களால் 2013 முதல் 2017 வரை 14,926 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்காக வருந்துகிறோம் என்று சமீபத்தில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. சிந்தித்துப் பார்த்தால் அந்த இறப்புகளின் பின்னணியில் 14,926 குடும்பங்கள் தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்திருக்கின்றன. சாலையில் ஒருபள்ளம் ஏற்பட்டால் அதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. வாகனம் ஓட்டிவரும்போது அருகில் வந்த பின்புதான் அந்தப் பள்ளம் இருப்பதே தெரியவரும். நாம் சமாளித்து பிரேக் பிடிப்பதற்குள் விபத்து நடந்து நினைவு தவறி மருத்துவமனையில் படுத்திருப்போம். மழை பெய்துவிட்டால் எங்கே பள்ளம் இருக்கிறது என்பதே தெரியாது. இரவு நேரம் என்றாலும் என்னதான் முகப்பு விளக்கு எரிந்தாலும் பள்ளங்களைச் சரியாகக் கவனிக்க முடிவதில்லை. அவ்வாறு சாலையில் ஒரு பள்ளம் ஏற்படும்போது தினந்தோறும் ஒரு சிலர் விழுந்து கைகால்கள் உடைந்து, ரத்தம் சிந்துகின்றனர். அடிபட்ட பிறகு மருத்துவமனைக்கு நடையாக நடந்தும் அல்லது தூக்கிச் செல்லப்பட்டும், மணிக்கணக்கில் காத்திருந்தும், கடன்வாங்கிச் செலவு செய்தும், வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இழந்தும் வாடுகின்றனர். சாலைகளை அமைப்பதற்கு ஒப்பந்ததாரர்களை அரசு நியமிக்கிறது. அதிகாரிகள் ஒப்பந்தப் பணிகளைக் கண்காணிக்கிறார்கள். அரசு ஒதுக்கீடு செய்யும் பெருந்தொகை பல படிகளைக் கடந்து வரவேண்டி இருக்கிறது. படிப்படியாகப் பணம்கரைந்து கடைசியில் கட்டுமானத்தில் சிறுதொகைதான் செலவிடப்படுவதாகச் சொல்கிறார்கள். இருபது பேர் இருக்கும் ஒருவரிசையில் ஒரு ஐஸ்கட்டியை முதலில் இருப்பவரிடம் கொடுத்து அடுத்தடுத்து அதை கைமாற்றச் சொன்னால், அந்த ஐஸ்கட்டி கடைசி நபரிடம் வரும்போது ஒருசொட்டு நீராக மாறி இருக்கும். திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் பணமும் இப்படித்தான் கடைசியில் சொட்டு நீராகிவிடுகிறதோ? அதனாலோ என்னவோ சாலைகள் தரமானதாக இருப்பதில்லை. சில நாட்களிலேயே பல்லாங்குழிகளாகி விடுகின்றன. ஒரு மழைக்குத் தாங்கவில்லை நம் சாலைகள் என்றால் யாரிடத்தில் குறை? இதற்கென்ன தீர்வு என்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். ஐநூறு ரூபாய்க்கு வாங்குகிற ஒருபொருளுக்கு அந்நிறுவனம் ஓராண்டோ இரண்டாண்டோ உத்தரவாதம் தருகிறது. உத்தரவாதம் உள்ள பொருட்களைத்தான் நாம் வாங்குகிறோம். லட்சக் கணக்கில் செலவு செய்து போடப்படும் சாலைகளின் தரத்துக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதத்தை ஒப்பந்ததாரர்கள் தரவேண்டும். அந்த மூன்றாண்டுகளுக்கும் அந்தச் சாலையின் பராமரிப்பை ஒப்பந்ததாரர்களே ஏற்க வேண்டும். சாலைத் தரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார் அவர். சாலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி உண்டு என்றாலும் பொதுமக்களுக்கும் அக்கறை வேண்டும். கல்யாணங்கள், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுகிற போது புதிதாகப் போடப்பட்ட சாலைகளில்கூடக் குழிகள் தோண்டி வரவேற்பு வளைவுகள் வைக்கிறார்கள். கட்சிக்கொடிகள் நடுகிறார்கள். சாலைகளைச் சேதம் செய்கிறார்கள். விழா முடிந்ததும் அந்தப் பள்ளங்களை மூடவும் செய்யாமல் கழிகளையும் துணிகளையும் பிரித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அந்தப் பள்ளங்கள் நாளடைவில் பெரும்பள்ளங்களாக வளர்ச்சி அடைகின்றன. அவற்றால் ஏற்படும் விபத்துகளும் ஏராளம். அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சாலைகளில் பள்ளங்கள் தோண்டிப் பணிசெய்கிறார்கள். பலநாட்கள் மூடாமலே இருக்கிறார்கள். பின்னர் பள்ளங்களை மேலோட்டமாக மூடிவிட்டுப் போய்விடுகிறார்கள். அவை அடுத்தடுத்த நாட்களில் மரணக்குழிகளாக மாறி அச்சுறுத்துகின்றன. சிறுபள்ளம்கூடப் பெருவிபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றன. சாலையில் பள்ளம் படுகுழிகள் ஒரு பக்கம் என்றால் ஆக்கிரமிப்புகள் மறுபுறம். சாலையோரம் கல்கட்டடத்தில் கடைவைத்திருப்பவர், வெயிலை மறைக்கக் கடையின் முன்னால் ஆறடி நீளத்துக்கு தகரப்பந்தல் அல்லது பிளாஸ்டிக் பந்தல் போட்டிருப்பார்கள். அதற்கடுத்து கொஞ்ச தூரத்தில் இருபக்க விளம்பரப் பலகையை நிற்கவைத்து இருப்பார்கள் எண்பதடி சாலைகள் இருபதடியாகக் குறுகிப்போகும். இப்படிச் சாலை குறுகி விடுவதாலும் வாகனப் பெருக்கத்தாலும் சாலைவிதிகளை மதிக்காததாலும் விபத்துகள் நடந்துவிடுகின்றன. அகலமான தரமான மழை நீர் தேங்காத சாலைகள் அமைக்க வேண்டும். அதிகப் போக்குவரத்துப் பகுதிகளில் சாலைப்பிரிப்பு மதில்கள் நிறுவ வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் நடைபாதைகள் இருக்க வேண்டும். சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் அகற்ற வேண்டும் சாலைகளில் பள்ளம் ஏற்படும்போது உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்து விபத்தைத் தடுக்கச் சில சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் சாலைவிதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.கோ.மன்றவாணன், கடலூர்

No comments:

Popular Posts