Monday 19 November 2018

வளமான வாய்ப்புகள் கொண்ட வேளாண் வணிகவியல் துறை

உலகின் மிகப்பழமையான தொழில் வேளாண்மை. அதனால்தான் உழவின்றி உலகம் இல்லை என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பயிர் விளைச்சல் பற்றி படிப்பது மட்டும் வேளாண் கல்வியல்ல. வேளாண் துறையில் பல்வேறு வாய்ப்புமிக்க படிப்புகள் உள்ளன. அவற்றில் வேளாண் வணிகவியல் படிப்பும் ஒன்று. இதில் குறுகியகால டிப்ளமோ பயிற்சிகள் முதல் முதுநிலை படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் அடங்கும். இதைப் படிப்பதால் பிரகாசமான வேலைவாய்ப்புகளும் உண்டு. அது பற்றி சிறிது அறிவோம்...

வேளாண்மை என்பது பயிர்விளைச்சல் மட்டும் ஆகாது. வேளாண் பொருட்கள் எல்லா இடத்திலும் விளைவதில்லை. குறிப்பிட்ட இடத்தில் விளையும் பொருட்களை பதப்படுத்தி சேமித்தல், மதிப்புகூட்டி மாற்றுதல், வேறு இடங்களுக்கு வினியோகித்தல், விற்பனை செய்தல் என வேளாண் வணிகம் விவசாயத்தைப்போல பரந்து விரிந்த துறையாக விளங்குகிறது. அதுவே வணிக உலகின் மையமாகவும் திகழ்கிறது. வேளாண் பொருட்களை மூலதனமாக வைத்து செய்யப்படும் வேளாண் தொழில்கள் ஏராளம்.

விவசாயம் செய்தல் தொடங்கி, வேளாண்மைக்கு அவசியமான இடுபொருட்களான விதைகள், உரங்கள் உற்பத்தி செய்தல், விளைபொருட்களை சேகரித்து பதப்படுத்துதல், பொட்டலமிடுதல், இடம் பெயர்த்து அனுப்புதல், விற்பனை செய்தல் என பல நிலைகளைக் கொண்டது வேளாண் வணிகம்.

இதில் ஒவ்வொரு நிலையும் தனித்தனி தொழில்களாக விளங்குகிறது. விதைகளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உரங்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியே செயல்படுகின்றன. அவற்றை வாங்கி விற்கும் சிறுவணிகர்கள், வியாபாரிகள் உள்ளனர். அவற்றை பயன்படுத்தி பயிர்விளைச்சல் செய்யும் விவசாயிகள், விவாசய தொழிலாளர்கள் உள்ளனர். பயிர் விளைச்சல் முதல் அறுவடை வரை பல நிலைகளும், பல்வேறு சிறுதொழில்களும் உள்ளன. நிலங்களை சீர்திருத்தி வழங்குபவர்கள், பண்ணை பராமரிப்பதும் தனித் தொழிலாக விளங்குகிறது.

உரம் தயாரிப்புத் தொழிலானது முக்கியமானதாகவும், அவசியமானதாகவும், அதிகதேவை கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது. உரங்கள் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு, விளைச்சலைப் பெருக்கி, மனிதகுலத்துக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியதாகவும், உணவுத் தேவையை ஈடு செய்வதாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் இயற்கை உரங்களின் தேவையும் பெருகி உள்ளது. இது அதிகமான உர உற்பத்தியாளர்களை, தொழில்முனைவோர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எனவே இதை தொழிலாக செய்ய முன் வருபவர்களுக்கும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

அதுபோல விளை பொருட்களை மதிப்பு கூட்டி வேறு பொருட்களாக மாற்றி விற்பது காலம்காலமாக மிகச்சிறந்த தொழிலாக உள்ளது. அதிலும் உணவுப் பொருட்களுக்கு அதிக தேவையும், எதிர்பார்ப்பும் உள்ளது. அரிசியை ‘ஹாப் பாயில்டு’ அரிசியாக மாற்றுவது, மாவாக திரிப்பது, கோதுமையை ரவையாக மாற்றுவது, பழங்களை உலர வைத்து பொட்டலமிடுவது, விளை பொருட்களை உணவுப்பொருட்களாக தயாரித்து விற்பது என மதிப்புக்கூட்டுத் துறையின் எல்லை நீண்டு கொண்டே செல்லும்.

எல்லா காலத்திலும் தேவை மிக்க, அதே நேரத்தில் எல்லா நேரத்திலும் விளையாத வேளாண் பொருட்களை பதப்படுத்தி, விற்பனை செய்வதும் மிகப்பெரிய தொழில்துறையாக விளங்குகிறது. குறிப்பாக பழங்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் மிகச்சிறந்த தொழிலாக விளங்குகிறது. இதுபோல அன்றாட காய்கறிகளின் தேவையும் அதிகமாகவே உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, அதிகமான மக்கள் தொகை, அவர்களின் தேவை வேளாண் தொழில்களுக்கு ஏற்ற சூழலைத் தருகிறது. இந்தியர்கள் தங்கள் வருவாயில் சுமார் 50 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே வருவாய் மிக்க தொழிலாகவும் வேளாண் வணிகம் அமையும்.

இவை பற்றிய விரிவான புரிதலை ஏற்படுத்தக்கூடியது வேளாண் வணிகவியல் படிப்பு. பிளஸ்-2 படிப்பில் அறிவியல் பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் வேளாண் வணிகவியல் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இது 4 ஆண்டு கால படிப்பாகும். முதுநிலை படிப்பும், முதுநிலை டிப்ளமோ படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ளலாம். உரம் தயாரிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் தொழிற்பயிற்சிகள் குறுகிய கால பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது.

படித்து முடிப்பவர்கள் அலுவலக உதவியாளர், வணிக மேலாளர், சந்தை ஒருங்கிணைப்பாளர், பண்ணை மேலாண்மை, பயிர் உற்பத்தியாளர், சந்தை ஆய்வாளர், தரக்கட்டுப்பாட்டாளர் என பல நிலைகளில் வேலைவாய்ப்பை பெறலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், சில்லறை வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுயமாக தொழில்வாய்ப்பும் கொண்டது.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த படிப்பை பயிலலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் (agritech.tnau.ac.in) கேட்டுப் பெறலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts