Follow by Email

Wednesday, 17 October 2018

காந்தியப் பொருளியல் இன்றைக்கு ஏற்றதா?

காந்தியப் பொருளியல் இன்றைக்கு ஏற்றதா? டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றிற்கேற்ப பொருளாதார, சமுதாய, அரசியல், சமய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகள் வடிவமைத்து கொடுத்த காந்திய கருத்துகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு கடந்த 71 ஆண்டுகளில் நமது நாட்டு பொருளாதாரத்தில், வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக தொலைதொடர்பு, செய்தி இணைப்புகள், போக்குவரத்துகள், நகர வளர்ச்சி, பெருந்தொழில் பெருக்கம், வாணிப விரிவாக்கம், கல்வி கூடங்களின் பரவல், மருத்துவமனைகளின் நெருக்கம், சேவை பணிகளின் ஆக்கம், பொழுதுபோக்குகளின் உச்சம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் என்றால், இதன் மறுபக்கம் நிழல் படர்ந்ததாக இருக்கிறது. இன்னும் வறுமை ஒழியவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தீரவில்லை. நமது வாழ்க்கை முறையில் எல்லோரும் கடன்காரர்களாக இருக்கின்றனர். மருத்துவ, கல்வி வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. லஞ்சம், ஊழல் நாளும் வளர்கின்றன. கருப்பு பணம் பேயாட்சி செய்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் நடுங்க செய்கிறது. இந்த இரண்டுங்கெட்டான் சூழலில் நாம் முட்டு சந்தில் நிற்பவர்களை போல் இருக்கிறோம். மேற்கத்திய வளர்ச்சி முறை, வாழ்க்கை வழி நமக்கு கை கொடுக்கவில்லை. காந்தியத்தை திரும்பி பார்க்கும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காந்தியடிகள் இந்திய பொருளாதாரம் அடிப்படையில் கிராம பொருளாதாரமாக இருப்பதனை சுட்டிக்காட்டினார். “கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும். இந்திய வளர்ச்சி கிராமங்களில் இருக்கிறது” என்றார்.ஒரு சமயம் நமது நாட்டில் 85 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். இப்போது சுமார் 70 சதவீதமாக குறைந்துள்ளது. கிராம பொருளாதாரம், வேளாண்மை, கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, பழத்தோட்டங்கள், தோப்புகள் என இயற்கை சார்ந்தது. கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ததோடு நகரங்களுக்கு வேண்டியவற்றையும் உற்பத்தி செய்து அளித்தனர். இன்று நகரங்கள், பெருந் தொழில்கள் பெருக்கத்தில் கிராமங்கள் சீர்குலைந்து விட்டன. பரவல் முறை, தற்சார்பு, தன்னிறைவு என்று அமைந்திருந்த பொருளாதார வாழ்க்கை முறை தொலைந்துவிட்டது. நகரங்கள் நரகங்களாகி கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் கிராம பொருளாதாரத்தை மறுபடியும் கட்டமைக்க வேண்டும். இன்று நிலம், உழுபவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கைமாறி விட்டது. உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். உழவு, கால்நடை வளர்ச்சி, பால் பண்ணைகள் அமைத்தல், பழத்தோட்டங்கள் அமைத்தல், சிறு தொழில்களை வளர்த்தல் என திட்டமிட்டு கிராம பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். விவசாயிகளை கடன் தொல்லையில் இருந்து மீட்டு அரசு நிதி வசதியை வழங்க வேண்டும். மழைநீரை சேமித்து, பெரிய ஆறுகளை இணைத்தால் நீர் வளம் பெருகும், வேளாண்மை செழிக்கும், கிராமங்கள் வாழும். நாம் இன்று உடல் உழைப்பை புறக்கணிக்கும் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதன் விளைவை வீட்டிலே தொடங்கி வெளியில் எங்கெங்கும் காண்கின்றோம்.காந்தியம் உடல் உழைப்பிற்கு முதலிடம் தருகிறது. காந்திய பொருளியலறிஞரான டாக்டர் ஜே.சி.குமரப்பா, உழைப்பை மனிதனின் தனிச்சிறப்பாக கூறினார். மனிதனின் ஆளுமை வளர்ச்சிக்கும், பட்டறிவின் சிறப்புக்கும், உயிரோட்டமாக இருப்பது உழைப்புதான். எடுத்துக்காட்டு அம்மாவின் உழைப்பு, வீட்டில் பெண்கள் உழைப்பு, பெற்றோர் உழைப்பு.உழைப்பு உடல்நலனை காக்கும், பொருளாதாரத்தை வளர்க்கும். இன்று உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஊதியம் தேட முயற்சிக்கின்றோம். நடப்பதை கூட குறைத்து கொண்டோம். சைக்கிள் ஓட்ட விரும்புவதில்லை. பெட்ரோலில் ஓடும் இருசக்கர வாகனம், கார் வேண்டும். கூப்பிடும் தூரத்திற்கு கூட வண்டியில் தான் போக வேண்டும். டீசல், பெட்ரோல் வேண்டும். நமது நாட்டில் குறைவாகவே எரிசக்தி உற்பத்தி உள்ளது. எண்ணெயில் முற்றுரிமை பெற்ற நாடுகள் உலக பொருளாதாரத்தை ஆட்டி படைக்கிறது. எண்ணெய் விலை உச்சம் தொடுகிறது. போக்குவரத்தில் கால்நடைகளை பயன்படுத்துவது ஒரு நிலை. நமது பொருளாதாரத்தில் கட்டை வண்டிகளுக்கும் இடமுண்டு. நம்மிடம் இருக்கும் ஏராளமான மனித சக்தியை மறந்துவிடக்கூடாது. எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற வாழ்வியல் முறையை காந்தியம் கற்பிக்கிறது. எளிய வாழ்க்கை என்பது ஏழ்மை வாழ்க்கை அல்ல. எல்லோருக்கும் வாழ்வதற்கு தேவையானவை கிடைக்க வேண்டும். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்ப அறிவு வளர்ச்சிக்கும், திறமை மேம்பாட்டுக்கும் வேண்டியவற்றை பெற வேண்டும். எச்சமாக வைத்திருப்பது திருட்டு போன்றது. ‘இயற்கை மனிதனின் தேவைக்கு வழங்கும், பேராசைக்கு கொடுக்காது’ என்று காந்தியடிகள் கூறியதை எண்ணி பார்க்க வேண்டும். இன்று இயற்கையை அழித்து வாழ்கிறோம். அதனை கட்டி காக்க வேண்டும். காந்தியம் வலியுறுத்தும் ஒரு தலையாய கருத்து, பகிர்வு பொருளாதாரம். இதனை அறங்காவலர் தத்துவமாக உருவாக்கினார். நம்மிடம் மிகுதியாக இருப்பதை அருகில் உள்ள இல்லாதவருக்கும் ஈந்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. இந்த “ஈதல்” வாழ்வினை மேன்மையான வாழ்வியல் முறையாக காந்தியடிகளின் ஆன்மிக வாரிசு வினோபா பாவே உருவாக்கி கொடுத்தார். அவர் நடத்திய பூமிதான புரட்சி வெற்றி பெற்றிருந்தால், உலகிற்கு வழிகாட்டுபவர்களாக உயர்ந்திருப்போம். அந்த வாய்ப்பை நாம் நழுவ விட்டுவிட்டோம். காந்தியம் தனிமனித நலனையும், சமுதாய நலனையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்க முயல்கிறது. அனைவரும் நலன்தான் அதன் நோக்கம்.காந்திய பொருளாதாரம் ஒவ்வொருவரின் உரிமையை விட கடமையை வலியுறுத்துகிறது. மதுவை ஒழித்துவிட்டால், மனிதம் பிழைக்கும், வாழும். காந்தியடிகள் கொள்கையற்ற அரசியல், உழைப்பற்ற செல்வம், அறமற்ற வாணிபம், பண்பாடற்ற கல்வி, மனிதநேயமற்ற அறிவியல், மனச்சான்றற்ற மகிழ்ச்சி, தியாகமற்ற வழிபாடு ஆகிய 7 சமுதாய பாவங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயன்றார். தாய்மை பொருளாதாரம் தான் காந்திய பொருளாதாரம். தன்னலமற்ற தாயன்பை பெற்றுவிட்டால் காந்திய பொருளாதாரம் நடைமுறையில் சாத்தியமாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts