Thursday 18 October 2018

மக்களால் மறக்கப்பட்ட தீவுக்கோட்டை

மக்களால் மறக்கப்பட்ட தீவுக்கோட்டை ஆறு.அண்ணல், வரலாற்று ஆய்வாளர் தமிழ்நாட்டில் கோட்டை என்றாலே செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, திருச்சி மலைக்கோட்டை போன்றவை தான் மக்களின் நினைவுக்கு வரும். இவைகளெல்லாம் நல்ல நிலைமையில் இருக்கின்றன. ஆனால், சிதைந்து போன கோட்டைகளும், பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தீவுக்கோட்டை. இது, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் கொடியம்பாளையம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வெகு அருகிலேயே இந்த தீவு இருக்கிறது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறும் மற்ற புறங்களில் ஆழமான நீர் நிலையுடன் கூடிய மாங்குரோவ் காடுகளும் காணப்படுகின்றன. கடல் பகுதியில் இருந்து படகு மூலமாகவும் இத்தீவுக்கு வரமுடியும். சுமார், 10 கி.மீ. சுற்றளவு உடையதாக இத்தீவு காணப்படுகிறது. தீவு எங்கும் வேலி காத்தான் முள் செடிகள் நிறைந்துள்ளன. முள் காடுகளின் மத்தியில் கோவில்களின் சிதைவுகளை காணமுடிகிறது. தீவின் உட்பகுதியில் பழங்கால செங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இவை 12 முதல் 18-ம் நூற்றாண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் தயாரிக்கப்பட்டவை. உடைந்து சிதறிய பீரங்கி குண்டுகளையும் காணமுடிகிறது. கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. சுமார் , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் இத் தீவில் வாழ்ந்துள்ளனர். குடிநீர் கிடைக்காததால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டனர். இருக்கும் வீடுகளும் கேட்பாரற்று கிடக்கின்றன. தீவின் ஒரு பகுதியில் காளிக் கோவில் இருக்கிறது. அதன் அருகிலேயே பழைய செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு முதல் இரண்டரை அடி அகலம் கொண்ட சுவர்களின் இடிபாடுகள் உள்ளன. இவை தான் தீவுக் கோட்டையின் கோட்டைச் சுவர்கள். இங்கு, கோட்டை இருந்தது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஆதாரம் இந்த சுவர்கள்தான். தீவுக்கோட்டையை சுற்றி உள்ள ஊர்களுக்கு பாசன நீர் அளிக்கும் வாய்க்கால் கோட்டை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தீவுக்கோட்டைக்கு வெகு அருகிலேயே கடலும் , சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் பிச்சாவரமும் அமைந்துள்ளன. தீவுக்கோட்டை என்ற இந்த தீவு தேவிக்கோட்டை என்றும் , தீவுப்பட்டினம் என்றும் ஜலக்கோட்டை என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி.16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தீவுக்கோட்டை விளங்கியுள்ளது. தஞ்சையை ரகுநாத நாயக்கர் ஆட்சி செய்த போது தீவுக் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு சோழகன் என்பவர் ஆட்சி செய்து வந்துள்ளார். இவர், செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அடங்கிய சிற்றரசர். தீவுக்கோட்டை சோழகன் போர்த்துகீசியரை ஆதரித்துள்ளான். இவனது காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த போர்த்துகீசிய பாதிரியார்களான பிமெண்டா மற்றும் டூஜெரிக் ஆகியோர் சோழகனது குணநலன், அவனது மகனைப்பற்றிய விவரங்கள் கோட்டையின் அமைப்பு அதன் பாதுகாப்புமற்றும் முக்கியத்துவம் ஆகியவை பற்றியும் எழுதியுள்ளனர். தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவரான ராமபத்திராம்பாவால் எழுதப்பட்ட ரகுநாதப்யுதயம், யக்ஞநாராயண தீட்சதரால் எழுதப்பட்ட சாகித்ய ரத்நாகரம் ஆகிய நூல்கள் தீவுக்கோட்டையையும் அதனை ஆண்ட சோழகனையும் விவரிக்கின்றன. கி.பி. 1615-ல் நடைபெற்ற போரில் தஞ்சை ரகுநாதநாயக்கர் தீவுக்கோட்டை சோழகனை வென்றார். இதனால் தஞ்சை நாயக்கர் கைகளுக்கு தீவுக்கோட்டை சென்றது. பின்னர், சுமார் 200 ஆண்டுகளில், மராட்டியர், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் கோட்டை இருந்தது. தீவுக்கோட்டை பறிக்கப்பட்டதால், அதனை ஆண்டு வந்த சோழகனின் வாரிசுகள் பிச்சாவரத்திற்கு இடம்பெயர்ந்தனர். பார்த்தவன மஹாத்மியம் மற்றும் ராஜேந்திரபுர மஹாத்மியம் ஆகிய நூல்கள் பிச்சாவரத்தில் இருந்து ஆட்சிசெய்த சோழகன் வம்சத்தினரைப் பற்றி கூறுகின்றன. பிச்சாவரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றின் மூலம் கி.பி.1583-ல் விட்டலேசுர சோழகனார் என்ற அரசர் வாழ்ந்ததும் அவர் முன்னிலையில் அறச்செயல்கள் நடந்ததும் தெரிய வருகிறது. இவர் மீது, விட்டலேசுர சோழ சந்தமாலை பாடப்பட்டதும் பாடிய புலவருக்கு பச்சைமணிக் கங்கணம் பரிசளிக்கப்பட்டதும் திருக்கை வளம் என்ற நூல் மூலம் தெரியவருகிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சியின்போது தீவுக்கோட்டையும் பிச்சாவரமும் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்கு சென்றன. இருப்பினும், சோழகனின் வாரிசுகளுக்கு பாரம்பரிய மரியாதைகள் இருந்தன. கால வெள்ளத்தால் தீவுக்கோட்டை சிதைந்து விட்டது. பிச்சாவரம் அரண்மனை மறைந்து விட்டது. சோழகர், தஞ்சை நாயக்கர், மராட்டியர், போர்ச்சுகீசியர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட தீவுக்கோட்டை பல வரலாற்று புதையல்களை தன்னுள்ளே வைத்துள்ளது. தமிழக அரசின் தொல்லியல்துறை இந்த தீவை ஆய்வு செய்ய வேண்டும். வரலாற்று அறிஞர்களும் இத் தீவில் ஆய்வு மேற் கொண்டு, சரித்திர உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts