Follow by Email

Wednesday, 17 October 2018

வறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம்

வறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம் முனைவர் இரா. வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம். இன்று (அக்டோபர் 17-ந்தேதி) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்! வளர்ச்சி என்பது பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று இலக்கினை எட்டுவதற்குப் பல சவால்களை, தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் இரு பெரும் சவால்களாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் உள்ளன. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அந்த வகையில் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பது வறுமையாகும். உலகப் பொருளாதாரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் எழுந்து நிற்கிறது. பிரான்சைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி என்பவர் தன் இள வயது வறுமைப் போராட்டங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், ஏற்பட்ட விளைவுகளை இச்சமூகத்திற்கு உணர்த்திட 1987-ம் ஆண்டு அக்டோபர் 17-ல் பாரிஸ் நகரில் வறுமை ஒழிப்பு தினத்தைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து ஐ.நா. சபையும் 1992-ல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்பெல்லாம் உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலை தான் வறுமை என்கிறது. இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. தமிழ்ப் புலவர்கள் பலர் வானம்பாடிகளாகத் திகழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக இல்லை. வறுமையைத் தொலைக்க வள்ளல்களைத் தேடி அலைந்த புலவர்கள் ஏராளம். அறம் பாடிய அவ்வையார் கூட கொடிது கொடிது வறுமை கொடிது என உரக்கச் சொன்னார். உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தே வறுமைதான். உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் வறுமைக்கு சாதியமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் 80 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழும் நம் நாட்டில் வறுமை உயர்வதற்கான சில அடிப்படைக் காரணங்களான பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலை. புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்க இயலாமை.வளர்ச்சியின் பயன்கள் உண்மைப் பயனாளிகளைச் சென்றடையாமை. அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில் பற்றாக்குறை. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வுகள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு. பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவே தான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது. உலக நாடுகளில் பசியுடன் இருப்பவர் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. வறுமை இல்லா இந்தியா உருவாகுமானால் அதுவே உண்மையான மக்களாட்சி. எனவே வறுமை ஒழித்து வளம் பெருக்கிட சூளுரைப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts