உன்னத புகழுக்கு உறுப்பு தானம்
டாக்டர் சுதாசேஷையன்
இ ன்று(அக்டோபர் 14-ந் தேதி)உடல் உறுப்புகள்தானம் மற்றும் சிகிச்சை தினம்
உறுப்பு தானம், உடல் தானம் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன? உடலுக்குள்ளே இருக்கும் உறுப்புகள் தொடர்பானது உறுப்பு தானம். மொத்தமாக முழு உடலையும் அளிப்பது உடல் தானம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
ஆங்கிலத்தில், ‘கெடாவர் டொனேஷன்‘ அல்லது ‘கெடாவர் டிரான்ஸ்ப்ளான்ட்‘ என்ற பதங்களை, உறுப்பு தானம் தொடர்பாகப் பயன்படுத்துகிறோம். ‘கெடாவர்‘ என்னும் சொல்லுக்குச் ‘சடலம்‘ அல்லது ‘உயிரற்ற உடல்‘ என்று பொருள். இதனால், சில சமயங்களில், ‘கெடாவர் டொனேஷன்‘ என்று கூறும்போது, உறுப்பு தானத்தைக் குறிக்கிறோமா உடல் தானத்தைக் குறிக்கிறோமா என்பதில் குழப்பம் நேரக்கூடும். குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, இவை இரண்டைப் பற்றியும் விரிவாகப் புரிந்துகொள்வோமா?
தன்னுடைய உடலின் உறுப்புகளில் ஒன்றையோ, பலவற்றையோ, ஏதேனும் ஒரு உறுப்பின் பகுதியையோ ஒருவர் தானம் செய்யும் போது, அந்தச் செயல் உறுப்பு தானம் (அல்லது உறுப்புக் கொடை) என்று குறிப்பிடப்படுகிறது; அதனைச் செய்பவர் உறுப்புக் கொடையாளர் என்று அழைக்கப்படுகிறார். உறுப்புக் கொடையில் யார் ஈடுபடமுடியும்? உயிருடன் இருப்பவரும் கொடையாளர் ஆகலாம்; இறந்தவரும் கொடையாளர் ஆகலாம். உயிருடன் இருப்பவர் எப்படித் தன்னுடைய உறுப்புகளைக் கொடையாகக் கொடுக்க முடியும்? முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இரண்டும் தத்தம் முழுமையான திறனளவுக்கு எப்போதும் செயல்படுவதில்லை. அதாவது, ஒருவர் ஒரு சிறுநீரகத்துடனே தன்னுடைய வாழ்க்கையைக் குறையில்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆகவே, தன்னிடத்திலிருக்கும் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை, ஒருவர் தானமாகக் கொடுக்கலாம்.
இது உயிருடன் இருப்பவர் தானம் கொடுக்கும் வகை. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அவருடைய அண்ணன் மகள் லீலாவதி சிறுநீரக தானம் செய்தாரே நினைவிருக்கிறதா? சொல்லப் போனால், உறுப்பு தானம் என்பதன் வரலாறு, உயிருடன் இருப்பவர் ஒருவர் செய்த தானத்திலிருந்து தான் தொடங்குகிறது. ரொனால்ட் ஹெரிக் என்பவர், தன்னுடைய இரட்டைச் சகோதரரான ரிச்சர்ட் ஹெரிக் என்பவருக்குத் தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை, 1954-ம் ஆண்டு தானம் செய்தார். 1954, டிசம்பர் 23-ம் தேதி, ரொனால்டிடமிருந்து சிறுநீரகத்தை எடுத்து, ஐந்தரை மணி நேர அறுவை சிகிச்சையில் ரிச்சர்டுக்குப் பொருத்திச் சாதனை படைத்தார், அமெரிக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசப் எட்வர்ட் முர்ரே. அமெரிக்காவின் ப்ரிகாம் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையே, உறுப்பு தானம், உறுப்பு மாற்றம் ஆகியவற்றின் வரலாற்றைத் தொடங்கிவைத்தது.
1990-ம் ஆண்டு, இப்படியொரு அற்புதத்தைச் சாத்தியமாக்கியதற்காக டாக்டர் முர்ரேக்கு நோபல் பரிசும் கிட்டியது. சிறுநீரகத்தை மட்டும்தான் இவ்வாறு உயிருடன் இருப்பவர் கொடையாகத் தரமுடியுமா என்று கேட்டால் பிரதானமாகச் சிறுநீரகம் என்று சொல்லலாம். ரத்தக் கொடை கொடுப்பதைக்கூட, இந்த வகையில் சேர்க்கலாம். தவிர, கல்லீரல் திசு, கணையத் திசு, நுரையீரல் திசு போன்றவற்றையும் உயிருடன் இருப்பவர் தானமாகக் கொடுக்கமுடியும். சிறுநீரகத்தில், இரண்டு உறுப்புகளில் ஒன்று கொடுக்கப்படுகிறது. கல்லீரல், கணையம் போன்றவற்றில், உறுப்பு முழுவதும் இல்லாமல், உறுப்பின் ஒரு பகுதி, அதாவது, அதன் ஒரு பகுதித் திசு கொடுக்கப்படுகிறது.
இதேபோல், எலும்புத் திசு, எலும்பு மஜ்ஜைத் திசு, இதய வால்வுப் பகுதிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம். இத்தகைய உறுப்பு மாற்ற சிகிச்சைகளில் சில, இப்போதைய அளவில் வெளிநாடுகளில் செய்யப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இவை இந்தியாவிலும் செய்யப்படும். இறந்துவிட்ட ஒருவரின் உறுப்புகளையும் தானமாகக் கொடுக்கலாம். அவற்றை எடுத்துத் தேவைப்படுபவருக்குப் பொருத்தலாம். கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், சிறு குடல், இரைப்பை, இதயம், இதய வால்வுகள், நுரையீரல்கள், எலும்புத் திசு, தோல் பகுதிகள் போன்ற உறுப்புகளையும் திசுக்களையும் இவ்வாறு பொருத்தலாம். வெளிநாடுகளில், ஆண் விந்தகப் பகுதிகளைக்கூட இவ்வாறு பொருத்தியிருக்கிறார்கள்.
இறப்புக்குப் பின்னான உறுப்பு தானத்தில் மூளைச் சாவு என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியம் இதனை, நமக்குத் தேவையான அளவு, எளிமையாகப் புரிந்துகொள்ள முயல்வோம். ஒருவரின் இறப்புக்கு இரண்டு முக்கிய காரணிகளைக் காட்டலாம். ஒன்று, இதயச் செயல்பாடு நின்றுபோவது; இதனை ‘இதயச் சாவு‘ என்று அழைக்கலாம். இதயம் நின்றவுடன், ரத்தஓட்டம் நின்று, சுவாசமும் நின்றுவிடுகிறது. பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்லாததால், அவையும் படிப்படியாகச் செயலிழந்து இறந்துவிடுகின்றன. இன்னொரு வகையில், மூளை முழுவதுமாகச் செயலிழந்து விடுகிறது. ஆனாலும், அவருடைய நுரையீரல்களும் இதயமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். இதயமும் நுரையீரல்களும் செயல்படுவதால், ரத்த ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். பிற உறுப்புகளுக்கு ரத்தம் கிடைப்பதால், அவையும் அடிப்படை அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆயினும், மூளை முழுவதுமாகச் செயலிழந்து விடுவதால், அவரால் அதற்குமேல் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியாது. எந்த அசைவும் நகர்வும் இல்லாமல், இலையைத் தழையைக் கிள்ளிப் போட்டதுபோல் கிடப்பார். இவ்வாறு இதயமும் நுரையீரல்களும் செயல்படுவதுகூட, சில மணிநேரத்திற்கோ, சில நாட்களுக்கோதான். அதன் பின்னர், அவையும் நின்று விடும். முழுமையாக ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டால், பிற உறுப்புகள் நின்றுவிடும்; அவற்றின் திசுக்களும் சிதைந்துவிடும்.
முழுமையாக ரத்தஓட்டம் நின்று, திசுக்கள் அவற்றின் தன்மையை இழந்து, சிதைந்து போவதுதான், சாதாரணமாக நாம் ‘மரணம்‘ என்றழைப்பதாகும்.
ஆனால், மூளைச் சாவுக்கும், இதயம் நின்று திசுக்கள் சிதைந்துபோவதற்கும் இடைப்பட்ட நிலையில், ஓரளவுக்கு ரத்த ஓட்டம் இருக்கும் நிலையிலோ அல்லது செயற்கைக் கருவிகளால் ரத்த ஓட்டம் பராமரிக்கப்படுகிற நிலையிலோ, மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள், சிதைவடையாமல், ‘நல்ல நிலை‘யில் இருக்கும். எப்படியும் மூளைச் சாவடைந்தவர், சாதாரண வாழ்க்கையை வாழமுடியாது என்ற நிலையிலும், சில பல நாட்களில் அவர் மரணித்து விடுவார் என்ற நிலையிலும், அவருடைய உறுப்புகளைத் தேவைப்படும் பிறருக்குப் பொருத்துவதே உறுப்பு மாற்று சிகிச்சையின் அடிப்படையாகும். மூளை முழுவதுமாகச் செயல்படாமல் போவதே, மூளைச் சாவு ஆகும். விபத்துக்களால் தலையில் ஏற்படும் காயங்கள், மூளைச் சாவுக்கான முக்கிய காரணம். மூளைக்குச் செல்கிற ரத்தம் தடைபடுவதாலும் மூளைச் சாவு நேரலாம். மூளைச் சாவு என்பது இயற்கை மரணமல்ல. விபத்து போன்றவற்றில் மட்டுமே ஏற்படுகிறது. இயற்கை மரணமடைபவர் தானம் கொடுக்க முடியுமா? என்பது பற்றி மருத்துவ உல்கில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.இதயம் நின்று அதனால் மரணமடைந்தவரின்(அதாவது இயற்கை வகை மரணம்)திசுக்களையும் தேவைப்படுபவருக்கு எடுப்பதற்கான ஆய்வு. இறந்துவிட்ட ஒருவரின் உடலை, இறந்து ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக, அல்லது இறக்கப்போகிறார் என்று தெரிந்துவிட்ட நிலையில் உடனடியாக, செயற்கை முறையில் அவருடைய ரத்த ஓட்டத்தை நீட்டித்து, அந்த நிலையில் அவருடைய உறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றக்கூடுமா என்பது பற்றியும் ஆய்வாளர்கள் சிந்தித்து வருகிறார்கள். இப்போதிருக்கும் நிலையில், இயற்கை மரணம் அடைபவரின் முழு உடலையும் மருத்துவக் கல்விக்காகவும் மருத்துவ ஆய்விற்காகவும் தானமாகக் கொடுக்கலாம்.
மூளைச் சாவு அறிவிக்கப்பட்ட நிலையில், மூளைச் சாவு அடைந்தவரால், தன்னுடைய உறுப்புகளை எடுப்பதற்கான அனுமதியைத் தர இயலாது. ஆனால், தனக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால், தான் மூளைச் சாவு அடைந்தால் அப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய உறுப்புகளைக் கொடையாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் முன்னரே தன்னுடைய விருப்பத்தைப் பதிவு செய்து வைக்கலாம்.
மூளைச் சாவு அடைந்துவிட்ட ஒருவருடைய உறுப்புகளை எடுப்பதற்கு, அவருடைய நெருங்கிய உறவினர்கள் (பெற்றோர், மகன், மகள், மனைவி, சகோதரர்கள் போன்றோர்) அனுமதியும் சம்மதமும் வழங்கவேண்டும். உயிருடன் இருக்கும்போதே தானம் கொடுக்கும் பட்சத்தில், கொடையாளரே தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவரை முறையாகப் பரிசோதித்து, அவர் உடலளவிலும் மன அளவிலும் கொடைக்குத் தக்கவர் என்று தீர்மானித்த பின்னரே மருத்துவர்கள் அதற்கு அனுமதி வழங்குவர்.
Sunday, 14 October 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment