Wednesday 26 September 2018

இணையதளக்கடலில் பாதுகாப்புப் பயணம்

இணையதளக்கடலில் பாதுகாப்புப் பயணம் த.கதிரவன், மென்பொருள் பொறியாளர், சியாட்டில், வாஷிங்டன் மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உணவு, உடை, மற்றும் உறைவிடத்தை கூறுவார்கள். இன்று அதனுடன் இணைய தேவையும் இணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு இன்று இணையம் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. நமக்கு தேவையான எந்த தகவலையும் இணையத்தின் மூலமாக ஒரு வினாடி பொழுதில் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி இணையத்தின் மூலமாக வங்கி, மின்சாரம், வருமானவரி, பயணம் மற்றும் இதர பல சேவைகளை நம் வீட்டில் இருந்த படியே பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இணையத்தை பயன்படுத்தும்போது நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துபவர்களை போல அதனை தீய செயல்களுக்கு (ஹேக்கிங்) பயன்படுத்துபவர்களும் உள்ளனர். அவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துகொள்ள நீங்கள் பின்வரும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நாம் அன்றாட வாழ்வில் இணையத்தை பேஸ்புக், இ-மெயில், வங்கி சேவை, ரெயில் முன்பதிவு மற்றும் பல சேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். சிலர் அத்தனை இணையதளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு தவறான செயல். அதாவது, ஒருவர் உங்களின் ஒரு இணையதளத்தின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டால் அவரால் உங்கள் வங்கி கணக்கு உள்பட அனைத்து கணக்குகளையும் தன் வசப்படுத்திகொள்ள முடியும். அதனால் முடிந்தவரை உங்களின் ஒவ்வொரு இணைய சேவைக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாஸ்வேர்டு உங்கள் மனதில் பதியவேண்டுமே அன்றி டைரியிலோ அல்லது நோட்புக்கிலோ அல்ல. இப்படி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் பல பேர் தங்களின் பணம் மற்றும் சுயதகவல்களை இழந்திருக்கின்றனர். அப்படி ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்துபவராயின், இன்று முதல் வேலையாக உங்களின் அனைத்து இணைய கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள். யாரும் விரைவில் கண்டுபிடிக்க முடியாத, அதே நேரம் உங்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் இருக்கும்படி பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வங்கியில் இருந்து வரும் தகவலை போல உங்களுக்கு ஒரு இ-மெயில் வரும். அதில் காட்டும் ஒரு ‘லிங்’கை கிளிக் செய்தால் அது உங்கள் வங்கியின் வெப்சைட் பக்கத்தை போல (உங்கள் வங்கி வெப்சைட் அல்ல ) ஒரு வெப்சைட்டை திறக்கும். அங்கு நீங்கள் உங்கள் வங்கி முகவரி, பாஸ்வேர்டை கொடுத்தால் ஹேக்கர்கள், அதை திருடி உங்கள் கணக்கினுள் நுழைந்து விடுவார்கள். அதன் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும். எனவே, உங்களுக்கு வங்கியிலிருந்து இ-மெயில் அல்லது குறுந்தகவல் வந்தால் அது நம்பகமானதா? என்று சோதித்து பின்னரே நீங்கள் உங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வெப்சைட் ‘லிங்’கை இரண்டு முறை சரிபார்த்த பின்பே உங்கள் தகவல்களை அளிக்க வேண்டும். மேலும், உங்கள் கம்ப்யூட்டரில் கட்டாயம் ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் இருப்பது மிக அவசியம். வைரஸ் என்பது இணையதளம் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும் சாப்ட்வேர் ஆகும். இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து விவரங்களை உங்களுக்கு தெரியாமலேயே மற்றவர்களுக்கு அனுப்பி விடும். அது மட்டுமன்றி உங்கள் கம்ப்யூட்டரேயே செயலிழக்க வைத்து விடும் அளவுக்கு திறன் கொண்டது. ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் அந்த வைரசிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. அது மட்டுமன்றி நீங்கள் பயனற்ற வெப்சைட்டுகளை அணுகாமல் இருப்பதும் உங்களை வைரசிலிருந்து காப்பாற்றும். ஓ.டி.பி. எண் (ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு) பயன்பாட்டிலும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரை அனுப்புவார்கள். அதாவது உங்கள் பாஸ்வேர்டை தவிர நீங்கள் இந்த ஓ.டி.பி. எண்ணையும் கூடுதலாக கொடுக்க வேண்டும். ஒருவர் உங்களது பாஸ்வேர்டை தெரிந்து கொண்டாலும், அவரால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை இந்த ஓ.டி.பி. எண் இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் இந்த எண்ணை நீங்கள் யாருக்கும் பகிரக் கூடாது. உங்கள் வங்கியிலிருந்து பேசுகின்றோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை கொடுங்கள் என்றாலும் நீங்கள் அதை பகிரக்கூடாது. ஏனேனில் ஓ.டி.பி. என்பது உங்கள் பாஸ்வேர்டை போன்றது. இன்னும் பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், இந்த அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம். இணையதளம் என்பது கடல் போன்றது. அதில் பாதுகாப்போடு நீந்தினால் உங்கள் அறிவை மட்டுமன்றி உங்கள் வாழ்வையே மேம்படுத்திக்கொள்ளலாம். விழிப்போடு இருக்க தவறினால், உங்கள் வாழ்வு நடுக்கடலில் தொலைந்துபோகவும் வாய்ப்புண்டு.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts