சட்டம் இயற்றும் குற்ற கரங்கள்!
கோமல் அன்பரசன், ஊடகவியலாளர்
அழகான நாயகி, நல்ல குடும்பம், படிப்பு எல்லாம் இருக்கும். அவளோ ஊரில் அடாவடித்தனம் செய்கிற ரவுடியைக் காதலிப்பாள். இத்தகைய நாயகிகளின் மனநிலையை நம்மில் எத்தனை பேர் ஆதரிப்போம்? ‘முட்டாள்’ என்று மனசுக்குள்ளாவது திட்டுவோம் அல்லவா?
ஆனால் அந்த நாயகியின் மனநிலைதான் ஓட்டு போடும் போது இங்கே அதிகம் பேரிடம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? புள்ளி விவரங்கள் அப்படிதான் சொல்கின்றன.
இந்தியாவில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத வேட்பாளர்களைவிட அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதோடு கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது.
வேட்புமனுவில் தங்கள் மீதான வழக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் வந்ததற்குப் பிறகு நடந்த 2004 நாடாளுமன்றத்தேர்தலில் குற்றப்பின்னணி உடைய 462 பேர் போட்டியிட்டனர். 2009 தேர்தலில் இந்த எண்ணிக்கை 1,158 ஆக உயர்ந்தது. 2014 தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட 1,404 பேர் களமிறங்கி இருந்தனர்.
எத்தனை தேர்தலில் நின்றாலும் அவர்களைத் தேர்ந்து எடுப்பது நாம்தானே? குற்றக்கரை படிந்தவர்கள் எத்தனை பேர் எம்.பி. ஆகி இருக்கிறார்கள் தெரியுமா?
2004-ல் 24 சதவீதம் பேரும், 2009-ல் 30 சதவீதம் பேரும் குற்றப்பின்னணியுடன் எம்.பி. ஆகியிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 34 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது தற்போதைய எம்.பி.க்களில் 162 பேர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ‘கிரிமினல்’களின் கைகளில் இருக்கிறது.
இவர்களிலும் பாதிக்கும் அதிகமானோர் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், பணமோசடி, ஊழல் போன்ற ‘பகீர்’ வழக்குகளுடன் நமது எம்.பிகள் 16 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
இவர்கள் போக இந்தியா முழுக்க மாநில சட்டப்பேரவைகளில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 31 சதவீதம் பேர் மீதும் மானாவாரியாக வழக்குகள் உள்ளன. மொத்தம் 4 ஆயிரத்து 32 பேரில் 1,258 பேர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். நாட்டைக் காப்பாற்றவும் நம்மைப் பாதுகாக்கவும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் சட்டங்களை இயற்றுவதில் இப்படியான குற்றப்பின்னணி கொண்டவர்களே முக்கிய பங்கு வகிப்பதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? இது ஜனநாயகத்தின் வரமா? சாபமா?
இந்த வேகத்தில் மக்கள் சபைகளில் கிரிமினல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனால், வெகுவிரைவில் நம்முடைய பிரதிநிதிகள் அனைவரும் கிரிமினல்களாகவே இருப்பார்கள். இல்லையில்லை; கிரிமினல்கள் மட்டுமே எம்.பி.யாகவும் எம்.எல்.ஏ. ஆகவும் முடியும் என்ற அபாயகரமான நிலை வந்துவிடும்.
இதனைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையமும், தேசிய சட்ட ஆணையமும் மத்திய அரசுக்குச் சில பரிந்துரைகளைக் கொடுத்திருக்கின்றன. இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று இப்போது சட்டம் இருக்கிறது.
இதை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்கில் சிக்கி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துவிட்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
‘பொய்யான புகாருக்கு ஆளானவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்று சொல்லி அரசு இப்பரிந்துரையைக் கிடப்பில் போட்டுவிட்டது. கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையாவது இந்த வரம்புக்குள் கொண்டுவந்து தேர்தல் களத்தில் இருந்து தள்ளி வைப்பது அவசியம்.
குற்றப்பின்னணி இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்ற புதிய யோசனையையும் தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கிறது. இது போன்ற அதிரடியான சட்டங்கள் வரும் போதுதான் கட்சிகளும் கிரிமினல்களை வேட்பாளராக்குவதற்குப் பயப்படும்.
அரசியல் கிரிமினல் மயமாவதைத் தடுக்க உடனடியாக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற தவிப்பு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளிடம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்தே வருகிறது. ஆனால் அரசியல்வாதிகள் அதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. கீழ் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு, பதவியில் நீடிக்க வகை செய்த சட்டத்தின் ஓட்டை அடைக்கப்பட்டதைப் போல கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுக்கவும் விதிகளைக் கடுமையாக்குவது காலத்தின் கட்டாயம்.
அதுபோலவே தேர்தல் என்பது பணத்தை முதலீடு செய்யும் பெரும் சூதாட்டமாக மாறி நிற்பதும் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு அதிமுக்கிய காரணம். கொள்ளையடிப்பவர்களும், தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களுமே தேர்தல் செலவீனங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை மாறவேண்டும்.
ஒரு வேட்பாளருக்கு இவ்வளவு என பணம் ஒதுக்கி அரசே செலவு செய்யலாம். ஒரு நாள் செலவுக்குக் கூட தாங்காது என பச்சைக் குழந்தைக்கும் தெரிந்த தொகையை வேட்பாளருக்கான மொத்தச்செலவு வரம்பாக நிர்ணயிப்பது போன்ற கேலிக்கூத்துகளைத் தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும். தேர்தல் செலவீனம் தொடர்பாக வெளிப்படையான தன்மையை உருவாக்கினால் மட்டுமே அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் குறையும்.
சட்டங்களைத் தாண்டி யதார்த்த கள சூழலை, நம்முடைய மனநிலையை மாற்றவேண்டிய தார்மீக கடமை மக்களாகிய நமக்கும் இருக்கிறது. ‘ராபின் ஹூட்’ போல கொள்ளையடித்தும் கொடூரங்களை நிகழ்த்தியும் மக்களில் ஒரு பிரிவினருக்கு நல்லது செய்வதைப் போன்று தன்னை அடையாளப்படுத்தும் கிரிமினல்களை நாம் கொண்டாடக்கூடாது. இல்லாவிட்டால் ரவுடிகளை விரும்பும் தமிழ்ப்படங்களின் மூளை மழுங்கிய நாயகிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளில் மூன்றில் ஒருவர் கிரிமினலாக இருக்கும் போதே விழித்துக்கொள்ளாவிட்டால், 55 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட உலகின் ஆகப்பெரிய ஜனநாயக தேசம் என்ற பெருமைக்குப் பங்கம் வந்துவிடும். இனியும் குற்ற கைகளை சட்டம் இயற்ற விடலாமா?
Monday, 3 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment