Sunday 5 August 2018

உலகை உலுக்கிய உன்னத அழகி

உலகை உலுக்கிய உன்னத அழகி மர்லின் மன்றோ எழுத்தாளர் ப.வெற்றிச்செல்வன் நாளை (ஆகஸ்டு5-ந் தேதி) மர்லின் மன்றோ நினைவு தினம். தங்கநிற முடி, அழகிய நடை, பிரத்யேக உடை, புன்னகை பூக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண்கள்... தொடர்ச்சியாக 15 ஆண்டுகாலம் வயது வித்தியாசமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை மயக்கத்தில் வைத்திருந்தவர் மர்லின் மன்றோ. இவருடைய இயற்பெயர் ‘நார்மா ஜீன் மான்டென்ஸன்’. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 1926-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி தேதி பிறந்தவர். நார்மாவின் தாயார் கிளாடியஸ். இவர் திரைத்துறை சார்ந்த தொழிலான படச்சுருளை வெட்டும் வேலை செய்து வந்தார். நடிப்பிலும் ஆர்வம் இருந்தது. அதனால் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துபவர். இதைப் பார்த்தே வளர்ந்த நார்மாவிற்கு இயல்பாகவே ஒப்பனை, புகைப்படம் எடுத்துக் கொள்வது, கண்ணாடி முன் நின்று விதவிதமாக போஸ் கொடுப்பது என்பது கைவந்த கலையாகி இருந்தது. தாய் கிளாடியஸ் மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தாள் நார்மா. இதையறிந்த கிளாடியசின் தோழி கிரேஸ் காப்பகத்தில் இருந்து அவரை அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் தங்க வைத்தாள். ஆனால் அவளுடைய கணவனாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டாள் நார்மா. பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க 16 வயதிலேயே ஜேம்ஸ் டோகார்டியை மணக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. கணவன் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தான். இவளும் அமெரிக்க ரேடியோ விமானத்தில் வேலைக்கு சேர்ந்தாள். யுத்தங்களை பற்றிய ஆவணப்படத் தொகுப்பிற்காக படம் எடுக்க வந்த டேவிட் கானோவர் நார்மாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவளை புகைப்படங்களாக எடுத்து குவித்தார். அவளுக்குள் இருந்த நடிப்பு ஆசை பற்றிக்கொள்ள விதவிதமாக போஸ் கொடுத்தாள். குறுகிய காலத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் அவள் புகைப்படம் வெளிவந்தது. இது அவளுடைய கணவருக்கு பிடிக்கவில்லை. விவகாரம் விவாகரத்தில் முடிந்தது. இதன்பின் கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற பிரபல கம்பெனிகளின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தாள் நார்மா. பெரும்பாலும் நகைச்சுவை வேடங்கள்தான். நார்மாவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக பாக்ஸ் கம்பெனியின் முக்கிய புள்ளியான பென் லியோன் என்பவர், இறுதி முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த டார்ரில்சன் மூலமாக ஒப்பந்தம் செய்ய வைத்தார். நார்மா என்ற பெயரை மாற்றி மர்லின் மில்லர் என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. நார்மாவோ, மில்லருக்கு பதில் தன்னுடைய பாட்டியின் பெயரான மன்றோ என்பதை சேர்த்துக்கொள்ளலாம் என்றார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அன்று முதல் மர்லின் மன்றோவானார், நார்மா. உலகமே அந்த பெயரை உச்சரிக்கப்போகிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. ‘ஆல் அபவுட் ஈவ்’ படம் ஒரு அடையாளத்தை தந்தபோதும், 1953-ம் ஆண்டு மன்றோவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்தது. ‘ஜென்டில்மேன் ப்ராபர் பிளோன்ட்ஸ்’, ‘நயாகரா’ ‘ஹெள டு மேரி எ மில்லியனர்’ இந்த மூன்று படங்கள் வசூலில் சக்கை போடு போட்டன. பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு மன்றோவின் செய்திகளுக்கு முன்னுரிமை தந்தன. வீட்டிற்கு வெளியே உலகம் இவரை ஆராதித்தது. உண்மையில் மன்றோ அன்பிற்கு ஏங்கினார். அந்த நேரத்தில் ஜோ டிமாக்கியா என்ற பேஸ்பால் பிளேயருடன் நட்பு கிடைக்க காதலாகி திருமணத்தில் முடிந்தது. சராசரி மனைவியாக தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த கணவனுக்கு மன்றோவின் வானளாவிய புகழ் பொறாமை கொள்ளச் செய்தது. நடிப்பிற்கு முழுக்குப் போடச் சொன்னார். மன்றோவே நினைத்தாலும் கைவிட முடியாத உயரத்திற்கு அவர் சென்று விட்டார். சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணமும் விவாகரத்தானது. ‘செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் மன்றோவின் ஆடை பறப்பது போன்ற ஒரு ஷாட் இடம்பெற்றது. படம் வெளியானப் பிறகு அந்த ஆடை பறக்கும் புகைப்படம் இல்லாத இளைஞர்கள் அறைகளே இல்லை என்றானது. மன்றோ என்றால் இன்றும் மனதில் நிற்பது அந்த உலகப்புகழ் பெற்ற புகைப்படம்தான். ஆடை பறக்கும் ‘ஷாட்’ சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டது. இரவு 1 மணிக்கு எடுக்கப்பட்ட அந்த காட்சி நிறைவுபெற மூன்று மணி நேரம் ஆனதாக அந்த படத்தின் புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த ஆடை 2011-ம் ஆண்டு 4.6 பில்லியன் டாலருக்கு விலை போனது. அந்த படத்தை மாடலாக வைத்து 26 அடி உயரம், 15 டன் எடை கொண்ட சிலையை சிற்பி செவார்ட் ஜான்சன் வடிவமைத்தார். அது மன்றோவின் பிறந்த ஊர் அருகே நிறுவப்பட்டது. தன்னுடைய வெற்றிகளை பகிர்ந்து கொள்ள காப்பகத்தில் இருக்கும் தாயிடம் சென்றார். எதை தான் அடைய வேண்டுமென்று நினைத்தாரோ அதை தன் மகள் அடைந்து விட்டாள் என்று துள்ளி குதிக்க வேண்டிய தாய்க்கு நினைவு முழுவதுமாய் தப்பியிருந்தது. தன்னுடைய புகழை கொண்டாட ஒருவருமே இல்லை என்று கண்ணீர் சிந்தினாள் மன்றோ. ஆர்தர் மில்லர் என்ற கதாசிரியருடன் மூன்றாவது திருமணம். அதுவும் சில ஆண்டுகளே நீடித்தது. மன்றோவின் கடைசிப் படமான ‘தி மிஸ்பிட்ஸ்’ படத்தின் கதையை எழுதியவர் இவர்தான். 15 ஆண்டுகளில் 30 படங்கள், அமெரிக்க திரைப்பட கழகத்தினால் அனைத்து காலத்திற்குமான சிறந்த நடிகை விருது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ‘மிஸ் சீஸ் கேக்’ பட்டம் என்று புகழின் உச்சத்தை அடைந்தார் மன்றோ. நவீன யுகத்தின் கிளியோபட்ராவாக தான் கொண்டாடப்படுவதை உணர்ந்த மன்றோ, அந்த பாத்திரத்தில் தான் நடித்துவிட வேண்டும் என விரும்பினார். பாக்ஸ் நிறுவனம் கிளியோட்ரா படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்தது. தனக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். கடந்த காலங்களில் மன்றோவின் பல குளறுபடிகளை மனதில் கொண்டு எலிசபெத் டெய்லரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து மன்றோவிற்கு அதிர்ச்சியளித்தது பாக்ஸ் நிறுவனம். உலகம் முழுவதும் கனவு கன்னியாக வலம் வந்தவரின் கனவு சிதைந்து போனது. தூக்கமின்மை, மனச்சோர்வு, குடிப்பழக்கம், நினைவாற்றல் குறைவு, மனப்பிறழ்வு என்று தவித்தவருக்கு ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தன்னுடைய 36-வது வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இவருடைய மறைவுக்குப் பிறகு பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்கு தெரிந்து, அவர் கென்னடியிடம் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. மன்றோவின் இறப்பிற்கு பிறகு அவரது கல்லறை அருகே தன்னுடைய சமாதி இருக்க வேண்டுமென்று பலர் போட்டியிட்டனர். அதில் வெற்றி பெற்றவர் பிளேபாய் பத்திரிகையின் அதிபர் ஹுக் ஹெப்னர். அந்த இடத்தை 75 ஆயிரம் டாலருக்கு வாங்கினார். தற்போது அந்த இடத்தில்தான் அவரது கல்லறையும் உள்ளது. உலகம் மன்றோவின் அந்தரங்கம் சார்ந்த எதையோ தேடிக்கொண்டே இருந்தது. ஆனால் அவரோ அன்பான வார்த்தைக்கு, ஆறுதலுக்கு, ரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கு, சோர்ந்தபடி அமரும்போது மடி தந்து முடிகோத ஒரு சராசரி தாயன்பில் ஒரு ஆணையோ, பெண்ணையோ தேடினார். கடைசிவரை வாய்க்கவேயில்லை. “நான் தேவதை இல்லை; ராட்சசியும் இல்லை. பாவம் செய்திருக்கிறேன்; துரோகம் இழைக்கவில்லை. பரந்த பிரபஞ்சத்தில் அப்பழுக்கற்ற அன்பைத் தேடிய ஒரு எளிய பெண் நான்”. உலகை உலுக்கிய அந்த உன்னத அழகி மன்றோ உலகத்திற்கு சொன்னது இதுதான்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts