கலைஞரால் உயிர்பெற்ற கண்ணகி
பூம்புகார் படத்தில் கண்ணகி வேடத்தில் நடிகை விஜயகுமாரி.
நடிகை விஜயகுமாரி
சினிமாத் துறைக்கு சம்பந்தமில்லாத குடும்பத்தில் இருந்து, சினிமாவிற்கு வந்தவள் நான். என்னுடைய முதல் படம் ‘குலதெய்வம்’.
அப்போது எனக்கு 13 வயது. அந்தப் படத்தில் என்னைத் தேர்வு செய்வதற்காக, எனக்கு கொடுக்கப்பட்ட வசனம், கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பராசக்தி’ பட வசனம்.
அதில் வரும் ‘ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்ற வசனத்தை நான் உச்சரித்ததைப் பார்த்துதான், ‘குலதெய்வம்’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள்.
கலைஞரின் அந்த வசனம் தான் எனக்கு சினிமா வாய்ப்பையும், வாழ்க்கையையும் ஏற்படுத்தித் தந்தது. ஆம்.. ‘குலதெய்வம்’ படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அந்தப் படத்தில் ஏற்பட்ட பந்தம் தான், பல படங்களில் தொடர்ந்து எங்களை மண வாழ்க்கையில் இணைத்தது.
என் வாழ்க்கையில் நான் முதல் பரிசைப் பெற்றதும், கலைஞரின் கரங்களால் தான். ‘குலதெய்வம்’ படத்தின் நூறாவது நாள் விழா மதுரையில் நடைபெற்றது. அதில் தலைமை தாங்க வந்திருந்த கலைஞரிடம் இருந்து வெள்ளி குத்துவிளக்கைப் பரிசாகப் பெற்றேன்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், என்னை தமிழக மக்களின் நெஞ்சத்தில் குடியமர்த்தியது, கலைஞரின் வசனத்தில் உருவான ‘பூம்புகார்’ திரைப்படம் தான்.
இந்தப் படத்தில் கண்ணகியாக நடிக்க என்னை எப்படி தேர்வு செய்தார்கள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் என் நடிப்பை பாராட்டிய நேரங்களில், நான் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறேன் என்பதைவிடவும், கலைஞரின் வசனத்திற்கு சரியாக உயிர் கொடுத்திருக்கிறேன் என்றே கருதுகிறேன்.
என்னுடைய வீட்டில் இன்றுவரை ‘நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் வரும் புகைப்படமும், ‘பூம்புகார்’ படத்தில் கண்ணகியாக கையில் சிலம்புடன் நிற்கும் புகைப்படமும் மட்டும் தான் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. என்னுடைய வேறு எந்த படங்களும் வீட்டை அலங்கரித்ததில்லை.
அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கலைஞரிடம் அண்ணா , என் வீட்டில் கண்ணகி தோற்றத்தில் இருந்த என்னுடைய புகைப்படத்தைக் காட்டி, ‘கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் இதே போன்றதொரு சிலையை வைக்க வேண்டும்’ என்று கூறினார். அண்ணா சொன்ன அந்த வார்த்தையைத் தான், கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றினார். மெரினாவில் நிற்கும் அந்த சிலையைப் பார்க்கும் போதெல்லாம், அதில் என்னையே நான் பார்க்கிறேன்.
ஸ்டாலின் இல்லமான அன்பகத்தில் கூட ஒரு கண்ணகி சிலை இருக்கிறது. அந்த சிலைக்கு ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நான் ஒரு மாலையை அணிவித்து விட்டு வருவேன். அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கலைஞர் தலைமையில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது சிலப்பதிகாரத்தைப் பற்றிய உரை நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் போக முடியவில்லை. அதனால் வெள்ளியால் ஆன சிலம்பு ஒன்றை அங்கு அனுப்பியிருந்தேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரது இல்லத்திற்கு சென்றேன். கலைஞரைப் பற்றி இலக்கண நடையில் நான் எழுதிய கவிதையை, பிரேம் செய்து எடுத்துச் சென்றிருந்தேன். அதை வாங்கி பார்ப்பாரா?.. ஒரு ஓரமாக போட்டு விடுவாரா? என்ற பதைபதைப்பு எனக்குள் இருந்தது.
ஆனால் ‘எனக்கே கவிதையா?’ என்று அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு அதைப் பெற்று, ஒரு வரி விடாமல் படித்தவர், ‘தமிழ்.. தமிழ்.. தமிழ்..’ என்று மூன்று முறை சொன்னார்.
‘ஏன் ஐயா அப்படிச் சொன்னீர்கள்?’ என்று நான் கேட்டதற்கு, ‘பிறகு எப்படிச் சொல்வது?, இப்படியெல்லாம் எழுதுவதற்கு எங்கே கற்றுக்கொண்டாய்?’ என்றார்.
அப்போது கலைஞருடன் இருந்த தயாளு அம்மாளும் கூட, ‘அப்புறம் என்ன.. கண்ணகி கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக செய்தவராயிற்றே’ என்றார்.
அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது.
கலைஞரோடு ஆரம்ப காலம் தொட்டே நெருங்கிப் பழகி வந்த என்னால், இறுதி ஊர்வலத்திற்கு முன்பாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் முகத்தை, கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்த வருத்தம் எப்போதுமே இருக்கும் என்றாலும், அவருடைய முகம் எப்போதும் என் நெஞ்சில் நிறைந்தே இருக்கிறது என்பதால் மனநிறைவு கொள்கிறேன்.
அனைவரும் கலைஞர் என்னும் சூரியன் மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். சூரியன் என்பது மேற்கில் மறைந்தால், கிழக்கில் உதயமாகியே தீர வேண்டும் என்பது இயற்கை நியதி. அதே போன்றுதான், கலைஞர் என்ற சூரியன் மண்ணை விட்டு வேண்டுமானால் மறைந்திருக்கலாம். தமிழ் ஆர்வம், அரசியல் தொண்டாற்றும் ஆர்வம் உள்ள அனைவரின் உள்ளத்திலும் அந்தச் சூரியன் உதித்தபடியே இருக்கும். அது மறைய வாய்ப்பே இல்லை.
Thursday, 16 August 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment